Published:Updated:

வந்தே பாரத்: தவிக்கும் தமிழர்கள்... மலைக்க வைக்கும் கட்டணக் கொள்ளை... கண்டுகொள்ளாத அரசு!

வெளிநாடுகளில், வசிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக, மத்திய அரசு 'வந்தே பாரத்' எனும் திட்டத்தைக் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் பல நூதன மோசடிகள் நடந்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''தமிழக அரசு சரியான பட்டியல் அளிக்காகதுதான் காரணம்" என பா.ஜ.கவும்'' மத்திய அரசு சரியான நேரத்தில் ஒத்துழைக்காததுதான் காரணம்'' என அ.தி.மு.க-வும், ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்க, குவைத், துபாய், சிங்கப்பூர், மலேசியா என உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

அரேபிய நாடுகளில், வேலையிழப்பால் கையில் பணமின்றி, ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட சிரமப்பட்டு வருகிறார்கள் பலர். அங்கிருக்கும் தமிழ் அமைப்புகள், இஸ்லாமிய இயக்கங்களின் உதவியோடு உயிர் பிழைத்து வருகின்றனர். வேலையிழந்து தங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் செய்திகள் வருகின்றன.

வந்தே பாரத் திட்டம்
வந்தே பாரத் திட்டம்

வெளிநாடுகளில், வசிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக, மத்திய அரசு 'வந்தே பாரத்' எனும் திட்டத்தைக் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நாடு முழுவதும், இதுவரை (3 ஜூலை) 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, நேற்றுவரை (ஜுலை 16), 34,362 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். பதிவு செய்துவிட்டு, இன்னும் 22.320 பேர் காத்திருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, வந்து சேர்ந்தவர்களிலும், மூன்றில் ஒரு பகுதியினர், தாங்கள் வழக்கமாகச் செலுத்தும் தொகையைவிட மூன்று நான்கு மடங்கு அதிகமாகக் கட்டணம் செலுத்தி சிறப்பு விமானங்களின் மூலமாகத் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

விமானக் கட்டணத்துடன், இங்கு வந்து கோவிட் பரிசோதனை செய்துகொள்வதற்கு, 7 நாள்கள் ஹோட்டலில் தங்குவதற்கு என அங்கேயே ஒரு பேக்கேஜாகப் பணம் செலுத்த நிர்பந்திக்கப்படுகின்றனர். அது அவர்கள் வழக்கமாகச் செலுத்தும் கட்டணத்தைவிட நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகப் புலம்புகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். அரசின் இலவசப் பரிசோதனைகள் இருக்கும்போது, கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்வதற்கு அங்கேயே பேசி முடித்துவிடுகிறார்கள். பரிசோதனை செய்துகொள்வதற்கு மட்டுமே 4,000 ரூபாய்; ஹோட்டலில் தங்க நாளொன்றுக்கு 2,500 ரூபாய் எனக் கட்டணம் வசூலித்துவிடுகின்றனர். அந்த ஹோட்டல்களிலும் முறையான சாப்பாடு வசதிகூட செய்துதரப்படுவதில்லை. உயிர் பிழைத்தால் போதும் என அங்கிருந்து தப்பித்து வர நினைப்பவர்களின் அச்சத்தைப் பயன்படுத்தி, பணம் பறிப்பதிலும் ஒரு கும்பல் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. துபாய், குவைத், ரியாத், மஸ்கட், சிங்கப்பூர், மலேசியா, செசல்ஸ் என உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் இதேநிலைதான்.

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது ஃபாசில் இது குறித்து நம்மிடம் பேசும்போது,

"வந்தே பாரத் திட்டத்தில் சாதாரண ஃப்ளைட்டில் டிக்கெட் கிடைக்கவில்லை. தமிழர்களை மட்டும் திட்டமிட்டு ஒதுக்குவது போல் நடந்துகொண்டார்கள். அதனால் சிறப்பு விமானத்தில் செல்லலாம் என முடிவெடுத்தோம். டிக்கெட் புக் செய்வதற்கு இந்தியம் எம்பஸியில் ஒரு டிராவல்ஸைத் தொடர்புகொள்ளச் சொன்னார்கள் அங்கே டிக்கெட்டுக்கு, கொரோனா டெஸ்ட்டுக்கு, தமிழ்நாடு வந்து ஏழு நாள்கள் தங்குவதற்கு என மொத்தமாக 47,000 பணம் வாங்கினார்கள். நார்மலாக இங்கு வருவதற்கு 12,000 தான் செலவாகும். பணம் கட்டியதற்கு எங்களுக்கு எந்த ரசீதும் கொடுக்கவில்லை. ஊருக்கு வந்தால் போதுமென நாங்களும் எதுவும் கேட்காமல் வந்துவிட்டோம். இன்னும் அங்கு பலர் வேலையில்லாமல், சாப்பாடு இல்லாமல், இந்தியா வர டிக்கெட்டுக்குப் பணம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்'' என்கிறார் வேதனையோடு.

டிக்கெட்
டிக்கெட்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலூரைச் சேர்ந்த கலீல் என்பவர், ''90 வெள்ளிக்குக்கூட நான் மலேசியாவில் இருந்து இங்கு வந்திருக்கிறேன். அதிகபட்சமாக 300 வெள்ளி வரை ஆகியிருக்கிறது. ஆனால், இந்த முறை 870 வெள்ளி செலுத்திதான் அங்கிருந்து இங்கு வந்தேன். வந்ததும், டெஸ்ட்டுக்கு, ஹோட்டலில் தங்குவதற்கும் தனியாகப் பணம் பறித்துவிட்டனர்'' என்கிறார் குமுறலோடு.

மேலும், இதுகுறித்து நம்மிடம் செசல்ஸ் நாட்டைச் சேர்ந்த திரிபுர சுந்தரி பேசும்போது,

"தமிழர்கள், வட இந்தியர்கள் என ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இங்கு வாழ்ந்து வருகிறோம். கொரோனா காரணமாகப் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் இங்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், சொந்த நாடுகளுக்குத் திரும்ப இந்தியன் ஹை கமிஷனில் பதிவு செய்துவைத்திருந்தார்கள். ஒருநாள் ஹை கமிஷனில் இருந்து அறிவிப்பு வெளியானது. மும்பை மற்றும் சென்னைக்குச் செல்லவிரும்புவர்கள், சத்குரு டிராவல்ஸ் எனும் டிராவல்ஸை தொடர்பு கொள்ளச் சொல்லியிருந்தார்கள். செசல்ஸில் அதற்கு முன்பாக அந்தப் பெயரில் ஒரு டிராவல்ஸை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அந்த முகவரியில் சென்று பார்த்தபோது, வட இந்தியர்கள் சிலர் அந்த டிராவல்ஸை நடத்தி வந்தனர். வழக்கமான கட்டணத்தை விட நான்கு மடங்கு அதிகமான கட்டணத்தை வசூலித்துவிட்டனர். தமிழர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்து அதை வட இந்தியர்களுக்குப் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளனது. தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் அவர்.

`வந்தே பாரத்'... வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் என்னென்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வந்தே பாரத் திட்டத்தில் இலவசமாக அழைத்து வர வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அதேபோல. வெளிநாடுகளில் இருந்து திரும்புவர்களில், அந்தந்த நாடுகளில் பரிசோதனை செய்து நெகட்டிவ் என முடிவு வந்தவர்களை நேரடியாக வீட்டுக்குச் சென்று தனிமைப்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். கேரளாவில் இந்த வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. அதோடு, ''மூன்று நாள் டாஸ்மாக் வருமானத்தைச் செலவு செய்தாலே போதும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை இலவசமாகவே அழைத்து வந்துவிடலாம்'' என்கிறார் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி.

இதுகுறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர், கோவை செல்வராஜிடம் பேசினோம்,

''இப்போதுதான் எங்களுக்கு இதுபோல அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்துள்ளது. யாரும் எங்களிடம் இதுகுறித்து புகார் கூறவில்லை. கண்டிப்பாக இந்த விஷயத்தை முதல்வரின் கவனத்துக்கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு உரிய நேரத்தில் விமான வசதிகளை ஏற்படுத்தித் தந்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது என்கிறார்'' கோவை செல்வராஜ்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இந்த நிலையில், பா.ஜ.க-வின் மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். ''உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு விமானத்திலும் நடு இருக்கை இலவசமாகத்தான் கொடுக்கப்படுகிறது. பேன்டமிக் நேரத்தில் கூடுதல் கட்டணம் என்பது தவிர்க்க முடியாதது. நல்லபடியாக நாட்டுக்குத் திரும்பி வருவதே பெரிய விஷயம். கட்டணம் குறித்து நம் நாடு மட்டும் முடிவு செய்ய முடியாது. தவிர, தமிழக அரசு முறையான பட்டியலை சரியான நேரத்தில் வழங்கியிருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. தொடர்ந்து இந்த விஷயத்தில் மத்திய அரசின் மீது அவதூறு பரப்பி வருகிறது தமிழக அரசு. அதில் எள்ளளவும் நியாயமில்லை.

தமிழ்நாட்டுக்கு எவ்வளவு விமானம் வேண்டுமானாலும் ஒதுக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், இதுவரை முறையான பட்டியல் எதுவும் தரவில்லை. கடந்த வாரம்கூட பிரதமருக்குக் கடிதம் எழுதிய முதல்வர், "இரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களைக் காப்பற்ற வேண்டும்'' என எழுதுகிறார். விமானம் வேண்டும் எனக் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். முறையான பட்டியல் கொடுத்தால்தான் அதற்கேற்ப விமாங்களை ஒழுங்குபடுத்த முடியும்'' என்கிறார் வானதி சீனிவாசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு