சமீப நாள்களாக குரங்கு அம்மை நோய்த்தொற்று மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவில் சுமார் 6,600 க்கும் அதிகமானோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதால் பொது சுகாதார அவரச நிலையை அமெரிக்கா பிரகடனப்படுத்தியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைத் தலைவர் சேவியர் பெசேரா தெரிவிக்கையில், `குரங்கு அம்மை தொற்றுப் பரவலை மக்கள் தீவிரமாகக் கருத வேண்டும். குரங்கு அம்மை வைரஸ் பரவலைத் தடுக்க நாடு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது' என தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்கள் மற்றும் கிளினிக்குகளுக்கு தேவைப்படும் குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசித் தேவையை ஜோ பைடனின் அரசு பூர்த்தி செய்யவில்லை என மக்கள் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக 1.1 மில்லியன் தடுப்பூசிகள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்துள்ளதாகவும், உள்நாட்டில் பரிசோதனை திறன் அளவை வாரத்திற்கு 80,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

`குரங்கு அம்மை நோய்த்தொற்று குறித்த அவசர நிலையை மக்களுக்கு அறிவிப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் தொற்றின் தீவிரம் மக்களுக்குப் புரியும். மேலும் சூழ்நிலையைக் கையாள்வதற்கு அவசர கால நிதியைப் பெறுவதோடு, தொற்று பரவாமல் இருப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்’ என ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் பொது சுகாதார சட்ட நிபுணராகப் பணியாற்றும் லாரன்ஸ் கோஸ்டின் தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மைத் தொற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்தாலும் அமெரிக்காவில் இதுவரை குரங்கு அம்மை இறப்புகள் பதிவாகவில்லை. உலகம் முழுவதிலும் குரங்கு அம்மைத் தொற்று சுமார் 26,000 என பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.