Published:Updated:

Russo-Ukrainian War: உக்கிரமடையும் ரஷ்யா - உக்ரைன் மோதல்; அமெரிக்கா இதில் அக்கறை காட்டுவது எதற்காக?

உக்ரைன் எல்லையில் ரஷ்யா
News
உக்ரைன் எல்லையில் ரஷ்யா ( Russian Defense Ministry Press Service via AP, File )

பழைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யாவிற்கு அடுத்தபடியான இரண்டாவது சக்தி வாய்ந்த சோவியத் குடியரசாக உக்ரைன் இருந்து வருகிறது. மூலோபாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ரஷ்யாவிற்கு உக்ரைன் முக்கியமானது.

2021ம் ஆண்டு பல புதிய அரசியல் சிக்கல்களுக்கும் அடியிட்டுச் செல்கிறது. அதில் முக்கியமான ஒன்று ரஷ்யா – உக்ரைன் மோதல். உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன? அமெரிக்கா கூட இதில் அதிக அக்கறை காட்டுவதன் அரசியல் என்ன?

உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் ஒரு யுத்தத்துக்கு பூரண ஆயத்த நிலையில் உள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் மீண்டும் யுத்த பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. அதேவேளை, மறுபுறம் உக்ரைனும் திருப்பித் தாக்க தம் ராணுவத்தை தயார்படுத்தி வருகிறது. உக்ரைனிய ராணுவ உயர்மட்ட அதிகாரி ஒருவர் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் ரஷ்யா உக்ரைனைத் தாக்கி முழு அளவிலான ஓர் ஆக்கிரமிப்பை மேற்கொள்ளலாம்" என்று கூறி உள்ளார். ஆயினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உட்பட ரஷ்ய உயர் ராணுவ அதிகாரிகள் தமது எந்த நடவடிக்கையும் தற்காப்புக்குரியது மட்டுமே என்று கூறிவருகின்றனர். உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யாவை பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகளால் திருப்பித் தாக்குவோம் என்று அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

உக்ரைன் ராணுவம்
உக்ரைன் ராணுவம்
AP

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உண்மையில் என்னதான் நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது? ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் மோதலின் மையக்கரு என்னவென்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரஷ்யா – உக்ரைனின் வரலாற்றுப் பின்னணி என்ன?

உக்ரைன், ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய மூன்று அயல் நாடுகளும் இன்றைக்கு சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஐரோப்பாவின் டினீப்பர் ஆற்றின் நதிக்கரையில் பிறந்த ஒரு தாய் வயிற்றுச் சகோதரர்கள். ஆனால், காலப்போக்கில் ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் மொழி ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், மிக முக்கியமாக, அரசியல் ரீதியாகவும் பிளவுற்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டிசம்பர் 1991இல், உக்ரைன், ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய மூன்று நாடுகளும் Belovezh எனும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது அப்போதிருந்த சோவியத் யூனியனை கலைத்து, Commonwealth of Independent States (CIS) எனும் புதிய அமைப்பை உருவாக்கியது. என்னதான் USSR கலைக்கப்பட்டாலும், அந்தப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள ரஷ்யா ஆர்வமாக இருந்தது. இதற்குப் புதிதாக உருவாக்கப்பட்ட Commonwealth of Independent States (CIS)-ஐ ஒரு கருவியாகக் கையாண்டது. இந்த அரசியல் சதுரங்கத்தில் ரஷ்யாவும் பெலாரஸும் நெருங்கிய கூட்டணியாக உருவாக, ​​​​உக்ரைன் மேற்கு நோக்கித் திரும்பியது. அப்போது இருதரப்புக்கும் இடையே வெளிப்படையாக மோதல்கள் ஏதும் நிகழாமல் போனாலும் ரஷ்யா இந்த விஷயத்தில் ஒரு கண் வைத்திருந்தது. உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒருங்கிணைக்கும் நோக்கம் மேற்கு நாடுகளுக்கு இல்லாததால் இது பற்றி ரஷ்யா அந்தச் சமயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 1997இல், ரஷ்யாவும் உக்ரைனும் 'Big Treaty' என்று அழைக்கப்படும் ஒரு நட்பு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், மாஸ்கோ உக்ரைனின் அதிகாரப்பூர்வ எல்லைகளை வரையறுத்தது.

ரஷ்ய ராணுவம்
ரஷ்ய ராணுவம்

நட்பில் விழுந்த முதல் விரிசல்

இரு தரப்புக்கும் இடையே முதல் பெரிய ராஜதந்திர பிளவு 2003ல் ஏற்பட்டது. உக்ரைனின் துஸ்லா தீவுக்கு அருகிலுள்ள கெர்ச் ஜலசந்தியில் ரஷ்யா திடீரென ஓர் அணையைக் கட்டத் தொடங்கியது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட தேசிய எல்லைகளை மீண்டும் வரைவதற்கான ரஷ்யாவின் ஒரு முயற்சியாக இது உக்ரைனுக்குத் தோன்றியது. அப்போது ஏற்பட்ட முதல் விரிசல் இரு அதிபர்களும் நேருக்கு நேர் சந்தித்த பின்னரே தீர்க்கப்பட்டது. அணையின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டாலும் இரு தரப்புக்கும் இடையேயான நட்பில் விரிசல்கள் தோன்றத் தொடங்கின.

அதன்பின் வந்த உக்ரேனின் 2004 ஜனாதிபதித் தேர்தல் இந்தப் பதற்றங்களை மேலும் இரட்டிப்பாக்கியது. ரஷ்யாவிற்குச் சார்பான வேட்பாளரான விக்டர் யானுகோவிச்சிக்கு தன் முழு ஆதரவையும் மாஸ்கோ கொடுத்தது. ஆனால், உக்ரைனில் வெடித்த 'Orange Revolution' அவரைப் பதவியேற்க விடாமல் தடுத்தது. இறுதியில் மேற்கத்திய சார்பு வேட்பாளர் விக்டர் யுஷ்செங்கோ ஜனாதிபதியானார். 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் உக்ரைனுக்கான எரிவாயு ஏற்றுமதியை இரண்டு முறை துண்டித்ததன் மூலமும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதியை தடை செய்ததன் மூலமும் ரஷ்யா இதற்கு பதிலடி கொடுத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேட்டோவில் இணைய உக்ரைனைத் தூண்டிவிடுகிறதா அமெரிக்கா?

2008-ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் எதிர்ப்பையும் மீறி, உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை நேட்டோவில் இணைப்பதற்கான செயல்முறையைத் தொடங்கினார். தனக்கு ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யாத அமெரிக்காவின் மாஸ்டர் ப்ளான் இது என ரஷ்யா கருதியது. உக்ரைன் போன்ற ஒரு சிறு நாட்டை தன் வசப்படுத்துவது அமெரிக்காவின் திட்டம் இல்லை என்றாலும் சிறு மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் கதையாக உக்ரைன் ஊடாக ரஷ்யாவை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரலாம் என்பது அமெரிக்காவின் மறைமுக திட்டமாக இருக்கலாம்.

ரஷ்யர்களும் உக்ரேனியர்களும், 'ஒரு மக்கள்' என்றும், அவை 'ரஷ்ய நாகரிகத்தின்' ஒரு பகுதி என்றும் புடின் மீண்டும் மீண்டும் கூறி வந்தாலும் உக்ரேனியர்களோ அவரது கூற்றை ஏற்கவில்லை. ரஷ்யாவின் மேலாதிக்கத்தை நிராகரித்ததும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் சேருவதற்கான தமது உறுதியான விருப்பத்தை பதிவு செய்தும் உக்ரைனிய மக்கள் 2005 மற்றும் 2014இல் இரண்டு புரட்சிகளை நடத்தினர். உக்ரைன் நேட்டோவில் இணைய முயல்வது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுத்தலாக அமையும் என்பது ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆழமான நம்பிக்கை. ஒரு வகையில் உண்மையும் அதுதான். அதுபற்றி இறுதியாகப் பார்க்கலாம்.

உக்ரைன் கொடி
உக்ரைன் கொடி

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தை உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சி நிராகரித்ததைத் தொடர்ந்து நவம்பர் 2013இல் தலைநகர் கியேவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. ஒரு கட்டத்தில் மோதல் தீவிரமாகி ஜனாதிபதி யானுகோவிச் பிப்ரவரி 2014 இல் நாட்டை விட்டு வெளியேர, ரஷ்ய துருப்புக்கள் மார்ச் 2014இல் உக்ரைனின் கிரிமியன் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டன.

ரஷ்யாவின் ஆர்டிக் பிராந்திய கடல் பரப்பை வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே போக்குவாரத்துக்குப் பயன்படுத்த முடியும். ஏனைய நாள்களில் உறைபனி காரணமாக அப்பகுதி துறைமுகங்கள் யாவும் மூடப்பட்டுவிடும். அதேபோல உக்ரைன் வசமுள்ள கிரிமியன் பிராந்தியத்தின் கடல் பரப்பு ரஷ்யா வசம் இருக்கும் வரை ரஷ்யாவின் பாதுகாப்புக்குப் பெரியளவில் அச்சுறுத்தல் இல்லை என்பதும் கிரிமியன் பிராந்தியத்தை ரஷ்யா கைப்பற்ற முக்கிய காரணங்கள்.

NATO என்றால் என்ன?

அரசியல் மற்றும் ராணுவ வழிமுறைகள் மூலம் அதன் உறுப்பினர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் அமைப்பாக NATO உருவானது. நேட்டோவின் முதன்மை நோக்கம் கம்யூனிஸ்ட் நாடுகளின் அச்சுறுத்தல்களிலிருந்து உறுப்பு நாடுகளைப் பாதுகாப்பதாகும். அமெரிக்காவும் ஐரோப்பாவில் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு வழியைத் தேடியது. எனவே மீண்டும் ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பு தேசியவாதத்தின் மீள் எழுச்சியைத் தடுக்கவும், அரசியல் ஒன்றியத்தை வளர்க்கவும் தான் முயல்வதாக கூறிக்கொண்ட அமெரிக்கா, இரண்டாம் உலகப் போரின் அழிவுக்குப் பிறகு மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ராணுவப் பாதுகாப்பை ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கியது.

NATO - ரஷ்யா - உக்ரைன் பிரச்னை
NATO - ரஷ்யா - உக்ரைன் பிரச்னை

மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்த பிறகு, கம்யூனிஸ்ட் நாடுகள் வார்சா ஒப்பந்தக் கூட்டணியை (The Warsaw Treaty Organization) உருவாக்கியது. இதில் சோவியத் ஒன்றியம், பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் கிழக்கு ஜெர்மனி ஆகியவை அடங்கின. இதற்கு பதிலுக்கு, நேட்டோ 'Massive Retaliation' கொள்கையை கொண்டு வந்தது. அதாவது The Warsaw Treaty Organization-இன் உறுப்பினர்கள் NATO உறுப்பு நாடுகளைத் தாக்கினால் பதிலுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அறிவித்தது.

ஜனநாயக விழுமியங்களை ஊக்குவிப்பது, உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கவும், நம்பிக்கையை வளர்க்கவும், மோதலைத் தடுக்கவும் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை வழங்குவது போன்றன NATO-வின் அரசியல் சார்ந்த சில செயற்பாடுகளாகும். அதேபோல ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால், நிலைமையை சமாளிக்க ராணுவ பலத்தையும் அது பயன்படுத்தும்.

பலம் பொருந்திய ரஷ்யாவிற்கு ஏன் உக்ரைன் இவ்வளவு முக்கியத்துவமான ஒன்றாகிறது?

ரஷ்யா தனது மேற்கு எல்லையில் நேட்டோ பலத்துடன் கூடிய பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வருவதை விரும்பவில்லை. ஏற்கெனவே லிதுவேனியா, போலந்து, எஸ்டோனியா போன்ற ரஷ்யாவின் அண்டை நாடுகள் NATO-வில் இணைந்ததன் மூலம் அமெரிக்கா ரஷ்யாவை மிகவும் நெருங்கியது. உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளதையும் அமெரிக்காதான் உக்ரைனுக்கு உளவு பார்த்துச் சொல்லியுள்ளது. இப்படியே விட்டால் தன் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா நினைப்பதும் ஒரு விதத்தில் தவறில்லை.

பழைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யாவிற்கு அடுத்தபடியான இரண்டாவது சக்தி வாய்ந்த சோவியத் குடியரசாக உக்ரைன் இருந்து வருகிறது. மூலோபாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ரஷ்யாவிற்கு உக்ரைன் முக்கியமானது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, மேற்கு நாடுகளுடனான போட்டியில் அதிகார சமநிலையை தக்கவைத்துக் கொள்வதற்காக ரஷ்யாவுக்கு உக்ரைனை தன் வசம் வைத்திருப்பது மிக முக்கியமான ஒரு விஷயமானது. ஏனெனில் கிழக்கு ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உக்ரைன் அமைந்திருப்பது புவியியல் ரீதியாகவும் ரஷ்யாவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Evan Vucci

உக்ரேனிய மக்கள் தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியினர், பெரும்பாலும் ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள நாட்டின் கிழக்குப் பகுதியில் வசிக்கிறார்கள். அவர்கள் ரஷ்ய மொழியையே பேசுகிறார்கள். சோவியத் வீழ்ச்சிக்குப் பின் பல பால்டிக் நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்திடம் ரஷ்யா பறிகொடுத்தது. ஒரு காலத்தில் முன்னணி சக்தியாக இருந்த மொஸ்கோ இதன் காரணமாக அதன் செல்வாக்கை பால்கன் முழுவதும் கணிசமாக இழந்தது. இதுவும் உக்ரைனை மேற்கு நாடுகளுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று ரஷ்யா அடம்பிடிப்பதற்கான ஒரு காரணம்.

ஆக மொத்தத்தில், ஒரு ஜனநாயக அரசு என்ற பெயரில் மேற்கத்திய கூட்டணியை நோக்கிய உக்ரைனின் நகர்வை ரஷ்யா தனக்கான அச்சுறுத்தலாகவும், ஒரு பெரும் துரோகமாகவும் பார்க்கிறது.

உக்ரைன் மீது மேற்கு நாடுகளும் அமெரிக்காவும் அதிக அக்கறை காட்டுவாதன் உள்நோக்கம் என்ன?

ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய புள்ளி உக்ரைன். இதுவே அமெரிக்காவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உக்ரைன் மீது அதிக அக்கறை காட்டச் செய்யும் ஒரு காரணி. என்னதான் பொருளாதார ரீதியாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடும்போது ரஷ்யா சிறிது பலம் குன்றி இருந்தாலும், தொழில்நுட்பம், அணு ஆயுதம் முதல் ராணுவம் வரை ரஷ்யா நிச்சயம் ஒரு மிகப் பலம் பொருந்திய எதிரி. எனவே ரஷ்யாவை சமாளிக்க ஒரே வழி உக்ரைனை ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி வைப்பதேயாகும். சமீபத்தியை பேட்டி ஒன்றில் கூட அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், “உக்ரைன் தாக்கப்பட்டால், இதுவரை கண்டிராத மிக மோசமான தாக்குதலை ரஷ்யா எதிர்கொள்ளும்” என்று கூறியுள்ளார். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த விஷயத்தில் எவ்வளவு தீவிரமாக உள்ளன என்பதற்கு இது ஓர் உதாரணம்.

ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன?

இத்தனை சலசலப்புக்களை ஏற்படுத்திய இந்த விஷயத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்களின் சமீபத்திய வருடாந்திர செய்தி மாநாட்டில் ஜனாதிபதி புடின் பேசிய விஷயங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “ரஷ்யா உக்ரைனுடன் மோதலை விரும்பவில்லை ஆனால் மேற்கத்திய சக்திகள் ஒரு 'நிபந்தனையற்ற பாதுகாப்பை' ரஷ்யாவிற்கு வழங்க வேண்டும்" என்று கூறினார்.

அது என்ன 'நிபந்தனையற்ற பாதுகாப்பு?' ரஷ்யாவின் எல்லையிலேயே அமெரிக்கா ஏவுகணைகள் இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடு மேற்கின் வசம் உள்ளது என்றும் புடின் கூறுகிறார்.

“நாங்கள் எங்கள் ஏவுகணைகளை அமெரிக்காவின் எல்லையில் நிலை நிறுத்தவில்லை. அப்படியிருக்க அமெரிக்கா மட்டும் ஏன் தனது ஏவுகணைகளை எங்கள் எல்லைக்கு அருகில் நிலைநிறுத்துகிறது?"
என்ற புடினின் கேள்வியில் நியாயம் இல்லாமலும் இல்லை.
வருடாந்திர செய்தி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்
வருடாந்திர செய்தி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்
AP
"கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் அல்லது மெக்சிகோவிற்கும் இடையிலான எல்லைக்கு வந்து எங்கள் சொந்த ஏவுகணைகளை அங்கு நிலைநிறுத்த முடிவு செய்தால் அமெரிக்கர்கள் சும்மா இருப்பார்களா?"
என்பதும் அவர் முன்வைக்கும் முக்கியமான ஒரு கேள்வி.

1990ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில், நேட்டோ ஐரோப்பாவில் கிழக்கு நோக்கி விரிவடையாது என்று ஒப்புக்கொண்டதை மீறி, ரஷ்யாவை முட்டாளாக்கி அதன் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே போவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று கூறிய புடின், “நீங்கள் எங்களிடமிருந்து உக்ரைன் மீது படையெடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதங்களைக் கோருகிறீர்கள். உண்மையில் நீங்கள்தான் எங்களுக்கு உத்தரவாதங்களை வழங்க வேண்டும். அமெரிக்கா எங்கள் பாதுகாப்பில் மூக்கை நுழைக்காது என்ற உத்தரவாதத்தை நீங்கள் எங்களுக்கு வழங்குங்கள்" என்று முன்வைத்த கோரிக்கையும் நியாயமானதாகவே உள்ளது.

ஆனால், நேட்டோவின் முக்கியக் கொள்கைப் படி, தகுதிபெறும் எந்த நாட்டிற்கும் உறுப்பினர் உரிமை வழங்கப்படும். எனவே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு NATO உறுப்புரிமையை வழங்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை ரஷ்யாவுக்கு வழங்க முடியாது என்று மறுத்து வருகின்றன.

கடைசியாக வந்த செய்திகளின்படி ஜனாதிபதி ஜோ பைடன் டிசம்பர் 30, வியாழன் பிற்பகல், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ரஷ்யாவுடன் மேற்கொள்ள இருக்கும் ராஜதந்திர உடன்படிக்கைகள் உட்பட பல தலைப்புகளைப் பற்றி விவாதிப்பார் என்றும், இது 2022 ஜனவரி 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னோட்டமாகவும் திட்டமிடப்பட்டுள்ளது எனப்படுகிறது.

இந்தப் பிளவு மூன்றாம் உலகப்போராக வெடிக்குமா?

பொதுவாக எந்தவொரு வல்லரசும் பலம் பொருந்திய நாடுகள் தமக்கு அருகில் இருப்பதை விரும்பாது. உதாரணத்திற்கு சீனா கனடாவுடன் கூட்டணி அமைப்பதை அமெரிக்கா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளது. அதேபோல தமது எல்லைக்குள் அமெரிக்காவின் வருகையை ரஷ்யா விரும்பவில்லை. ஆக, இந்த இரண்டு நாடுகளின் அதிகாரப் போரின் இடையில் மாட்டிக்கொண்ட வெறும் பலியாடு மட்டுமே உக்ரைன்.

இது மூன்றாம் உலகப்போரை உருவாக்குமா என்றால் அதற்கு அவ்வளவு சாத்தியமில்லை என்றே கூற வேண்டும். இதுவரை உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக இல்லை, எனவே ஒரு போர் மூழும் பட்சத்தில் ஏனைய உறுப்பு நாடுகள் அதில் கலந்துகொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்
AP

அதேபோல உக்ரைனைப் பாதுகாக்க ஏனைய உலக நாடுகள் எவ்வளவு தூரம் முன்வரும் என்பதும் ஒரு மிகப்பெரிய கேள்வி. ஏனெனில் ரஷ்யா போன்ற ஒரு நாட்டை எதிர்த்துப் போரிடும் போது அணு ஆயுத அச்சுறுத்தல்கள் உற்பட விளைவுகள் மிகப் பாரதூரமாக இருக்கும். இவற்றை எதிர்கொள்ள ஏனைய நாடுகள் தயாராக உள்ளனவா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றன.

முதல் இரண்டு உலகப்போர்களும் உருவான காலகட்டத்தில் தொழில்நுட்பம் அவ்வளவாக வளர்ந்திருக்கவில்லை. எனவே ஆயுதம் தேவைப்பட்டது. ஆனால், இப்போது ஒரு போர் உருவாகும் என்றால் வெறும் தொழில்நுட்பம், உயிர் ஆயுதம் போன்றவற்றை மட்டும் வைத்தே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் ஸ்தம்பிக்க வைத்து விடலாம். அந்த விதத்தில் ரஷ்யாவோடு மோதுவது பாரிய சேதங்களை ஏற்படுத்தும். எனவே மூன்றாம் உலகப்போர் என்பது அவ்வளவாக சத்தியம் இல்லை என்றாலும், எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே உண்மை.

எது எப்படியோ, இரு பாரிய சக்திகளின் அரசியல், அதிகார மோதல்களுக்கு நடுவே சிக்குண்டு, சிதறுண்டு, சீரழியப்போவது என்னவோ அப்பாவி பொது மக்கள் மட்டுமே.
பதற்றத்தோடு பிறக்கும் 2022ல் என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.