Published:Updated:

தாலிபன்களின் கதை - 5 | பின்லேடனுக்கும் - முல்லா ஓமருக்குமான நட்பு எப்படிப்பட்டதாக இருந்தது?

தாலிபன்
தாலிபன்

தாலிபன்களை கொஞ்சமேனும் அமைதிப்பாதைக்குத் திருப்ப முயன்றார் முஷாரப். ஆனால், அவர் வளர்த்துவிட்ட தாலிபன்களே அவர் பேச்சை மதிக்கவில்லை.

தாலிபன்களை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்தது, புகழ்பெற்ற பாமியன் புத்தர் சிலைகளை அவர்கள் தகர்த்தபோதுதான். ஆப்கனின் பாமியன் மலைகளைக் குடைந்து செதுக்கப்பட்ட இரட்டை புத்தர் சிலைகள், காந்தாரக் கலையின் அற்புதங்கள். 180 அடி உயரத்தில் ஒரு புத்தர் சிலை, 125 அடி உயரத்தில் ஒரு புத்தர் சிலை என இரட்டை பிரமாண்டங்கள். இந்தப் பகுதி இஸ்லாமியர்கள் ஆதிக்கத்தில் வந்தபோது, புத்தர் சிலைகளுக்கும் ஆபத்து வந்தது. செங்கிஸ்கான் முதல் ஔரங்கசீப் வரை பலரும் உடைக்க முயன்றபோதும் தப்பித்து நின்றன சிலைகள். ஆனால், தாலிபன்கள் அவற்றை வெடி வைத்துத் தகர்த்தனர்.

''நான் அந்த சிலைகளை உடைக்க விரும்பியதில்லை. சேதமடைந்திருந்த சிலைகளை சீரமைக்க வேண்டும் என்று ஒருமுறை வெளிநாட்டினர் சிலர் வந்து கேட்டனர். எனக்கு அது அதிர்ச்சி தந்தது. ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் பசியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உயிருள்ள இந்த மக்களை விட உயிரற்ற சிலைதான் இவர்களுக்கு முக்கியமா? அந்தக் கோபத்தில்தான் சிலைகளை உடைக்கச் சொன்னேன்'' என்று ஒரு பேட்டியில் சொன்னார் முல்லா முகமது ஒமர்.

பாமியன் புத்தர் சிலை - தாலிபன்கள் அழிப்பதற்கு முன் (இடது), அழித்த பின்பு (வலது)
பாமியன் புத்தர் சிலை - தாலிபன்கள் அழிப்பதற்கு முன் (இடது), அழித்த பின்பு (வலது)
Institute of Ethnology and Cultural Anthropology, Adam Mickiewicz University partnership, via Wikimedia Commons
தாலிபன்களின் ஆட்சி அமைந்ததும், ஆப்கன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அந்த நாள்களில் தலைநகர் காபூலில் கூட சுத்தமான குடிநீர் கிடைக்காது. சில மணி நேரங்களே மின்சாரம் இருக்கும். தொலைபேசி என்பதே அரிதான விஷயம். கம்ப்யூட்டர் என்ற கண்டுபிடிப்பையே பார்த்திருக்கவில்லை ஆப்கன். உலகம் 21-ம் நூற்றாண்டை நோக்கிப் போன நேரத்தில், ஆப்கன் கி.மு காலத்தில் இருந்தது. உணவு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளே பெரும்பாலான மக்களுக்குக் கிடைக்கவில்லை. நான்கில் ஒரு ஆப்கன் குழந்தை ஐந்து வயதைத் தொடுவதற்குள் இறந்துவிடும்.

அவதிப்பட்ட ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்ய பல தொண்டு நிறுவனங்கள் வந்தன. ஐ.நா அமைப்பு மூலம் உணவுப் பொருட்கள் வந்தன. அதில் பெரும்பகுதியை தாலிபன்களே எடுத்துக்கொள்வார்கள். சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் சேவை செய்ய வந்தன. தாலிபன்கள் அவர்களுக்கும் தொல்லை கொடுத்தார்கள். போரால் இடிந்த பழைய அரசு கட்டடங்களை ஒதுக்கி, 'தொண்டு நிறுவனத்தினர் இவற்றில்தான் தங்க வேண்டும்' என்று கட்டளை போட்டார்கள். அதனால் பல நிறுவனங்கள் வெளியேறின. இதேபோல ஐ.நா அலுவலகத்துக்கும் தொல்லை கொடுக்க, ஐ.நா தனது அலுவலகத்தையே மூடியது. அதன்பின் உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்தன. ''இறைவன் ஏதோ ஒரு வழியில் நமக்கு உணவு கொடுப்பார்'' என்று தாலிபன் அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால், பட்டினிச் சாவுகளே தொடர்கதை ஆகின.

இந்த சூழலில்தான், ''சர்வதேச நாடுகளுக்குப் பாடம் புகட்டவே புத்தர் சிலைகளை உடைத்தோம்'' என்று தாலிபன் வெளியுறவு அமைச்சர் வக்கீல் அகமது முத்தாவக்கீல் சொன்னார்.

ஒசாமா பின் லேடன்
ஒசாமா பின் லேடன்

''புத்தர் சிலைகளை உடைக்குமாறு முல்லா ஒமரிடம் சொன்னது பின் லேடன்தான்'' என்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள்.

ஒசாமா பின் லேடனுக்கும் முல்லா முகமது ஒமருக்கும் இருந்த உறவு பற்றி முரண்பட்ட கருத்துகள் ஆப்கனில் உலவுகின்றன. 'ஒசாமாவின் மகளை ஒமர் திருமணம் செய்துகொண்டார்' என்றும், 'ஒமரின் மகள் ஒசாமாவின் மனைவிகளில் ஒருவர்' என்றும் பரவிய தகவல்களை தாலிபன்கள் எப்போதும் மறுத்து வந்திருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் முதன்முதலில் எப்போது சந்தித்துக்கொண்டனர் என்பது பற்றியும் முரண்பட்ட தகவல்களே வெளியாகின்றன. 'சோவியத் படைகளுக்கு எதிராக முஜாகிதீன் குழுவில் இணைந்து ஒமர் போரிட்ட காலத்திலேயே ஒசாமா அவருக்குப் பழக்கம்' என்கிறார்கள் பாகிஸ்தான் உளவுத் துறையினர் சிலர். ''பாகிஸ்தானில் ஒரு மதரஸாவில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டனர். பிற்காலத்தில் தாலிபன் அமைப்பு உருவானபோது ஒசாமா பொருளாதார உதவிகள் செய்தார். தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தபிறகும் பெரும்பாலான காலம் தலைநகர் காபூலுக்குப் போகாமல் ஒமர் காந்தஹாரில்தான் இருந்தார். பின் லேடன் எங்கு போனாலும், இருவரும் சாட்டிலைட் போனில் தினமும் பேசிக் கொள்வார்கள்'' என்கிறார்கள் அவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காந்தஹாரில் பிசியான மார்க்கெட் பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் முதலில் ஒமர் இருந்தார். ஒருமுறை வெடிமருந்து ஏற்றிய வாகனத்தை அந்த வீட்டில் கொண்டுவந்து மோதினார்கள் முஜாகிதீன் எதிரிகள். அதில் தாலிபன் வீரர் ஒருவர் இறக்க, ஒமர் காயமின்றி உயிர் தப்பினார். அதன்பிறகு கோட்டை போல சகல பாதுகாப்பு வசதிகளுடன் அவருக்கு வீடு கட்டிக் கொடுத்தது பின்லேடன்தான்.

பின் லேடனின் நான்காவது மகன் ஒமர் பின் லேடன், அமெரிக்காவின் உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு தந்தையிடமிருந்து தனியே பிரிந்து வந்தவர். அவர், 'Growing up Bin Laden' என்ற நூலை எழுதியிருக்கிறார். ''தாலிபன்களுக்கும் அல் கொய்தாவுக்கும் இருந்தது இணக்கமான உறவு அல்ல. இவர்களுக்கு அவர்கள் தேவைப்பட்டார்கள்; அவர்களுக்கு இவர்களின் உதவி தேவைப்பட்டது. அவ்வளவுதான். ஒருவேளை இருவருக்கும் எதிரிகள் இல்லாமல் போயிருந்தால், அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்திருப்பார்கள்'' என்கிறார்.

ஒசாமா பின்லேடன் - முல்லா ஓமர்
ஒசாமா பின்லேடன் - முல்லா ஓமர்

சூடானில் ஐந்து ஆண்டுகள் பதுங்கியிருந்த பின் லேடன், ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த 1996-ம் ஆண்டில் காந்தஹார் வந்தார். வெளிநாடுகளிலிருந்து இளைஞர்கள் பலர் வந்து அவருடன் இணைந்தார்கள். அல் கொய்தாவின் பயிற்சி முகாம் பிரமாண்டமாக வளர்ந்தது. மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் அமெரிக்கத் தூதரகங்களில் அல் கொய்தா அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா, ஆப்கனில் இருந்த பின் லேடனின் பயிற்சி முகாம்களில் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. அத்துடன், பின் லேடனை ஆப்கனிலிருந்து வெளியேற்றுமாறு சவுதி அரேபியா மூலம் அழுத்தம் கொடுத்தது. தாலிபன்களுக்கு நிதியுதவி செய்யும் முக்கியமான தேசம், சவுதி. அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தானே ஆக வேண்டும்.

''1998-ம் ஆண்டு என் தந்தையை ஆப்கனை விட்டு வெளியேறுமாறு முல்லா ஒமர் சொன்னார். அதற்காக என் தந்தையை சந்திக்க முல்லா ஒமர் வரும்போது, நானும் அங்கு இருந்தேன். 'நீங்கள் இங்கே இருந்துகொண்டு வேண்டாத வேலைகள் செய்கிறீர்கள். உங்களால் எங்களுக்குப் பிரச்னை, உங்களை வெளியேற்றுமாறு சொல்கிறார்கள். உடனே இங்கிருந்து கிளம்பிவிடுங்கள்' என்று ஒமர் சொன்னார். அதற்கு என் தந்தை, 'என்னை நம்பி நூற்றுக்கணக்கானவர்கள் வந்திருக்கிறார்கள். என் குடும்பமும் பெரிது. இவ்வளவு பெரிய கூட்டத்துடன் நான் பாதுகாப்பாக எங்கே போய் இருக்க முடியும்' என்று கேட்டார். 'அதெல்லாம் எனக்குத் தெரியாது' என்று கோபமாக முல்லா ஒமர் சொன்னார். உடனே என் தந்தை, 'கோழை அரசாங்கங்களுக்குப் பணிந்து என்னை நீங்கள் வெளியேறச் சொல்வது இஸ்லாத்துக்கு எதிரானது' என்றார். அதைக் கேட்டதும் முல்லா ஒமர் அடங்கிவிட்டார். தீவிர மத நம்பிக்கையாளரான ஒமர், 'இன்னும் ஒன்றரை ஆண்டுகள் வரை இங்கே இருங்கள். அதற்குள் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்' என்றார். அதன்பிறகு என் தந்தை ஏற்பாடு செய்திருந்த விருந்தைக்கூட சாப்பிடாமல், 'எனக்குப் பசிக்கவில்லை' என்று சொல்லிவிட்டு முல்லா விருட்டென கிளம்பிப் போனார்'' என்று சொல்கிறார் பின் லேடனின் மகன் ஒமர் பின் லேடன்.

முஷாரப்
முஷாரப்
பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்து பல ஆண்டுகள் சர்வாதிகார அதிபராக இருந்த பெர்வேஸ் முஷாரப் ஒரு சுயசரிதை எழுதியிருக்கிறார். அவர் இதை வேறுவிதமாகச் சொல்கிறார்.

''பின் லேடனை ஆப்கனிலிருந்து வெளியேற்றுமாறு சொல்வதற்காக சவுதி அரேபியாவின் உளவுத்துறைத் தலைவரான இளவரசர் துர்கி அல் ஃபைசல் காந்தஹாருக்கு வந்தார். முல்லா முகமது ஒமரை அவரின் மாளிகையில் சந்தித்து இந்த விஷயத்தை இளவரசர் சொன்னார். ஒமர் அந்த அறையிலிருந்து சட்டென்று எழுந்து வெளியே போய்விட்டார். சில நிமிடங்கள் கழித்து திரும்பிவந்த ஒமரின் தலைமுடியும் உடைகளும் நனைந்திருந்தன. கோபத்தில் கண்கள் சிவந்திருக்க, அவர் சவுதி இளவரசரைப் பார்த்துக் கத்தினார்.

தாலிபன்களின் கதை - 4 | தாலிபன்களின் ஆட்சி ஏன் கொடூரத்தின் உச்சமாக இருந்தது?!

'நீங்கள் சொன்னதைக் கேட்டதும் என் ரத்தம் கொதிக்கிறது. என் கோபத்தைக் கட்டுப்படுத்த குளிர்ச்சியான தண்ணீரை தலையில் ஊற்றிக்கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் என் விருந்தினராக வந்திருப்பதால் சும்மா விடுகிறேன். இல்லாவிட்டால், நீங்கள் உயிருடன் நாடு திரும்பியிருக்க முடியாது' என்று கர்ஜித்தார். சவுதி இளவரசர் மிரண்டு போய்த் திரும்பினார்'' என்று எழுதியிருக்கிறார் முஷாரப்.

அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதல்
அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதல்

தாலிபன்களை கொஞ்சமேனும் அமைதிப்பாதைக்குத் திருப்ப முயன்றார் முஷாரப். ஆனால், அவர் வளர்த்துவிட்ட தாலிபன்களே அவர் பேச்சை மதிக்கவில்லை. ''முல்லா ஒமருடன் பேச்சுவார்த்தை நடத்துவது, நம் தலையைக் கொண்டு போய் சுவரில் முட்டிக்கொள்வதற்கு சமம். உலக நிலவரம் தெரியாத ஒரு கனவுலகில் அவர் வாழ்ந்தார். நட்பு நாடுகளையே தர்மசங்கடத்துக்கு ஆளாக்கியவர் அவர்'' என்கிறார் முஷாரப்.

அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களைத் தாக்கிய பிறகு, 'இனியும் பின்லேடனை ஆப்கனில் வைத்திருந்தால், தாலிபன் அமைப்புக்கே ஆபத்து வரும். அமெரிக்கா விரைவில் நம்மைத் தாக்கும்' என்று நெருக்கமான சிலர் முல்லா ஒமரிடம் சொன்னார்கள். ஆனால், 'அமெரிக்கா சும்மா பூச்சாண்டி காட்டுகிறது. அவர்கள் ஆப்கன் மீது போர் தொடுக்க மாட்டார்கள்' என்று உறுதியாக நம்பினார் ஒமர்.

ஆனால் அமெரிக்கா கடும் கோபத்துடன் தாக்கியபோது, இரண்டு முறை நூலிழையில் உயிர்தப்பினார் ஒமர்.

- தாலிபன் கதை நாளையும் தொடரும்.
அடுத்த கட்டுரைக்கு