Published:Updated:

உக்ரைன் - தியாக தேசத்தின் வரலாறு 5: ரஷ்யா நடத்தும் போரால் பெட்ரோல் விலை என்ன ஆகும்?

பெட்ரோல், டீசல்

ரஷ்யாவைத் தவிர்க்க விரும்பினால், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், அதன் விலை அதிகம். அது சர்வதேச அளவில் எரிவாயு விலையை தாறுமாறாக உயர்த்தும்.

உக்ரைன் - தியாக தேசத்தின் வரலாறு 5: ரஷ்யா நடத்தும் போரால் பெட்ரோல் விலை என்ன ஆகும்?

ரஷ்யாவைத் தவிர்க்க விரும்பினால், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், அதன் விலை அதிகம். அது சர்வதேச அளவில் எரிவாயு விலையை தாறுமாறாக உயர்த்தும்.

Published:Updated:
பெட்ரோல், டீசல்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரால் இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகள் பலவற்றின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று கவலையுடன் கூறியிருக்கிறார். பணவீக்கம் எகிறுகிறது, பங்குச்சந்தைகள் வீழ்கின்றன, தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரிக்கிறது, இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிறது. ஐந்து மாநிலத் தேர்தல் காரணமாக மூன்று மாதங்களாக ஏறாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை உயரப் போகிறது.

ரஷ்யா தனது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தாத நிலையிலேயே இவ்வளவு பொருளாதாரக் களேபரங்கள். கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது கச்சா எண்ணெய் விலை. பிப்ரவரி முதல் தேதியில் 100 டாலரைத் தொட்டிருக்காத ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் இப்போதைய விலை 130 டாலர்.

இந்தச் சூழலில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே பெட்ரோல் விலை எகிறியுள்ள நிலையில், "விலை ஏறினாலும் பரவாயில்லை, ரஷ்யாவின் நியாயமற்ற போருக்கு மறைமுகமாக நிதி அளிக்கும் இந்த வியாபாரத்தை நிறுத்திவிட்டோம்" என்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

US President Joe Biden
US President Joe Biden
AP Photo/Evan Vucci

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதேபோன்ற ஒரு முடிவை எடுக்கும் துணிச்சல் ஐரோப்பிய நாடுகளுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. "அப்படி ஏதாவது முடிவெடுத்தால், கச்சா எண்ணெய் விலை 300 டாலரைத் தொடும்" என்று மிரட்டுகிறார், ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக். இன்னொரு பக்கம், ரஷ்யாவே முடிவெடுத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விற்பனையை நிறுத்தி வைத்தாலும் விலை தாறுமாறாக எகிறும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அது அத்தனை அத்தியாவசியப் பொருள்களின் விலையையும் உயர்த்தும். சாமானிய மக்களுக்கு தினசரி வாழ்க்கையை நகர்த்துவதே சுமையாகிவிடும்.

உலக பெட்ரோலிய சந்தையில் ரஷ்யா ஒரு முக்கியமான சக்தி. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் ரஷ்யா. எண்ணெய் வளமிக்க சவூதி அரேபியாவே மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. தினமும் 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. தன் தேவை போக 6 மில்லியன் பேரல் ஏற்றுமதி செய்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் சரிபாதி ஜெர்மனி, இத்தாலி, போலந்து, நெதர்லாந்து, கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கே போகிறது. இதில் பெருமளவு குழாய் வழியே போகிறது. இதற்காக பல நாடுகளை ரஷ்யாவுடன் இணைத்து பிரமாண்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா வாங்குவதில் 10 சதவிகித பெட்ரோலியப் பொருள்கள் ரஷ்யா தருவதுதான்.

ரஷ்யாவின் எண்ணெய்யை அதிகம் வாங்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று. இதற்காக சீனா வரை தனி குழாய் பதித்திருக்கிறது ரஷ்யா. இந்தக் கிழக்கு சைபீரியா பசிபிக் பெருங்கடல் குழாய் வழியே செல்லும் கச்சா எண்ணெய், அங்கிருந்து ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் கப்பலில் போகிறது. ரஷ்ய எண்ணெயை இந்தியாவும் வாங்குகிறது. ஆனால், அதன் அளவு மிகவும் குறைவு.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் மட்டுமே ரஷ்யா கடந்த ஆண்டு 8 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது. உலக அளவில் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி மார்க்கெட்டில் 10 சதவிகிதம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ரஷ்யாவைப் புறக்கணித்துவிட்டு உலகம் இயங்க முடியாது என்பதே உண்மை.

ரஷ்யாவிலிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்
ரஷ்யாவிலிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்
அதனால்தான் அமெரிக்கா ஒரு தந்திரம் செய்கிறது. பழைய எதிரிகளைத் தேடிப் போய் உறவைப் புதுப்பித்துக்கொள்ளும் தந்திரம்தான் அது. அணு ஆயுத சோதனை நடத்தியதால் ஈரான் மீது தடை விதித்த அமெரிக்கா, அந்த நாட்டிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் வாங்குவதை நிறுத்தியது. இப்போது அவர்களுடன் மீண்டும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்துகிறது.

வெனிசுலா நாட்டிலிருந்துதான் முன்பு அதிக எண்ணெயை அமெரிக்கா வாங்கியது. அங்கு இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பிரச்னை ஆரம்பித்தது. தற்போதைய அதிபர் நிகோலஸ் மாதுரோ தேர்தல் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி, வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதித்தது. அங்கிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா நிறுத்தியது. ரஷ்யாவை விட இவர்கள் பரவாயில்லை என்று முடிவெடுத்து, இப்போது வெனிசுலா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

குடும்பத்தின் அவசர செலவுகளுக்கு நாம் கொஞ்சம் பணம் கையிருப்பு வைத்திருப்பதைப் போல, ஒவ்வொரு நாடும் கணிசமான அளவு கச்சா எண்ணெயை சேமிப்பில் வைத்துள்ளன. அவசர சூழல்களில் இதிலிருந்து எடுத்துப் பயன்படுத்துவார்கள். அமெரிக்கா இப்போது தன் சேமிப்பில் அதிகமாக கை வைத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நார்வே நாட்டில் எண்ணெய் வளம் அதிகம் இருந்தாலும், அது குறைவாகவே அதை எடுத்து விற்கிறது. ரஷ்யாவால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க நார்வே அதிகம் எண்ணெய் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இன்னொரு பக்கம், எண்ணெய் எடுப்பதை அதிகப்படுத்துமாறு சவூதி அரேபியாவிடமும் அமெரிக்கா கேட்டிருக்கிறது.

இந்த எல்லாவற்றையும் தாண்டிய ஒரு மாஸ்டர் பிளானையும் போட்டிருக்கிறது அமெரிக்கா. உலகில் அதிகமாக பெட்ரோலிய பொருள்களைப் பயன்படுத்தும் நாடுகளாக சீனாவும் இந்தியாவும் இருக்கின்றன. பல நாடுகளிடம் கச்சா எண்ணெய்யை இவை வாங்குகின்றன. "சவூதி உள்ளிட்ட நாடுகளிடம் நீங்கள் வாங்குவதைக் குறைத்துக்கொண்டு ரஷ்யாவிடம் அதிகம் வாங்குங்கள். நாங்கள் சவூதியிடம் வாங்கிக்கொள்கிறோம்" என்று டீல் பேசுகிறது அமெரிக்கா. இப்படிச் செய்வதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்

அமெரிக்காவைப் போல ஐரோப்பிய நாடுகளால் துணிச்சலாக முடிவெடுக்க முடியாது என்பதே உண்மை. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு அவை ரஷ்யாவைச் சார்ந்தே இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவில் 40 சதவிகிதத்தை ரஷ்யாவே தருகிறது. மின் உற்பத்தி, தொழிற்சாலைகள் இயங்குவது முதல் குளிர் காலத்தில் வீடுகளை கதகதப்பாக வைப்பது வரை எல்லாவற்றுக்கும் ரஷ்யாவின் எரிவாயு தேவை. அதனால்தான் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்த ஐரோப்பிய யூனியன், அந்தத் தடையிலிருந்து எண்ணெய்க்கும் எரிவாயுவுக்கும் விலக்கு அளித்துள்ளது.

ரஷ்யாவின் அரசு நிறுவனமான கேஸ்ப்ரோம், குழாய்கள் வழியாக எரிவாயுவை பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய நாடுகள் ரஷ்யாவின் முதன்மையான கஸ்டமர்கள். பெலாரஸ் வழியாௐகவும் உக்ரைன் வழியாகவும் பல நாடுகளுக்கு ரஷ்யாவின் எரிவாயு, நிலத்தடிக் குழாயில் செல்கிறது. போரில் உக்ரைனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று பதறியதை விடவும், எரிவாயுக் குழாய்க்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்றே ஐரோப்பிய நாடுகள் பதறின.

ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக நார்வே அதிக இயற்கை எரிவாயு உற்பத்தி செய்கிறது. ஆனாலும், "ரஷ்யா சப்ளையை நிறுத்தினால், எங்களால் அதை ஈடுசெய்ய முடியாது" என்றே நார்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோர் சொல்கிறார்.
பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்
Rogelio V. Solis

ரஷ்யாவைத் தவிர்க்க விரும்பினால், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், அதன் விலை அதிகம். அது சர்வதேச அளவில் எரிவாயு விலையை தாறுமாறாக உயர்த்தும்.

ரஷ்யா இப்போது தாக்குதல் நடத்தும் உக்ரைன் கூட ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவையே நம்பியிருக்கிறது என்பதுதான் விநோதம். ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைன் நாட்டின் கிரீமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்தபோது, உக்ரைனுக்கு எரிவாயு சப்ளையை நிறுத்தி திணற வைத்தது.

ரஷ்யாவின் போர் ஆயுதங்கள் உக்ரைன் மக்களை வதைக்கின்றன என்றால், ரஷ்யாவின் பெட்ரோல் ஆயுதம் உலகையே வதைக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism