அணு ஆயுதப் போர் என்பதை அணுகுண்டுகளை வீசி நடத்தும் தாக்குதலாக மட்டுமே இதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறோம். போர் நிகழும் மண்ணில் அணு மின் உற்பத்தி நிலையம் இருந்தால், அது தாக்குதலுக்கு ஆளானால் என்ன நிகழும் என்ற அபாயத்தை இதுவரை யாரும் யோசித்தது இல்லை. உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்தும் தாக்குதல், இன்று அதை யோசிக்க வைத்திருக்கிறது. இன்று (மார்ச் 4-ம் தேதி) அதிகாலை உக்ரைன் அணு மின் நிலையம் மீது நிகழ்ந்த தாக்குதலும், அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட தீ விபத்தும் ஒட்டுமொத்த உலகத்தையே நடுநடுங்க வைத்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் ஜேபரோஜையா அணு மின் நிலையம் (Zaporizhzhia Nuclear Power Station), ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமாக இருக்கிறது. மொத்தம் ஆறு அணு உலைகள், ஒவ்வொன்றும் தலா 950 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக அங்கு உள்ளன. உக்ரைனின் ஒட்டுமொத்த மின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கை இதுவே தருகிறது. இவற்றில் நான்கு அணு உலைகள் செயல்பாட்டில் இருக்க, இரண்டு அணு உலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதொழில் நகரமான ஜேபரோஜையாவைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில்தான் மார்ச் 4 அதிகாலை இங்கு தாக்குதல் நடந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, "அணுசக்தி பேரழிவால் ஐரோப்பா அழிவதைத் தடுக்க வேண்டும். உலகில் எந்த நாடும் அணு மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை. மனிதகுல வரலாற்றில் முதல்முறையாக ரஷ்யா, அணுசக்தி பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது. உலகத் தலைவர்களே, விழித்துக்கொள்ளுங்கள்" என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது அணு உலை என்பது தெரிந்தே ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தின என்று குற்றம் சாட்டுகிறார் ஜெலன்ஸ்கி. "தெர்மல் இமேஜிங் வசதியுள்ள டாங்கிகள் மூலம்தான் தாக்குதல் நடந்தது. அவர்கள் குறி வைக்கும்போதே அது அணுமின் நிலையம் என்பது தெரிந்திருக்கும்" என்கிறார் அவர்.
தாக்குதலுக்குப் பிறகு அந்த வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உக்ரைன் தீயணைப்புப் படையினரை ஆரம்பத்தில் ரஷ்ய ராணுவம் அங்கே அனுமதிக்கவில்லை. உள்ளே இருப்பது அணு மின் நிலையம் என்பதை உணர்ந்தபிறகு அனுமதி தந்துள்ளனர். "செயல்படாமல் இருந்த அணுமின் நிலையம் ஒன்றுக்கு அருகே இருக்கும் பயிற்சி வளாகமே தீப்பிடித்து எரிந்தது. அணுமின் நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை, அங்கு இருக்கும் பொருள்கள் பாதுகாப்பாக உள்ளன" என்று உக்ரைன் அதிகாரிகள் இப்போது ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்குத் தகவல் தந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகை உலுக்கிய அணு விபத்து நிகழ்ந்த செர்னோபில் நகரிலிருந்து 525 கி.மீ தூரத்தில் இருக்கிறது ஜேபரோஜையா. இந்த அணு மின் நிலைய வளாகத்தில் கதிரியக்க அளவு ஏதும் அதிகரிக்கவில்லை என்று அமெரிக்க அணுசக்தி கண்காணிப்பு மையம் கூறுகிறது. "இந்த அணு உலைகளில் ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால், செர்னோபில் விபத்தைப் போல பத்து மடங்கு அதிகமான பேரழிவு நிகழும்" என்று எச்சரிக்கிறார், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா.
ரஷ்யா - உக்ரைன் போர் உலகையே கவலையில் மூழ்கடித்திருக்கிறது.