Published:Updated:

காதலி கொலை, மாஸ்க் அணிய தடை, போராட்டத்தை ஒன்றிணைக்கும் சமூக ஊடகங்கள்... இது ஹாங்காங் கள நிலவரம்!

ஹாங்காங் போராட்டம்
ஹாங்காங் போராட்டம்

ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடான ஹாங்காங்கில் நடக்கும் போராட்டம் குறித்து ஹாங்காங்கில் இருக்கும் தமிழரான கரண், விகடனுக்காக எழுதிய சிறப்புப் பதிவு.

ஆசியாவின் மிகப்பெரும் வர்த்தகநாடு எரிந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடந்து ஹாங்காங்கில் நடந்து கொண்டே இருக்கின்றன. அது இந்த வாரம் உச்சத்தை தொட்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு கல்லூரி மாணவன் போலீஸாரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் இறந்துவிட, போராட்டம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்த ஹாங்காங் சீனாவிடம் 1997-ல் ஒப்படைக்கப்பட்ட பிறகு ஒப்பந்தப்படி `ஒரு நாடு; இரு சட்டம்’ முறை பின்பற்றப்படும் என அறிவித்தது சீனா. இதன்படி ஹாங்காங் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தன்னிச்சையாக ஜனநாயக நாடாக இயங்கும்.

ஹாங்காங் போராட்டம்
ஹாங்காங் போராட்டம்

அப்படி சீனா அறிவித்தாலும் தன் ஆதிக்கத்தை ஹாங்காங் மீது செலுத்தியே வந்தது. வெளியிலிருந்து பார்க்க சீனா, ஹாங்காங் இரண்டும் ஒன்று போல தெரிந்தாலும் உள்ளே நிறைய வேறுபாடுகள் உண்டு. மொழி பழக்கவழக்கம் உட்பட. பொதுவாக பெரும்பாலான ஹாங்காங் மக்களுக்கு சீனர்களைப் பிடிப்பதில்லை. ஹாங்காங் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்ததால் அவர்களின் பழக்கவழக்கம் மேலைநாடுகளை ஒத்திருக்கிறது. சீனர்களைப் போல் அல்லாமல் ஹாங்காங் மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். பேச்சுரிமை உண்டு. இதனால் வீடு தொழில் முதலீடு என சீனாவிலிருந்து ஹாங்காங்கிற்குக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. சீனா ஹாங்காங்கை இணைக்கும் உலகின் நீளமான கடற்பாலம் மற்றும் அதிவேக ரயில் என சீனா ஹாங்காங்கைப் புதுப்புது கட்டுமானங்கள் உதவியுடன் நெருக்கத்திலேயே வைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு ஜோடி, தைவானுக்குச் சுற்றுலா செல்ல, சென்ற இடத்தில் காதலி வேறு ஒருவருடன் ஏற்கெனவே தொடர்பில் இருந்து கர்ப்பமாக இருப்பது தெரியவரவே காதலன் ஆத்திரத்தில் காதலியைக் கொலைசெய்து சூட்கேஸில் அடைத்து ஆற்றில் வீசிய சம்பவம் நடந்தது. காதலன் மட்டும் நாடு திரும்பவே பெண்ணைக் காணவில்லை எனப் பெற்றோர் புகார் அளிக்க அந்தப் பெண்ணின் கிரெடிட் கார்டை காதலன் பயன்படுத்துவது தெரியவந்தது. காதலனிடம் விசாரணை நடத்தியதில் கொலைச் சம்பவம் வெளியே தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் கிரெடிட் கார்டை தவறாகப் பயன்படுத்தியற்கு மட்டுமே காதலனைத் தண்டிக்கமுடியுமே தவிர கொலைக்கு ஹாங்காங் நீதிமன்றத்தால் தண்டிக்க முடியாது.

ஹாங்காங் போராட்டம்
ஹாங்காங் போராட்டம்

ஏனெனில் கொலை நடந்தது தைவானில். ஹாங்காங் தைவான் இடையே extradition எனப்படும் குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்புவிக்கும் உடன்பாடு இல்லை. இதனால் இரு நாடுகளுக்கிடையே அதற்கான ஒப்பந்தம் நிறைவேற்ற முடிவானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் சீனாவும் தன்னை இணைத்துக்கொண்டது. இங்கு ஆரம்பித்தது சிக்கல். இந்த ஒப்பந்தத்தில் சீனா இணையும் பட்சத்தில் ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்கள் சீனாவிற்கு நாடு கடத்தப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. சீனாவின் அடக்குமுறை உலகம் அறிந்ததே. உடனே ஒரு மில்லியன் மக்கள் வீதியில் இறங்கினார்கள். ஆரம்பத்தில் அமைதியாக சென்ற போராட்டம் பின்னர் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறையாக வெடித்தது. போலீஸ் அடக்குமுறையைக் கையாண்டது. பல ஆயிரம் போராட்டக்காரர்களை அதிரடியாக கைது செய்தது.

ஹாங்காங் போலீஸ் உடையில் சீனா தனது ராணுவத்தை அனுப்பியதாகக்கூட மக்கள் நம்புகிறார்கள். தொடர் போராட்டத்திற்குப் பிறகு இந்தத் தீர்மானத்தை நிறுத்திவைப்பதாக அரசு அறிவித்தது. ஆனாலும் போராட்டம் நின்றபாடில்லை. தீர்மானத்தை முழுவதுமாக கைவிடவேண்டும், இதுவரை போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், போராட்டக்காரர்களை கலகக்காரர்கள் என வகைப்படுத்தக்கூடாது, ஹாங்காங் Chief executive ஆக இருக்கும் Carry Lam பதவி விலக வேண்டும் என்பது போன்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது.

ஹாங்காங் போராட்டம்
ஹாங்காங் போராட்டம்

ஆனால் போராட்ட வீரியம் முன்பை விட குறைந்திருந்தது. இதனிடையே அக்டோபர் மாதம் Anti Mask Law என்ற ஒன்றை அரசு அறிவித்தது. இதன்படி முகமூடி அணிய தடை விதிக்கப்பட்டது, மீறினால் ஆறு மாதச் சிறை மற்றும் அபராதம் விதிப்பதாக அறிவித்தது. மீண்டும் போராட்டம் பெருமளவில் வெடிக்கத் தொடங்கியது. அனைத்துப் போக்குவரத்து வழிகளையும் முடக்கினார்கள். மெட்ரோ ரயில் நிலையங்கள் தீக்கிரையாயின. ஹாங்காங் ஸ்தம்பித்தது. நீங்கள் ஹாங்காங்கிற்குப் பயணித்திருந்தால் புரிந்திருக்கும், அங்குள்ள மக்கள் பெரும்பாலும் எந்த வம்புக்கும் போகமாட்டார்கள். கனிவாகப் பேசுவார்கள், பேருந்துகளில் ரயில்களில், நடக்கையில், வரிசையில் நிற்கையில் செல்போனிலே மூழ்கியிருப்பார்கள். ஒரு ஸ்மார்ட்போன் ஜோம்பிகளாகவே காட்சியளிப்பார்கள். ஆனால், இந்தச் சுதந்திரம் பறிபோகும் என்ற நிலைவரும்போது வெறிகொண்டு எழுகிறார்கள். அவர்களின் போராட்ட யுக்தி பிரமிக்க வைக்கிறது.

இந்தப் போராட்டத்திற்குத் தலைமை என்று யாருமில்லை. தன்னிச்சையாகவே சோஷியல் மீடியா மூலமே ஒன்றிணைகிறார்கள். டெலிகிராம் போன்ற மொபைல் ஆப்களிலே பேசிக்கொள்கிறார்கள். போராட்டத்தில் பெருமளவில் பெண்களும் கலந்துகொள்கிறார்கள். கல்லூரிப் பெண்கள், போராட்டம் நள்ளிரவை தாண்டினாலும் களத்தில் நிற்கிறார்கள். ஒற்றுமையாகப் போராடுகிறார்கள். அனைத்திற்கும் ஆயத்தமாக இருக்கிறார்கள். இதற்கு டெக்னாலஜியும் பெருமளவு கைகொடுக்கிறது. நொடிப்பொழுதில் ஒன்றிணைகிறார்கள். ஒருவரை ஒருவர் போலீஸிடமிருந்து காக்கிறார்கள். உடைந்த கற்களைக் கொண்டு சாலையின் குறுக்கே மதில் சுவர் எழுப்புகிறார்கள்.

Vikatan
ஹாங்காங் போராட்டம்
ஹாங்காங் போராட்டம்

`Hong kong is not China' எனப் பின்வாங்காமல் சண்டையிடுகிறார்கள். மாணவர்கள் பள்ளிகளைப் புறக்கணிக்கிறார்கள், சீருடையுடனே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். பெற்றோர்களும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். சாலை எங்கும் கண்ணீர்ப் புகைக்குண்டு, ரப்பர் புல்லட் மழை பொழிகிறது. வீட்டின் ஜன்னலைத் திறந்தால் கண்ணீர்ப்புகையை உணரமுடிகிறது. காலை அலுவலகம் செல்கையில் சாலையில் எரிந்துகொண்டிருக்கும் குப்பைத்தொட்டிகளையும் பெயர்த்தெடுக்கப்பட்ட தடுப்புகளையும் தாண்டியே மக்கள் பயணிக்கிறார்கள். நகரமே யுத்தகளமாக காட்சியளிக்கறது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. இரண்டு மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிட்டது. சுற்றுலாத்தலங்கள் காற்று வாங்குகின்றன. பொருளாதாரம் மந்தநிலையை அடைகிறது. மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கல்லூரி மாணவனின் மரணத்திற்குப் பிறகு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. முதலில் பல்கலைக்கழகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இரு நகரங்களை இணைக்கும் முக்கியமான சாலை, tunnel-ஐ முடக்கினர். இவர்களின் கோரிக்கை கைது செய்தவர்களையாவது விடுதலை செய் என்பதே. அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை. போராட்டம் மேலும் தீவிரமடைகிறது. நகரமே முடங்கினாலும் பெரும்பாலான மக்கள் ஆதரவு இவர்களுக்கு இருக்கிறது; அதே சமயம் எதிர்ப்பும் இருக்கிறது. எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் மூத்த தலைமுறையினர். இரு தலைமுறையினருக்கும் அரசியல் பார்வை வேறு வேறாக இருக்கிறது.

ஹாங்காங் போராட்டம்
ஹாங்காங் போராட்டம்
'எது சாத்தியமோ அதை ஆயுதமாக மாற்று..!' ஹாங்காங் போராட்டத்துக்கு கைகொடுத்த ஆப்

பல வீடுகளில் தந்தை மகன் அரசியல் கருத்துகளால் பேசிக்கொள்ளாமலும் வீட்டை விட்டு வெளியேறுவதும் நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் வீடுகளின் விலை 250 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. நகரத்தில் ஒரு 400 sq.feet அளவுள்ள சிறிய பிளாட் பத்து மில்லியன் டாலரைத் தொடுகிறது. இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய். பெரும்பாலான சீனப் பணக்காரர்கள் ஹாங்காங்கில் வீடுகளை வாங்கிக்குவிப்பதால் உள்நாட்டவருக்கு சொந்த வீடு கனவாகிறது. அப்படியே வீடு வாங்கினாலும் வாழ்நாள் முழுவதும் தவணை செலுத்தவேண்டி வரும். அரசாங்கம் வீடு வழங்கும்; ஆனால் அவ்வளவு சுலபமாக கிடைக்காது. சீனாவின் அடக்குமுறையும் இவர்களுக்கு ஆகாது.

சீனாவில் Face recognition system மூலம் புகைபிடிப்பது போன்ற பொது விதிமீறுபவர்கள் மீது பாயின்ட் சிஸ்டம் மூலம் வீடு வாங்கவோ விமானத்தில் பயணிக்கவோ தடைவிதிக்கப்படுகிறது. கழிவறையில் அதிகம் பேப்பர் உபயோகிப்பவர்கள் கண்காணிக்க கூட இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இதனாலயே சீனா மீது ஒருவித வெறுப்புடனே இருக்கிறார்கள் இளம் தலைமுறையினர். இப்படியாக இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறது ஹாங்காங். கூகுள் மேப்பில் ரெஸ்டாரன்டைத் தேடினால் மஞ்சள் ஊதா வண்ணங்களில் காட்டும். மஞ்சள், போராட்டக்காரர்களுக்கு ஆதரவான உணவகங்கள். ஊதா அரசாங்கத்திற்கு ஆதரவாக. இவர்கள் அங்கு செல்லமாட்டார்கள்; அவர்கள் இங்கு வரமாட்டார்கள்.

போராட்டத்தின்போது ஹாங்காங்கில் உணவகங்கள், மேப்பில் வண்ணங்களில் பிரித்துக் காண்பிக்கப்படுகின்றன.
போராட்டத்தின்போது ஹாங்காங்கில் உணவகங்கள், மேப்பில் வண்ணங்களில் பிரித்துக் காண்பிக்கப்படுகின்றன.

பச்சை வண்ணம் எந்த வித அரசியல் நிலைப்பாடும் இல்லாத உணவங்கள். ஊதா வண்ண உணவங்கள் சீன ஆதரவில் இயங்குபவை. இவை ஆங்காங்கே உடைக்கப்படுவதும் உண்டு. சீன சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே `திரும்பிப் போ’ என்ற கோஷத்துடன் எதிர்ப்பை சந்திக்கிறார்கள். சீனாவில் ஹாங்காங் சுற்றுலா பாதுகாப்பானது அல்ல என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இத்தனை போராட்டங்களையும் சீனா வேடிக்கை பார்க்கிறது. நிலைமை படுமோசமானால் ஹாங்காங்கை இப்போதே இணைத்துவிடலாம் போன்ற பல ஆதாயங்கள் உண்டு. அரசும் சரி போராட்டக்காரர்களும் சரி, பின்வாங்குவதாக இல்லை. போராட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறியும் இல்லை. அழகான சுற்றுலா நகரம் எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டம், குற்றவாளிகளை அயல்நாட்டிடம் ஒப்புவிக்கும் உடன்பாட்டுக்குக்கு எதிராக இருந்தாலும் ஹாங்காங் மக்களின் விருப்பம் சீன ஆதிக்கத்திலிருந்து விலகி தனி சுதந்திர நாடாக இயங்கவேண்டும் என்பதே.

அடுத்த கட்டுரைக்கு