Published:Updated:

உக்ரைன் - தியாக தேசத்தின் வரலாறு 3: விளாதிமிர் ஜெலன்ஸ்கி: ஆட்சியைப் பிடித்த காமெடியன்!

Volodymyr Zelenskyy | விளாதிமிர் ஜெலன்ஸ்கி

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து உக்ரைன் உருவான காலத்திலிருந்து ஊழல் அரசியல்வாதிகளையே பார்த்து அலுத்துப் போயிருந்த மக்களுக்கு விளாதிமிர் ஜெலன்ஸ்கி வித்தியாசமானவராகத் தெரிந்தார்.

உக்ரைன் - தியாக தேசத்தின் வரலாறு 3: விளாதிமிர் ஜெலன்ஸ்கி: ஆட்சியைப் பிடித்த காமெடியன்!

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து உக்ரைன் உருவான காலத்திலிருந்து ஊழல் அரசியல்வாதிகளையே பார்த்து அலுத்துப் போயிருந்த மக்களுக்கு விளாதிமிர் ஜெலன்ஸ்கி வித்தியாசமானவராகத் தெரிந்தார்.

Published:Updated:
Volodymyr Zelenskyy | விளாதிமிர் ஜெலன்ஸ்கி
'முதல்வன்' படத்தில் முதல்வர் ரகுவரனை பேட்டி எடுக்கும் அர்ஜுன், அதன்பின் அரசியலில் நுழைந்து முதல்வர் ஆனதை வெறும் கற்பனை என்று நினைப்பவரா நீங்கள்? நிஜமாகவே அதை நடத்திக் காட்டிய ஒருவர் இருக்கிறார். அவர், உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி.

உக்ரைன் நாட்டின் மிகவும் பிரபலமான டெலிவிஷன் சேனல் ஒன் பிளஸ் ஒன். அந்த சேனலில் ரியாலிட்டி ஷோக்கள் நடத்தி வந்தவர் ஜெலன்ஸ்கி. கூடவே டி.வி தொடர்களிலும் நடித்து வந்தார். 'சர்வன்ட் ஆஃப் த பீப்புள்' என்பது அதில் புகழ்பெற்ற தொடர். அபத்தமான விஷயங்களைச் செய்யும் காமெடியான பள்ளிக்கூட ஆசிரியராக ஜெலன்ஸ்கி அதில் நடித்திருப்பார். நாட்டில் நிலவும் ஊழலைப் பற்றி ஆசிரியர் ஜெலன்ஸ்கி கொந்தளித்துப் பேசும் காட்சியை யாரோ ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டு விடுவார்கள். சோஷியல் மீடியாவில் அது வைரலாகிவிடுகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் மக்கள் அவரையே நாட்டின் அதிபராக்கி விடுவார்கள். அவர் காமெடியாக பல விஷயங்களைச் செய்வதாக இந்தத் தொடர் நீளும்.

Volodymyr Zelenskyy | விளாதிமிர் ஜெலன்ஸ்கி
Volodymyr Zelenskyy | விளாதிமிர் ஜெலன்ஸ்கி
Emilio Morenatti

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான்கு ஆண்டுகள் இந்தத் தொடர் உக்ரைன் மக்களிடம் பாப்புலராக இருந்தது. இந்தத் தொடர் முடிய இருந்த நேரத்தில், 'சர்வன்ட் ஆஃப் த பீப்புள்' தொடரின் பெயரிலேயே கட்சி ஆரம்பித்து, அதிபர் தேர்தலில் நின்று ஜெயித்தும் விட்டார் ஜெலன்ஸ்கி. எந்த அரசியல் அனுபவமும் இல்லாத ஒரு நடிகர், போர்க்காலத்தில் உறுதியான தலைவராக நின்று உக்ரைன் மக்களின் மனதில் இடம்பிடித்து சாதித்துவிட்டார்.

நான்கு கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட உக்ரைனில் யூதர்கள் சுமார் நான்கு லட்சம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். அந்த யூத இனத்திலிருந்து ஒருவர் அதிபராவது சாதாரண விஷயம் இல்லை. உக்ரைனில் அரசியல் அதிகாரம், பாரம்பரியமான பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்தது. அதை மாற்றி எளிய மனிதர்களும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நிரூபித்தவர் ஜெலன்ஸ்கி. அதற்கு ஜெலன்ஸ்கி போன ரூட், வழக்கமான அரசியல் பாதை இல்லை. அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர் ஸ்டாண்ட் அப் காமெடியனாக மக்களை மகிழ்வித்து இருக்கிறார். 'ஜோடி நம்பர் 1' போன்ற நிகழ்ச்சியில் நடனமாடி இருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தெற்கு உக்ரைனில் ரஷ்யர்கள் அதிகம் வாழும் கிரிவி ரிஹ் என்ற நகரில் ஜெலன்ஸ்கி பிறந்தார். ரஷ்ய மொழி பேசுபவராகவே வளர்ந்தார். தலைநகர் கீவ் வந்து சட்டம் படித்தபோது உக்ரைன் மொழியும் ஆங்கிலமும் பேசக் கற்றுக்கொண்டார். இப்போதும் அவருக்கு சரளமாக வருவது ரஷ்ய மொழியே! ஆனால், அவர்தான் இப்போது ரஷ்யாவின் நம்பர் ஒன் எதிரி.

சட்டம் படித்தாலும் நடிப்பதில்தான் அவருக்கு நாட்டம் இருந்தது. க்வார்டால் 95 என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். திரைப்படங்கள், டி.வி நிகழ்ச்சிகள், கார்ட்டூன்கள் தயாரிக்க ஆரம்பித்தது அவர் நிறுவனம். ஒன் பிளஸ் ஒன் சேனலின் உரிமையாளரான இகோர் கலோமாய்ஸ்கி அவரின் திறமையை உணர்ந்துகொண்டார். ஜெலன்ஸ்கியின் எல்லா டி.வி தொடர்களையும் அவர் ஒளிபரப்பினார். அவற்றில் முக்கியமானது, 'சர்வன்ட் ஆஃப் த பீப்புள்' தொடர். 2015 முதல் 2019 வரை அது ஒளிபரப்பானது. உக்ரைன் மக்களில் பலரும் அதைப் பார்க்காமல் தூங்குவதில்லை என்று சொல்லும் அளவுக்கு அது பாப்புலரானது.

Volodymyr Zelenskyy | விளாதிமிர் ஜெலன்ஸ்கி
Volodymyr Zelenskyy | விளாதிமிர் ஜெலன்ஸ்கி

2018ம் ஆண்டு அவரது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலேயே சர்வன்ட் ஆஃப் த பீப்புள் கட்சி என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதையும்கூட ஏதோ டிவி ரியாலிட்டி ஷோ காமெடியாகவே மக்கள் அப்போது பார்த்தனர்.

2019-ல் உக்ரைன் அதிபர் தேர்தல் வந்தது. அப்போது அதிபராக இருந்த பெட்ரோ போரோஷென்கோ புத்தாண்டு உரையை ஒன் பிளஸ் ஒன் சேனலில் நிகழ்த்துவது வழக்கம். தேர்தல் ஆண்டு என்பதால் கொஞ்சம் ஸ்பெஷலாகவே உரையைத் தயாரித்து வந்திருந்தார் பெட்ரோ. அதிபர் பேச ஆரம்பிக்கும் நேரத்தில், மக்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் ஜெலன்ஸ்கி. தான் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து உக்ரைன் உருவான காலத்திலிருந்து ஊழல் அரசியல்வாதிகளையே பார்த்து அலுத்துப் போயிருந்த மக்களுக்கு ஜெலன்ஸ்கி வித்தியாசமானவராகத் தெரிந்தார். அரசியலுக்கு வெளியிலிருந்து வரும் புது மனிதர் தப்பு செய்யமாட்டார் என்று நம்பினார்கள். அதுவே அவரின் பலமானது.

மற்றவர்களைப் போல ஊருக்கு ஊர் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என்று அரசியல் செய்யவில்லை ஜெலன்ஸ்கி. இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும் குட்டிக் குட்டி வீடியோக்கள் பேசி வெளியிட்டார். பிரசாரமே சோஷியல் மீடியாவில்தான் நடந்தது. அரசியல் கட்சி என்றால் கொள்கை இருக்க வேண்டும். 'உங்கள் கொள்கை என்ன?' என்று கேட்டபோது, 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை' என்று வெகுளித்தனமாகச் சொன்னார். ஊழலை ஒழிப்பேன் என்பதைத் தவிர பெரிதாக வாக்குறுதி எதுவும் தரவில்லை. "நிறைய வாக்குறுதி கொடுத்துவிட்டு அதையெல்லாம் செய்யவில்லை என்றால் மக்களுக்கு ஏமாற்றம் ஆகிவிடும். அதனால் நான் எதுவும் வாக்குறுதி தர மாட்டேன்" என்றார்.

Volodymyr Zelenskyy | விளாதிமிர் ஜெலன்ஸ்கி
Volodymyr Zelenskyy | விளாதிமிர் ஜெலன்ஸ்கி
Efrem Lukatsky

மற்ற அரசியல் கட்சிகள் இதையெல்லாம் காமெடியாகவே பார்த்தன. இப்படியெல்லாம் செய்து அரசியலில் ஜெயிக்க முடியுமா என்று சிரித்தார்கள். ஆனால், ஒன் பிளஸ் ஒன் சேனல் அவருக்காக பிரசாரம் செய்தது. சேனலின் உரிமையாளரான இகோர் கலோமாய்ஸ்கி பெரும் பணத்தை வாரி இறைத்தார். தேர்தல் நடந்த வாரத்தில் அந்த சேனலை ஆன் செய்தாலே ஜெலன்ஸ்கியில் நிகழ்ச்சிகள் மட்டுமே ஓடும். விளைவு... 73 சதவிகித வாக்குகளைப் பெற்று ஜெலன்ஸ்கி அதிபரானார். உக்ரைன் வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத பெரும் வெற்றி.

அதிபரான பிறகும் அவர் சோஷியல் மீடியாவில்தான் அரசாங்கத்தை நடத்தினார். முக்கியமான அறிவிப்புகளை இன்ஸ்டாகிராமில்தான் வெளியிடுவார். அவருக்கு டிவி தொடர்களுக்கு வசனம் எழுதிக்கொடுத்த அதே ஸ்கிரிப்ட் குழு, அதிபரின் உரைகளையும் எழுதிக் கொடுக்க ஆரம்பித்தது எங்கும் நடக்காத விநோதம். அவரின் புரொடக்‌ஷன் நிறுவனத்தில் பணிபுரிந்த பலரும் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டனர். ஜெலன்ஸ்கியின் பால்ய நண்பர் ஒருவர், உக்ரைன் உளவுத் துறை பொறுப்புக்கு வந்தார்.

அனுபவம் இல்லாத இவர்கள் பலரும் நிர்வாகத்தை கேலிக்கூத்தாக மாற்றினர். வெளிநாட்டுத் தலைவர்கள், தூதர்கள் பலர் ஜெலன்ஸ்கியிடம் உரையாடிவிட்டு, 'நிஜமாகவே ஒரு அதிபரிடம்தான் பேசினோமா' என்ற குழப்பத்துடன் வெளியில் வந்த வரலாறும் உண்டு. மக்கள் எதிர்பார்த்தது போல ஊழலும் ஒழியவில்லை. நாம் தப்பாக ஒரு காமெடியனைத் தேர்வு செய்துவிட்டோமோ என்று மக்கள் சந்தேகப்பட்ட நேரத்தில்தான் இந்தப் போர் வந்திருக்கிறது.

போர்ச்சூழலில் இந்த 44 வயது நடிகருக்குள் இருந்த தலைவர் வெளிப்பட்டிருக்கிறார். 'நம் இரண்டு நாடுகளுக்குமே போர் தேவைப்படவில்லை. பனிப்போரோ, சுடும் போரோ எதுவும் வேண்டாம்' என்று ரஷ்ய மொழியிலேயே சமாதானம் பேசிப் பார்த்தார். அதையும் தாண்டி ரஷ்யா போரை ஆரம்பித்தபோது, "நாங்கள் கோழைகள் அல்ல, எங்களைத் தாக்கும்போது எங்கள் முதுகைப் பார்க்க மாட்டீர்கள், முகத்தையே பார்ப்பீர்கள்" என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். ரஷ்யாவின் தொடர் அடக்குமுறைக்கு எதிரான உக்ரைன் மக்களின் கோப வெளிப்பாடு அது. இப்போது மக்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள்.

Volodymyr Zelenskyy | விளாதிமிர் ஜெலன்ஸ்கி
Volodymyr Zelenskyy | விளாதிமிர் ஜெலன்ஸ்கி
Emilio Morenatti

ஜெலன்ஸ்கியைக் கொல்வதற்கு ரஷ்யா தனியாக 400 பேர் கொண்ட கூலி ராணுவப்படை ஒன்றை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில், 'பாதுகாப்பாக வெளியேறி எங்களிடம் வந்துவிடுங்கள்' என்று அமெரிக்கா கூப்பிட்டபோதும் அவர் போக மறுத்தார். "இந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்ய வராவிட்டால், அடுத்து போர் உங்கள் வாசலை நோக்கி வரும்" என்று ஐரோப்பிய நாடுகளுக்கு அறைகூவல் விடுத்தார். இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அவருக்குத் துணையாக நிற்கின்றன.

காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறுவதை தமிழ் சினிமாவில் நிறைய பார்த்திருக்கிறோம். உக்ரைனில் ஒருவர் நிஜ ஹீரோ ஆகிவிட்டார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism