Published:Updated:

தாலிபன்களின் கதை - 4 | தாலிபன்களின் ஆட்சி ஏன் கொடூரத்தின் உச்சமாக இருந்தது?!

தாலிபன்
தாலிபன் ( Rahmat Gul )

ஆண்கள் தாடி வளர்ப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. உள்ளங்கையை மடக்கி முஷ்டியாக்கினால் எவ்வளவு நீளம் இருக்கிறதோ, அந்த நீளத்துக்கு தாடி வளர்ப்பது கட்டாயம்.

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய, அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்பார்கள். அதிகாரம் சிலரை மனிதராக்கும்; சிலரை மிருகமாக்கும். தாலிபன்களை ஆப்கனின் ஆட்சி அதிகாரம், கொடூரர்களாக மாற்றியது.

காபூலைக் கைப்பற்றியதும் அவர்கள் செய்த முதல் வேலை, முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லாவைச் சிறைப்படுத்தியது. பெரும்பான்மை பஷ்துன் இனத்தைச் சேர்ந்தவரான நஜிபுல்லா, சோவியத் படைகள் ஆப்கனை ஆக்கிரமித்த காலத்திலிருந்து முக்கியமான தலைவராக இருந்தார். ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த அவர், ஐந்து ஆண்டுகள் ஆப்கனின் அதிபராகவும் இருந்தவர். அவரின் ஆட்சிக்காலத்தில்தான் சோவியத் படைகள் வெளியேறின. அதுவரை கம்யூனிஸ்ட்களின் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையே ஆப்கனில் இருந்தது. அதை மாற்றி எல்லா கட்சிகளையும் இணைத்து இணக்கமான அரசு ஒன்றை அமைத்தார். கம்யூனிஸ தேசம் என அரசியல் சட்டத்தில் இருந்ததை மாற்றினார். இஸ்லாமை ஆப்கனின் தேசிய மதமாக அறிவித்தார். போரிட்டுக்கொண்டிருந்த முஜாகிதீன் குழுக்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆப்கனிலிருந்து வெளியேறிய தொழிலதிபர்கள் பலரையும் மீண்டும் நாட்டுக்கு வந்து தொழில் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆப்கனை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல அவர் முயன்றார்.

முகமது நஜிபுல்லா
முகமது நஜிபுல்லா
RIA Novosti archive, image #12070 / Alexandr Graschenkov / CC-BY-SA 3.0, CC BY-SA 3.0 via Wikimedia Commons

இதனாலேயே முஜாகிதீன் குழுக்கள் அவரை ஆபத்தானவராகக் கருதின. அவரை வீழ்த்துவதற்கு ரகசிய சதிகள் அரங்கேறின. அவரின் கட்டுப்பாட்டில் இருந்த ராணுவத்தின் தளபதிகள் பலரே படைகளுடன் சென்று முஜாகிதீன் போர்க்குழுக்களில் இணைந்தார்கள்.

சோவியத் படைகள் வெளியேறிய பிறகும், நஜிபுல்லா அரசுக்கு ரஷ்யா தொடர்ந்து உதவி வந்தது. ஆனால், அவர் கம்யூனிஸப் பாதையிலிருந்து விலகியதும், அந்த உதவிகள் நின்றுவிட்டன. முஜாகிதீன் குழுக்களை ஆப்கன் ராணுவம் எதிர்த்துப் போரிடுவதற்கு நாட்டின் விமானப் படையே பெரிதும் உதவியது. முஜாகிதீன் படைகள் பெரிதும் பயந்தது போர் விமானங்களுக்குத்தான். ரஷ்யாவின் உதவி இல்லாததால், பறப்பதற்கு பெட்ரோல் இன்றி ஆப்கன் விமானப்படை விமானங்கள் முடங்கின. முஜாகிதீன்களின் கை ஓங்கியது. வேறு வழியின்றி பதவி விலகிய நஜிபுல்லா, தலைநகர் காபூலில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தார். நான்கு ஆண்டுகள் அவர் அங்குதான் இருந்தார்.

தாலிபன்களின் கதை - 3: முல்லா முகமது ஒமர் எப்படி உருவானார், பாகிஸ்தான் எதற்காக ஆதரித்தது?!

1996 செப்டம்பர் 26 மாலை. ஐ.நா அலுவலகத்தைத் தாக்கி, அங்கிருந்த நஜிபுல்லாவைக் கடத்திச் சென்றனர் தாலிபன்கள். அவரை சவுக்கால் அடித்தும், பிறப்புறுப்பை அறுத்தும் சித்திரவதை செய்து கொன்றனர். அவரின் சடலத்தை ஒரு வாகனத்தில் கட்டி, காபூல் வீதிகளில் இழுத்துச் சென்றனர். அவரின் சகோதரர் ஷாபுர் அகமதுசாய்க்கும் இதே கதி நேர்ந்தது. ரத்தத்தில் குளித்திருந்த இருவரின் சடலங்களையும், அடுத்த நாள் காலை ஆப்கன் அதிபர் மாளிகைக்கு எதிரே இருக்கும் ஒரு டிராபிக் கம்பத்தில் தூக்கில் தொங்கவிட்டனர். 'முன்னாள் அதிபருக்கு இந்த கதி என்றால், நம் நிலை என்ன ஆகும்' என ஆப்கன் மக்கள் திகைத்துப் போனார்கள்.

நாட்டில் இஸ்லாமிய ஷரியத் சட்டப்படிதான் ஆட்சி நடக்கும் என்று அறிவிப்பு வெளியானது. மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மசூதிகளிலிருந்து மதத் தலைவர்கள் அறிவிப்பு வெளியிடுவார்கள். ரேடியோ ஷரியத் என்ற ரேடியோ, அரசின் கொள்கை முடிவுகளை அறிவிக்கும்.

தாலிபன்கள்
தாலிபன்கள்
Rahmat Gul

தாலிபன்கள் ஒவ்வொரு பகுதியாக பிடித்துக்கொண்டு வந்தபோது, அவர்களின் படையுடன் இஸ்லாமிய போதகர்களும் நிறைய பேர் வந்தார்கள். அவர்களுக்கு பள்ளிகளைக் கண்டாலே பிடிக்கவில்லை. மதரஸாக்களில் தரப்படும் கல்வியே போதுமானது என்று முடிவெடுத்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு கோடி மக்கள் இருந்த தேசத்தில் வெறும் 650 பள்ளிகள் மட்டும்தான் இருந்தன. பெண்கல்வி மறுக்கப்பட்டது. பெண்கள் வேலைக்குச் செல்லவும் கூடாது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால், துணைக்கு குடும்பத்திலிருந்து ஒரு ஆண் கூட வர வேண்டும். மேக்கப் போடுவது, ஹைஹீல்ஸ் அணிவது, நெயில் பாலீஷ் போடுவது எல்லாமே குற்றம்.

ஆண்கள் தாடி வளர்ப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. உள்ளங்கையை மடக்கி முஷ்டியாக்கினால் எவ்வளவு நீளம் இருக்கிறதோ, அந்த நீளத்துக்கு தாடி வளர்ப்பது கட்டாயம். ஸ்டைலாக முடி வெட்டிக்கொண்ட இளைஞர்களுக்கும், அவர்களுக்கு முடி திருத்தம் செய்தவர்களுக்கும் வீதியில் நிறுத்தி சவுக்கடி தண்டனை கொடுத்தார்கள்.

தாலிபன்கள்
தாலிபன்கள்
Rahmat Gul

மேற்கத்திய உடைகள் தடை செய்யப்பட்டன. கால்பந்து போன்ற விளையாட்டுகள் முதல் பட்டம் விடுவது வரை எல்லாம் சட்டவிரோதம் ஆக்கப்பட்டன. இசை கேட்பதும் குற்றம். தாலிபன்களின் போர் முழக்கப் பாடல்களை மட்டும் கேட்கலாம். தியேட்டர்கள் கிடையாது. யார் வீட்டிலும் டி.வி-யும் கூடாது.

அரசியலும் மத அடிப்படைவாதமும் பெரும்பான்மை இன மக்களின் பெருமிதமும் ஒரு புள்ளியில் இணைந்தால், அங்கு பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாலிபன்கள் ஆட்சியில் ஆப்கன் அப்படித்தான் ஆனது. ஹஸராக்கள் என்ற பழங்குடி இனத்தினர் ஆப்கனில் கணிசமாக வசித்தனர். சுருட்டை முடி கொண்ட அவர்களுக்கு தாடி நீளமாக வளரவில்லை. 'இஸ்லாத்துக்கு எதிரானவர்கள்' என்று குற்றம் சாட்டி ஆயிரக்கணக்கான ஹஸராக்களைக் கொன்றது தாலிபன் படை. இந்துக்களும் சீக்கியர்களும் மஞ்சள் நிற உடைகளை உடுத்தி தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.

மற்றவர்களுக்கான தண்டனைகளும் கடுமையாகவே இருந்தன. காபூலில் ஒரு பெரிய கால்பந்து மைதானம் உண்டு. அதில் அடிக்கடி கூட்டம் கூடும். தவறு செய்யும் பெண்களைக் கூட்டமாகச் சேர்ந்து கல்லால் அடித்துக் கொல்வதையும், ஆண்களின் கை, கால்கள் வெட்டப்படுவதையும் வேடிக்கை பார்க்கத்தான் இப்படிக் கூட்டம் கூடும். தாலிபன்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் பரபரப்பாக இயங்கிய தொழிற்சாலைகள், செயற்கை உறுப்புகள் செய்து தரும் தொழில் நிறுவனங்கள்தான். அந்த அளவுக்கு தண்டனைகள் இருந்தன.

முல்லா அக்தர் மன்சூர்
முல்லா அக்தர் மன்சூர்
தாலிபன் அமைப்பில் மூன்று நிர்வாக அடுக்குகள் இருக்கின்றன. 'ரஹ்பாரி ஷுரா' என்ற 26 தலைவர்களைக் கொண்ட குழு போரையும் அரசாங்கத்தையும் நடத்தும். முல்லா ஒமரே அந்தக் குழு சொல்வதைக் கேட்டுத்தான் நடக்க வேண்டும்.
தாலிபன்களின் கதை - 2 | பிரிட்டிஷ் ஆட்சி டு சோவியத் அதிகாரம்... ஆப்கன் நிம்மதியை இழந்த தருணம் எது?

இன்னொரு அடுக்கு, அதன் அரசியல் பிரிவு. அமைச்சர்களாக இருக்கும் தாலிபன்கள், சர்வதேச நாடுகளுடன் இணக்கமான முகம் காட்டி அரசியல் பேசுவார்கள். முல்லா ஒமர் தன் அமைச்சர்களைத் தேர்வு செய்த விதமே விநோதமானது. தாலிபன்களின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் முல்லா அக்தர் மன்சூர். இரண்டு ரஷ்ய ஹெலிகாப்டர்களை ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்கி வீழ்த்தியவர் இவர். அந்தத் தகுதியே இவரை விமானத் துறை அமைச்சராக்கியது. இந்திய விமானத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஹைஜாக் செய்து காந்தஹார் விமான நிலையம் கொண்டு சென்றபோது, தாலிபன்களின் வெளியுறவு அமைச்சர் வக்கீல் அகமது முத்தாவக்கீல் என்பவர்தான் பேச்சுவார்த்தைக்கு உதவினார். அவர் முல்லா ஒமரின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர். நன்றாகப் பேசுவார் என்பதால், வெளியுறவு அமைச்சர் ஆக்கினார்கள்.

தாலிபன் தலைவர் முல்லா ஒமர்
தாலிபன் தலைவர் முல்லா ஒமர்

தாலிபன்களின் மூன்றாம் அடுக்கு, போர் வெறி ஏற்றப்பட்ட வீரர்கள். களத்தில் தாங்கள் நினைத்த எதையும் இவர்கள் செய்வார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு கமாண்டர் இருப்பார். அங்கு அவர் வைத்ததுதான் சட்டம்.

முன்னாள் அதிபர் நஜிபுல்லாவின் கொலையைத் தொடர்ந்து தாலிபன்களை சர்வதேச சமூகம் கடுமையாகக் கண்டித்தது. ஆப்கனுடன் தொடர்புகளை எல்லா நாடுகளும் துண்டித்தன. பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தாலிபன் ஆட்சியை அங்கீகரித்தன.

சர்வதேச சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தாலிபன் மண்ணில் தீவிரவாதத்தின் விஷ விதைகள் வேரூன்றி வளர்ந்தன. அவற்றில் முக்கியமான விதை, ஒசாமா பின் லேடன்!
தாலிபன்களின் கதை நாளையும் தொடரும்!
அடுத்த கட்டுரைக்கு