Published:Updated:

வெளிநாட்டு மாணவர்களைக் கழட்டிவிடுகிறதா அமெரிக்கா... கள நிலவரம் என்ன?

அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்
அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்

அமெரிக்காவில் 5.5 சதவிகித மாணவர்கள் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து தங்கிப் படிக்கின்றனர். இவர்கள் திரும்பவும் சொந்த நாட்டுக்கே சென்று இணைய வகுப்புகளில் படிப்பது என்பது இயலாத காரியம்.

அமெரிக்க அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்தான் ஹெச் 1 பி விசா மற்றும் இதர தற்காலிக விசாக்களுக்கான தடையை விதித்தது. இதன்மூலம் அடுத்த ஆறு மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31, 2020 வரை யாரும் புதிதாக இத்தகைய விசாக்களை பெற்று அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு உயர்கல்வி படித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக, அமெரிக்காவில் தங்கிப் படிப்பதற்கு வெளிநாட்டு மாணவர்கள் எஃப் 1 விசா மற்றும் எம் 1 விசா ஆகிய இரு விசாக்களில் செல்வர். எஃப் 1 விசா என்பது பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மொழிப் பயிற்சி திட்டம் ஆகியவற்றில் இணைந்து படிப்பவர்களுக்கு வழங்கப்படும் விசாவாகும். எம் 1 விசா என்பது தொழில்துறை கல்விகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்விசாரா நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு வழங்கப்படும்.

அமெரிக்க வெளிநாட்டு மாணவர்கள்
அமெரிக்க வெளிநாட்டு மாணவர்கள்
Chuck Kennedy

கொரோனா காரணமாக இத்தகைய விசா பயனாளர்களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது அமெரிக்க அரசு. இதன்படி அமெரிக்காவில் தங்கிப்படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது அடுத்த செமஸ்டர் பாடங்களை இணையம் மூலம் மட்டுமே முழுமையாகக் கற்றால், அவர்களுக்கு விசா வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உட்பட இதர வெளிநாட்டு மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் இவர்கள்தாம் அதிக அளவில் உள்ளனர். அமெரிக்க அரசின் தகவல்படி கடந்த 2019-ம் ஆண்டில் 46,000 எஃப் விசாக்களும், 714 எம் விசாக்களும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-2019 ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களால் மட்டும் அமெரிக்காவுக்கு $41 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளது. இவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால், கல்விக் கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருக்க மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவுக்கு வெளியே வேறு டைம் ஸோனிலிருந்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க யாரும் விரும்பமாட்டார்கள். இதனால் அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு மாணவர்களிடையே கடும் எதிர்ப்பலை எழுந்துள்ளது.

சீனாவுக்கு அடுத்து இந்திய மாணவர்கள்தான் அதிக அளவில் அமெரிக்காவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசின் இந்த முடிவால் பல்கலைக்கழகங்களும் மாணவர்களுக்காகக் கட்டாயம் திறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கல்லூரிகள் மூடியே இருந்தன. ஆனால், தற்போது அரசின் இந்த முடிவால் இவர்கள் அனைவரும் ஹைபிரிட் திட்டத்தில் பாடங்களை நடத்த முடிவு செய்துள்ளனர். இப்போது வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விசா விதிமுறைகளில், ஹைபிரிட் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் தங்கிப் படிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நேரடியாக வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருக்கும் எஃப் 1 விசா பயனாளர்கள் இரண்டு மூன்று மணி நேரம் இணைய வகுப்புகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்ற வசதியும் இடம்பெற்றுள்ளது. இதோடு ஹைபிரிட் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மூன்று மணி நேரங்களுக்கு மேல் இணைய வகுப்பை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இவர்கள் அவ்வப்போது நேரடியாகக் கல்லூரிகளுக்கும் சென்று பாடங்களைப் படிக்க வேண்டும். இதற்கான சான்றிதழை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அளிக்க வேண்டும். இந்த ஹைபிரிட் திட்டமானது எஃப் 1 விசாவில் ஆங்கில மொழி பயிற்சியினையும், எஃம் 1 விசாவில் தொழில்துறை படிப்பையும் மேற்கொள்பவர்களுக்குப் பொருந்தாது.

ஒருவேளை தாங்கள் படிக்கும் பல்கலைக்கழகங்கள் இந்த வசதிகளை அளிக்கவில்லையெனில் வேறு பல்கலைகழகங்களுக்கு உடனடியாக மாறிக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட வேண்டும். அமெரிக்காவில் 5.5 சதவிகித மாணவர்கள் வெளிநாட்டிலிருந்தே அமெரிக்காவுக்கு வந்து தங்கிப் படிக்கின்றனர். இவர்கள் திரும்பவும் சொந்த நாட்டுக்கே சென்று இணைய வகுப்புகளை எடுப்பது என்பது இயலாத காரியம். பல நாடுகளில் அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற இணைய வசதியும் இல்லை. இத்தகைய காரணங்களால் கொரோனா பாதிப்பு இருந்தாலும் பல்கலைக்கழகங்கள் தற்போது கட்டாயம் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் அரசு தொடர்ந்து விசா விதிமுறைகளை மாற்றி அமைத்தே வந்துள்ளது. இப்போது மீண்டும் கொரோனாவை காரணம் காட்டி மாணவர்களுக்கான விசாக்களிலும் தற்காலிக விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

Trump
Trump
Alex Brandon /AP

இந்த முடிவால் மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் அச்சம் நிலவி வருகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது மற்றொரு அச்சமாகத் தற்காலிக விசா விதிமுறைகளும் இணைந்துள்ளன. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் தங்கள் கல்லூரிகளில் கொரோனா பரவல் அதிகரித்துவிடக் கூடாது என்ற பயத்தில் உள்ளன. இவர்கள் உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மாணவர்கள் அமெரிக்காவில் தங்கிப் படிப்பதற்கு முக்கிய காரணமாக, வேலை வாய்ப்பும் உள்ளது. அமெரிக்காவில் படித்து அங்கேயே பெரும்பாலான மாணவர்கள் வேலைக்கும் சேர்ந்துவிடுவர். இப்போது மீண்டும் சொந்த நாட்டுக்கே வந்து இணையம் மூலம் பாடம் கற்கும் சூழ்நிலை ஏற்பட்டால், வேலைவாய்ப்பும் பறிபோகலாம். இதனால் இக்கட்டான நேரத்தில் இந்த விதிமுறை மாற்றம் தேவையற்றது என அமெரிக்காவில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவருகின்றன.

கொரோனா:`1 கோடி பேர் பாதிப்பு; 5 லட்சம் பேர் பலி!’ - திணறும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா

இதுபற்றி அமெரிக்காவின் பஃவெல்லோவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் சுதர்சன் ரமணி கூறுகையில், "அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இவர்களால் முழுமையாக நேரடி வகுப்புகளை நடத்த முடியாது. அதே சமயம் பல்கலைக்கழகங்கள், இணைய வகுப்புகளை மட்டுமே எடுப்போம் என்று சொல்லிவிட்டால் ஆகஸ்ட் இறுதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அப்படி இல்லையெனில் உடனடியாக வேறு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு இன்னொரு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு மாறும்போது, வீட்டை மாற்றும் செலவு போன்றவை ஏற்படும். அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்குப் பதில் இதைச் செய்யவே பெரும்பாலான மாணவர்கள் விரும்புவர்.

சுதர்சன் ரமணி
சுதர்சன் ரமணி

இப்போது ஆன்லைன், ஹைபிரிட், நேரடி வகுப்பு எனப் பாடங்களைப் படிக்க மூன்று வழிமுறைகள் உள்ளன. ஆன்லைனில் பாடங்களை முழுமையாக இணையத்திலேயே படித்துக்கொள்ள முடியும். ஹைபிரிட் திட்டத்தில் நேரடி வகுப்புகளும் இணைய வகுப்புகளும் கலந்து இருக்கும். நேரடி வகுப்பு திட்டத்தில் நேரடியாகச் சென்றுதான் பாடத்தைக் கற்க வேண்டும். இப்போது பல்கலைக்கழகங்கள் நிச்சயம் மாணவர்களுக்கு உதவுவார்கள் என்றே எதிர்பார்க்கிறோம். கொரோனா அதிகம் பாதித்த பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு இது அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். அரசின் இந்த முடிவால் பல்கலைக்கழகங்கள் ஹைபிரிட் பாட முறையையே பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு