கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

அமெரிக்காவுக்கும் ஐ.நாவுக்கும் சண்டை! - உலகமே வேடிக்கை பார்க்குது

உலகமே வேடிக்கை பார்க்குது
பிரீமியம் ஸ்டோரி
News
உலகமே வேடிக்கை பார்க்குது

பிப்ரவரி மாதம் கடைசியில், ‘எல்லோரும் பாருங்கள், இந்த வைரஸ் ஏப்ரலில் மாயமாய் மறைந்துவிடும்’ என்று ஆரூடம் சொன்னார்.

‘உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும். அந்த அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கிவரும் நல்கையை நிரந்தரமாக நிறுத்திக்கொள்ளும்.’ சமீபத்தில் இப்படி எச்சரித்தார் ட்ரம்ப். இந்த எச்சரிக்கை, அமைப்பின் எல்லா உறுப்பு நாடுகளுக்கும் போய்ச் சேருவதற்காக அவர் உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மாநாடு நடந்த மே 19ஆம் தேதியன்று தனது நான்கு பக்கக் குற்றப் பத்திரிகையை அரங்கேற்றினார். ஏப்ரல் மாதத்திலேயே உலக சுகாதார அமைப்பைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார் ட்ரம்ப். உலக சுகாதார அமைப்பின் செலவினங்களில் சுமார் 15% (ரூ.3037 கோடி) அமெரிக்காவால் வகிக்கப்படுகிறது. இந்த நல்கையைத்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார் ட்ரம்ப். நிரந்தரமாக நிறுத்தப்போவதாக அச்சுறுத்தவும் செய்கிறார். காரணம்? ‘உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் குறித்து முறையாக எச்சரிக்கவில்லை; மேலும் அது சீனாவிற்குச் சாதகமாக இருக்கிறது’ என்பது ட்ரம்பின் குற்றச்சாட்டு.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் `உலக சுகாதாரக் கூட்டமைப்பு’ எனும் சர்வதேச மாநாடு நடைபெறும். உலக சுகாதார அமைப்பில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. எல்லா நாடுகளின் பிரதி நிதிகளும் அமைப்பின் தலைமையகமான, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கூடுவார்கள். இந்த முறையும் மாநாடு நடந்தது. 193 நாடுகளும் பங்கேற்றன. 193 பிரதிநிதிகளும் உரையாற்றினார்கள்; ஆனால், காணொலி மாநாடு. இது கூட்டமைப்பின் 73ஆவது மாநாடு. மெய்நிகர் மாநாடாக நடப்பது இதுதான் முதல் முறை. உலகத்தின் கவனம் குவிந்திருக்கிற இந்த நேரத்தை ட்ரம்ப் பயன்படுத்திக்கொண்டார். ட்ரம்ப் ஏன் இப்படிக் குற்றஞ்சாட்டுகிறார்?

World health organization
World health organization

ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் போதாமைகளை மூடி மறைக்க உலக சுகாதார அமைப்பைப் பலிகடா ஆக்குகிறார் என்கிறது ஒரு தரப்பு. அந்த அமைப்பு தனது கடமையைச் செவ்வனே ஆற்றவில்லை என்கிறது இன்னொரு தரப்பு.

முதல் தரப்பை முதலில் பார்க்கலாம். ட்ரம்ப் உலக சுகாதார அமைப்பிற்கு எழுதிய நீண்ட கடிதத்தில் பல பழிப்புரைகள் இடம்பெறுகின்றன. ‘டிசம்பர் 2019லேயே வல்லுநர்கள் இந்தக் கொள்ளை நோய் குறித்து எச்சரித்தார்கள். லான்சட் இதழ் அப்போதே கட்டுரை வெளியிட்டது. ஆனால் உலக சுகாதார அமைப்பு அடக்கி வாசித்தது’ என்பது அதில் இடம்பெறும் முதல் குற்றச்சாட்டு. லான்செட் மதிப்பு மிக்க மருத்துவ ஆராய்ச்சி இதழ். லண்டனிலிருந்து வெளியாகிறது. லான்செட் ஆசிரியர் இந்தக் குற்றச்சாட்டை மே 19 அன்றே மறுத்தார். டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் குறித்து, இதழ் எந்தக் கட்டுரையும் வெளியிடவில்லை. கொரோனா வைரஸ் குறித்த முதல் கட்டுரை ஜனவரி 24 அன்று வெளியானது. 41 கொரோனா நோயாளிகளின் தரவுகளை வைத்துச் சீன விஞ்ஞானிகள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை. இந்தப் புதிய வைரஸ் மனிதரிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றும் சாத்தியத்தை அறிவியல்ரீதியாக அணுகிய கட்டுரை. லான்செட்டின் மறுப்புரைக்கு வெள்ளை மாளிகை பதிலளிக்கவில்லை. ட்ரம்ப் இதற்காக அலட்டிக்கொண்ட மாதிரியும் தெரியவில்லை.

ஜனவரி 21 அன்று அமெரிக்காவில் முதல் கொரோனா மரணம் நிகழ்ந்தது. அடுத்த நாள் சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் ட்ரம்ப், ‘அது ஒரு சிறிய அளவிலான சம்பவம், மரண மடைந்தவர் சீனாவிலிருந்து வந்தவர், இங்கே எல்லாம் கட்டுக்குள்தான் இருக்கின்றன’ என்றார்.  ஜனவரி 24 அன்று சீனாவிற்கும், அதற்குச் சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு பிப்ரவரி 24 அன்று உலக சுகாதார அமைப்பிற்கும் ட்ரம்ப் நற்சான்றிதழ் வழங்கினார்- கொரோனாவைச் சிறப்பாகக் கையாளுவதற்காக.

பிப்ரவரி மாதம் கடைசியில், ‘எல்லோரும் பாருங்கள், இந்த வைரஸ் ஏப்ரலில் மாயமாய் மறைந்துவிடும்’ என்று ஆரூடம் சொன்னார்.  மார்ச் மாதத்தில்கூட, ‘மக்களே, ஒன்றும் ஆகாது’ என்று அபயம் வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் ஜனவரி மாதத்திலேயே வைரஸின் கொடுங் கரங்கள் எவ்வளவு தூரம் நீளும் என்று வல்லுநர்கள் ட்ரம்ப்புக்கு அறிவுரை வழங்கியிருந்தனர். மே 21ஆம் தேதியளவில் உலகெங்கும் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டி விட்டது. இதில் 31% பேர் அமெரிக்கர்கள். உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றேகால் லட்சத்தைத் தாண்டிவிட்டது. இதில் 28% பேர் அமெரிக்கர்கள்.

வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா இழந்த உயிர்களைக் காட்டிலும் கொரோனாவில் அதிக உயிர்களை இழந்திருக்கிறது. இப்போது விமர்சனங்கள் ட்ரம்ப்பை நோக்கிப் பாய்கின்றன. போதாக்குறைக்கு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல்வேறு வருகிறது. அதனால்தான் பழியை உலக சுகாதார அமைப்பின் மீது சுமத்துகிறார் ட்ரம்ப். இது முதல் தரப்பின் வாதம்.

World health organization
World health organization

இரண்டாவது தரப்பினர் சொல்வதென்ன? டிசம்பர் 2019-ன் கடைசி நாளன்று வூகான் நகரில் புதியவகைக் கொரோனா வைரஸ் தட்டுப்படுவதாகச் சீனா அறிவித்தது. உலக சுகாதார அமைப்பு அப்போதே விழித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஜனவரி மத்தியில்கூட ‘கொரோனா மனிதர் களிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றும் என்பதற்கு ஆதாரமில்லை’ என்றுதான் சீனா சொல்லிக் கொண்டிருந்தது. பயணக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. அம்மாத இறுதியில்தான் இது ஓர் உலக சுகாதார நெருக்கடி என்று அறிவித்தது. எனில், கொரோனாவைக் கொள்ளை நோய் என்று அறிவிக்க மேலும் 40 தினங்கள் எடுத்துக்கொண்டது. அப்போது கொரோனா 130 நாடுகளுக்குப் பரவியிருந்தது. எல்லாவற்றுக்கும் காரணம் சீனாவின் மெத்தனம். இது இரண்டாம் தரப்பு.

முதல் தரப்பினரின் குற்றச்சாட்டு அமெரிக்கா தொடர்பானது. அதன் அதிபர் தொடர்பானது. அதை அமெரிக்கர்கள் பார்த்துக் கொள்ளட்டும். அதை இப்போதைக்குத் தள்ளி வைப்போம். எனில், உலக சுகாதார அமைப்பு உலகம் முழுமைக்கு மானது. உலகம் முழுமைக்கும் சுகாதார ரீதியாகத் தலைமை யேற்கவும் வழிகாட்டவும் கட்டமைக்கப்பட்டது. ஆகவே நாம் இரண்டாம் தரப்பினரின் குற்றச் சாட்டைப் பார்க்கலாம். உலக சுகாதார அமைப்பு என்ன செய்திருக்க வேண்டும்?

உலக சுகாதார அமைப்பு தனது உறுப்புநாடுகளை, குறிப்பாகச் செல்வாக்கு மிக்க உறுப்புநாடுகளைச் சார்ந்திருக்கிறது, ஆகையால் அதனால் சுயேச்சையாக இயங்கிவிட முடியாது. இப்படிச் சொல்பவர் சசி தரூர். அவர் சொல்வதற்கு நாம் காதுகொடுக்க வேண்டும். அவர் ஓர் அறிவுஜீவி என்பதாலோ காங்கிரஸின் முன்னணித் தலைவர் என்பதாலோ அன்று. அவர் ஐக்கிய நாடுகள் சபையில் 28 ஆண்டுகள் பணியாற்றியவர். ஐநாவின் ஓர் அங்கம்தான் உலக சுகாதார அமைப்பு. பலரும் மறந்து போயிருக்கலாம். 2006ஆம் ஆண்டு சசிதரூர் ஐநாவின் பொதுச் செயலர் பதவிக்கு இந்தியாவின் வேட் பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது வெற்றி ஈட்டிய நாடுகளால் ஐநா உருவாக்கப் பட்டது. நேச நாடுகளில் முன்னணி வகித்த அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளும் ஐநா பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பினர் களாகின. பின்னாளில் சீனாவும் சேர்ந்துகொண்டது. இந்த ஐந்து நாடுகளுக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் உண்டு. இதன்மூலம் எந்தத் தீர்மானத்தையும் தடுத்துநிறுத்த முடியும். ஐநா பொதுச் செயலருக்கான தேர்தலில் இந்த ஐந்து நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் எதிர்ப்பு வாக்கைப் பெற்றாலும் அந்த வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேற வேண்டும். அதுவே விதி. 2006-ல் சசி தரூர் அங்ஙனம் வெளியேற நேர்ந்தது. அது முன்னோட்டத் தேர்தல். ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. தரூருக்கு எதிராக எந்த ‘வீட்டோ’ தேசம் எதிர்ப்பு வாக்கை அளித்தது என்று அப்போது தெரியவில்லை. பல அரசியல் வல்லுநர்கள் அது சீனாதான் என்று எழுதினார்கள். ஐநாவுக்கான அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜான் போல்டன் பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2016-ல் தனது சுயசரிதையை வெளியிட்டார். அதில் பூனைக்குட்டி வெளியே வந்தது. தரூரை எதிர்த்தது அமெரிக்காதான் என்று எழுதினார் போல்டன். ஏன் எதிர்த்தது அமெரிக்கா?

அதற்கான காரணத்தை ‘ஓர் அமெரிக்க அதிகாரி’ பின்னாளில் தரூரிடமே சொல்லியிருக்கிறார். இன்னொரு கோஃபி அன்னான் பதவிக்கு வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதே அந்தக் காரணம். அன்னான் 1997 முதல் 2006 வரை ஐநாவின் செயலராக இருந்தவர். அவர் அமெரிக்காவின் நல்ல நண்பராகத்தான் இருந்துவந்தார். ஆனால் ஒரு முறை அமெரிக்காவின் ஈராக் யுத்தம் சட்ட விரோதமானது என்று சொல்லிவிட்டார். அதுமுதல் அமெரிக்காவின் பகையாளியானார். தரூர் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவரும் அமெரிக்காவிற்கு அனுசரணையாகவே இருந்திருப்பார். அப்படித்தான் இருக்க முடியும். ஆனால் தரூரைவிட பான் கீ மூன் கூடுதல் விசுவாசியாக விளங்குவார் என்று அமெரிக்கா கருதியிருக்கலாம். ஐநாவும் அதன் கீழுள்ள உலக சுகாதார அமைப்பு உட்பட்ட எல்லா அமைப்புகளும் சுதந்திரமானவையோ சுயேச்சையானவையோ அல்ல. வளமும் வலிவும் மிக்க நாடுகளே ஐநாவின் எல்லா அமைப்புகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த அமைப்புகள் தமக்குமுன் கிழிக்கப்பட்டிருக்கும் கோடுகளிலிருந்து சிறிது விலகினாலும் அதைச் செல்வமும் செல்வாக்கும் மிக்க நாடுகளால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதனால்தான் ட்ரம்ப் சினக்கிறார். அந்தச் சினம் அவரது குற்றங்குறைகளை மறைக்கவும் பயன்படுகிறது.

உலகமே வேடிக்கை பார்க்குது
உலகமே வேடிக்கை பார்க்குது

லான்செட் ஆசிரியர் மே.19 அன்று ட்ரம்புக்கு வெளியிட்ட மறுப்புரையில் உலக சுகாதார அமைப்பை வலுவாக்க வேண்டிய தருணத்தில் ட்ரம்ப் இப்படிப் பேசுவது துரதிர்ஷ்ட வசமானது என்றும் சொல்லியிருக்கிறார். ட்ரம்ப்பின் போக்கு மனிதகுல மேம்பாட்டிற்கு எதிரானது என்று சொல்லும் பல வல்லுநர்கள், உலக சுகாதார அமைப்பு இன்னும் தீர்மானகரமான தலைமையை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் செல்வாக்கான நாடுகளைச் சார்ந்தி ருக்கும் அமைப்பால் அப்படியான தலைமையை இன்றைய சூழலில் வழங்க முடியுமா என்பது ஐயமே.