Published:Updated:

Russia Victory Day: மே 9, புதின் சொல்லப்போவது என்ன? உக்ரைன் போர் என்னவாகும்? காத்திருக்கும் ஐரோப்பா!

Russia Victory Day

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களோடு களைகட்டும் ரஷ்யன் வெற்றி விழாவில் மொத்த நாடே ஜாலி மூடுக்கு மாறி இருக்கும். முக்கிய ரஷ்ய நகரங்களில் ராணுவ அணிவகுப்புகள் மிகப் பிரமாண்டமாக அரங்கேறும்.

Russia Victory Day: மே 9, புதின் சொல்லப்போவது என்ன? உக்ரைன் போர் என்னவாகும்? காத்திருக்கும் ஐரோப்பா!

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களோடு களைகட்டும் ரஷ்யன் வெற்றி விழாவில் மொத்த நாடே ஜாலி மூடுக்கு மாறி இருக்கும். முக்கிய ரஷ்ய நகரங்களில் ராணுவ அணிவகுப்புகள் மிகப் பிரமாண்டமாக அரங்கேறும்.

Published:Updated:
Russia Victory Day
Russia Victory Day வரும் மே 9 அன்று கொண்டாடப்பட உள்ளது. கொண்டாட்டங்களுக்கு ரஷ்யர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் அதே வேளை திண்டாட்டங்களுக்கு நாங்கள் தயாராக வேண்டுமா என்ற அச்சத்தில் ஐரோப்பியர்கள் உறைந்துபோய் உள்ளனர். என்னதான் நடக்கப் போகிறது?

ரஷ்யன் விடுதலை நாள் - ஒரு சுருக்கமான வரலாறு

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய விசுவாசியும் ஜெர்மன் ஆயுதப் படைகளின் தளபதியுமான ஃபீல்ட் மார்ஷல் வில்ஹெல்ம் கீடெல் (Field Marshal Wilhelm Keitel), 8 மே 1945 அன்று, மாலை, ஜெர்மனி சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அன்று பெர்லினில் 8-ம் தேதி என்றாலும் ஜெர்மனிக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேர வித்தியாசம் காரணமாக அப்போது ரஷ்யாவில் நேரம் நள்ளிரவு தாண்டி 9-ம் தேதி பிறந்து விட்டது. எனவே அந்த நாளே ரஷ்யன் வெற்றி நாளாக வரலாற்றில் குறிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Russia Victory Day
Russia Victory Day

அன்றிலிருந்து, நாஜி ஜெர்மனிக்கு எதிரான ரஷ்யாவின் மிகப்பெரிய வெற்றியை நினைவுகூரும் நாளாக, ஒவ்வொரு வருடமும் மே மாதம் 9ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்தத் தினம், புத்தாண்டுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் மிகவும் பரவலாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். ரஷ்யா, கஜகஸ்தான், பெலாரஸ் மற்றும் (2015 வரை) உக்ரைன் போன்ற பல்வேறு முன்னாள் சோவியத் நாடுகள் உட்பட 15 பழைய சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகளில் இது கொண்டாடப்பட்டது.

முதன் முதலாக நடந்த 'Victory day' பற்றிய சுவாரஸ்யமான கதைகள் பல உள்ளன. ஜூன் 24, 1945 அன்று ரெட் சதுக்கத்தில் நடந்த முதல் வெற்றி நாள் அணிவகுப்பின் உச்சக்கட்டமாக, லெனினின் கல்லறைக்கு முன் மூன்றாம் ரைச் பேனர்களைச் சுமந்து சென்று வீசிய சோவியத் வீரர்கள் அந்தப் பதாகைகளை தம் கைகளால் கூட தொடக்கூடாது என்பதற்காகக் கையுறைகள் அணிந்திருந்தனர். நாஜி ஜெர்மனியின் மீதான வெறுப்பை வெளிப்படுத்த, அணிந்திருந்த கையுறைகளைக் கடைசியில் எரித்துவிட்டார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே போல அணிவகுப்பின் ஒரு பகுதியாகக் குதிரையில் சவாரி செய்ய நினைத்த ஸ்டாலின் ஒத்திகையின் போது குதிரையிலிருந்து கீழே விழுந்து முதுகெலும்பை முறித்துக் கொண்டதோடு அந்த யோசனையை மூட்டை கட்டிவிட்டாராம். ஆனால் அணிவகுப்பின் பாரம்பரியத்தைப் பேண, ரஷ்ய ராணுவத்தின் திறமையான குதிரை வீரர் மார்ஷல் ஜார்ஜி ஜுகோவ், ஸ்டாலினுக்குப் பதிலாக அதைச் செய்து முடித்திருக்கிறார்.

Russia Victory Day
Russia Victory Day

யுத்தத்தின் போது வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நாய்களில், தீயாக வேலை செய்து 7,000 கண்ணிவெடிகள் மற்றும் 150 குண்டுகளை மோப்பம் பிடித்து ஜெர்மனியைக் காட்டிக் கொடுத்த ஒரு Shepherd Dzulbars நாய்க்கு “For Battle Merit” எனும் பதக்கம் வழங்கப்பட்டது. யுத்தத்தில் காயமடைந்ததால் நடக்க முடியாமல் இருந்த அந்த Shepherd Dzulbars நாய்க்கு, ஸ்டாலின் தனது ஜாக்கெட்டை வழங்கி மேடைக்குத் தூக்கி வரச்செய்தாராம். இது போன்ற சுவாரஸ்யமான குட்டிக் குட்டி பெட்டிச் செய்திகள் இங்கு ஏராளம்.

NATO படைகளும் கலந்து கொண்ட ரஷ்யன் விக்டரி பரேட்

உக்ரைனுடன் ரஷ்யாவுக்கு இருக்கும் முக்கியமான பிணக்கு உக்ரைன் NATO-வில் இணையக் கூடாது என்பது. அதேபோல அடுத்து ஒரு போர் வெடிக்குமாயின், ரஷ்யாவுக்கு எதிராக முதலில் களம் இறங்கத் தயாராக இருப்பதும் NATO படைகளே. ஆனால் ஒரு காலத்தில் நேட்டோ ராணுவப் பிரிவுகள் மூன்று முறை வெற்றி நாள் அணிவகுப்புகளில் கலந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு இணக்கமாக இருந்த உறவில் பிணக்கு ஏற்படக் காரணம் என்ன என்பது அனைவரும் அறிந்த பரம ரகசியம்!

Russian Victory Day கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும்?

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களோடு களைகட்டும் ரஷ்யன் வெற்றி விழாவில் மொத்த நாடே ஜாலி மூடுக்கு மாறி இருக்கும். முக்கிய ரஷ்ய நகரங்களில் ராணுவ அணிவகுப்புகள் மிகப் பிரமாண்டமாக அரங்கேறும். ரஷ்ய ராணுவத்தின் பலத்தைக் காட்டும் ராணுவத் தளவாடங்களின் அணிவகுப்பு மக்களின் ஏகோபித்த வரவேற்புக்கு மத்தியில் ஆடம்பரமாகக் காட்சிப்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான சாதாரண ரஷ்யக் குடிமக்கள், போரில் உயிர் நீத்த தம் உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கிய அணிவகுப்பு இடம்பெறும். இவை எல்லாவற்றையும் விட இதில் இடம்பெறும் முக்கியமான அம்சம் ரஷ்ய ஜனாதிபதி புதினின் உரை.

Russia Victory Day
Russia Victory Day

“ரஷ்யா தொடர்ந்து சர்வதேச சட்டத்தைப் பாதுகாக்கிறது. அதே நேரத்தில், எங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எங்கள் தேசிய நலன்களை நாங்கள் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அவற்றை உறுதியாகப் பாதுகாப்போம்” என்பது சென்ற வருட victory தினத்தில் புதின் கூறிய முக்கியமான வார்த்தைகள். இவ்வருடம் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை ரஷ்யர்கள் மட்டுமல்ல, முழு உலகமுமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வருடம் என்ன நடக்கப் போகிறது?

தனது எல்லையில் அமெரிக்காவும் மேற்குலகமும் தமது ராணுவத்தைக் குவிப்பதும், தனது அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைவதும் தம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறியது. ஆனால் தனது நீண்ட நாள் எதிரியும், போட்டியாளருமான ரஷ்யாவை நெருங்கவும், நெருக்கவும் ஒரே வழி, உக்ரைனுக்குள் நேட்டோ படைகள் மூலம் உட்செல்வது மட்டுமே எனச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த அமெரிக்காவும் மேற்கு நாடுகளும், தமக்குக் கிடைத்த பலியாடான உக்ரைனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காய் நகர்த்த ஆரம்பித்துள்ளன.

ஏற்கெனவே சமாதானம் பண்ணுகிறோம் பேர்வழி என அமெரிக்கா உட்புகுந்த நாடுகள் எல்லாம் இன்று என்ன நிலையில் கிடக்கின்றன என்பதை ஒரு நிமிடம் உக்ரைன் நினைத்துப் பார்த்திருந்தால் கூட சுதாரித்துக் கொண்டிருக்கலாம். இவ்வளவு இழப்புகளையும் தவிர்த்திருக்கலாம். ஏற்கெனவே கிரிமியா தொடர்பாக ரஷ்யாவுடன் உக்ரைனுக்கு இருந்து வந்த புகைச்சலில், சரியான நேரம் பார்த்து பெட்ரோல் ஊற்றப்பட்டுவிட்டது. பற்றி எரியும் தீயில் குளிர்காய்பவர்கள் அந்த நெருப்பை அணையவிடாமல் மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்கின்றனர்.

புதின்
புதின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், மே 9 அன்று உக்ரைன் மீது முறையாகப் போரை அறிவிக்க முடியும் என்று அமெரிக்க மற்றும் மேற்கத்திய ராஜதந்திரிகள் நம்புகின்றனர். இதனால் மீண்டும் ஒரு போர் ஐரோப்பாவில் வெடிக்கும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். உக்ரைனில் தனது நீண்டகால ராணுவ சாதனையை உலகுக்கு அறிவிப்பதற்காக புதின் Victory Day-யின் வெற்றிக் குறியீட்டைப் பயன்படுத்துவார் என்பது இவர்களின் கணிப்பு.

கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பிரதேசங்களை இணைத்து தெற்கில் உள்ள ஒடேசா நோக்கி ரஷ்யா முன்னேறலாம், அல்லது தெற்குத் துறைமுக நகரமான மரியுபோல் மீது முழு கட்டுப்பாட்டை அறிவிக்கலாம் போன்ற ஊகங்களும் கிளம்பியுள்ளன. ஏனெனில் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் நகரங்களை மே மாத நடுப்பகுதியில் ரஷ்யா இணைக்க முயலும் என்று அமெரிக்காவின் உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன. தென்கிழக்கு நகரமான கெர்சனை இணைத்து மக்கள் குடியரசாக பிரகடனப்படுத்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.

“இது உக்ரைனுக்கு எதிரான போரின் விரிவாக்கம் மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் நேட்டோவிற்கு எதிரான விரிவாக்கத்தையும் குறிக்கும். இந்த ஆண்டு, புதினின் உரையை உலகமே மிகவும் கவனமாகக் கேட்கும். ரஷ்ய மக்களை அணி திரட்டுவதற்கு மே 9-ஐ புதின் பயன்படுத்துவார்” என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்து உள்ளார்.

NATO Summit
NATO Summit

"நாங்கள் எப்போதும் போல மே 9-ஐக் கொண்டாடுவோம். ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிற குடியரசுகளின் விடுதலைக்காகவும், நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பாவின் விடுதலைக்காகவும் வீழ்ந்தவர்களை மறக்க மாட்டோம்" என்று ரஷ்யக் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ், Mediaset உடனான தனது சமீபத்தைய நேர்காணலில் கூறியுள்ளார். “நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் 'மாஸ்டர் ஆஃப் ஹவுஸ்ஸை வாஷிங்டனில் நிறுவி, வாஷிங்டனின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டன. உலகம் இப்போது அமெரிக்கர்களின் ஏகபோகமாக இருக்க வேண்டும் என்று வாஷிங்டன் முடிவு செய்துவிட்டது. எனவே அவர்கள் அதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள்" என்று கூறுகிறார்.

உண்மையான கள நிலவரம் என்ன?

ரஷ்யா – உக்ரைன் மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யாவின் இழப்புகள் மிக அதிகமாக இருப்பதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய டாங்கிகள் மற்றும் கிட்டத்தட்ட 2,500 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் கூறுகிறது. ரஷ்யா இது பற்றி எந்தவித தெளிவான அறிக்கையையும் விடவில்லை. இவற்றில் எவ்வளவு தூரம் உண்மை என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே.

எப்போதும் போல கனத்த மௌனம் சாதிக்கும் ரஷ்யாவின் அடுத்த மூவ் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள உலகமே மே 9-ஐ ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஐரோப்பியர்கள் யாருமே தமது கண்டத்தில் இன்னுமொரு போர் உருவாவதை விரும்பவில்லை. இரண்டாம் உலகப்போரின் பின் துண்டு துண்டாக உடைந்த ஐரோப்பாவை, கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கி, சீராக்கி உலகின் உறுதியான இடத்திற்குக் கொண்டு வர, கடந்த 76 வருடங்களில் அவர்கள் பட்ட கஷ்டங்கள், முயற்சிகள் எல்லாம் ஒரே நொடியில் சிதைந்து விடுவதை அவர்கள் நிச்சயம் விரும்பவில்லை. ஆனால் பலியாடாக ஆக்கப்பட்ட உக்ரைனின் கழுத்து வெட்டப்படும் போது சிதறப்போவது ஐரோப்பியர்களின் ரத்தம் மட்டுமே.

Russia - Ukraine war
Russia - Ukraine war

உயிர்கள் கொல்லப்படுவதும், உடைமைகள் சேதப்படுத்தும், உணர்வுகள் நசுக்கப்படுவதும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பிறப்பிடம் விட்டு இருப்பிடம் தேடி அகதிகளாக இடம் மாறும் அவலம் ஏற்படுத்தும் தாக்கம், பல தலைமுறைகளுக்குத் தொடரும் வலி. எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று ஒரு பழமொழி உண்டு. எய்தவன் யார், அம்பு யார் என்ற உண்மை உலகுக்குத் தெரியவரும் காலம் வராமலே போகலாம். அப்படி வந்தாலும் கூட, அதற்குக் கொடுத்த விலை பல கோடி உயிர்களாக மாறலாம்.

மே – 9 உலகுக்குச் சொல்லப்போகும் செய்தி என்ன? பொறுத்திருந்து பார்க்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism