Published:Updated:

யார் இந்த நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி? #SharmaOli #Nepal

நேபாள நாட்டின் அரசியல், சூறாவளியைச் சந்தித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலிக்கு எதிராக நெருக்கடி முற்றும் நிலையில், அவரைத் தூக்கி எறியும் வேலையை மறைமுகமாக இந்தியாவும் செய்ய ஆரம்பித்துள்ளது. யார் இந்த கே.பி.ஷர்மா ஒலி..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``ஜனக்பூரும் அயோத்தியும் இன்று ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். என்னோடு நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இணைந்ததற்கு பெருமை கொள்கிறேன்.” மே 11, 2018-ல் நேபாளத்தின் ஜனக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. இந்து புராணங்களின்படி கடவுள் ராமன் பிறந்த இடமான அயோத்திக்கும் சீதை பிறந்த இடமான ஜனக்பூருக்கும் (இந்நகரம் இப்போது நேபாளத்தில் இருக்கிறது) இடையே பேருந்து வசதியைத் தொடங்கி வைக்கும் விழாவில்தான் பிரதமர் மோடி இப்படி உரையாற்றினார். ராமாயணத்தில் வரும் புனித நகரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை `ராமாயணச் சுற்று’ என்கிற திட்டத்தின் கீழ் சுற்றுலா கேந்திரங்களாக மாற்றும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியது. இதன் ஒரு பகுதியாகத்தான் அயோத்திக்கும் ஜனக்பூருக்கும் இடையே பேருந்து வசதியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஜனக்பூரில் பிரதமர் மோடியுடன் கே.பி.ஷர்மா ஒலி
ஜனக்பூரில் பிரதமர் மோடியுடன் கே.பி.ஷர்மா ஒலி

"ராமன் பிறந்த இடம் அயோத்திதான்” என்று பிரதமர் மோடி உரக்கச் சொல்லியபோது அமைதியாகக் கைதட்டிக்கொண்டிருந்த நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, இன்று ``ராமன் பிறந்த இடம் அயோத்தி அல்ல. நேபாளத்தில்தான் அவர் பிறந்தார்” என்று அந்தர் பல்டி அடிப்பதற்குக் காரணம் தன் பிரதமர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளத்தானே தவிர, நேபாளத்தின் கலாசாரத்தைக் காப்பாற்ற அல்ல. சமீபகாலமாக ஷர்மா ஒலிக்கும் இந்திய அரசுக்கும் நேரடியாகவே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், நேபாள அரசியல் ஆட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

யார் இந்த கே.பி.ஷர்மா ஒலி?

கிழக்கு நேபாளத்தின் ஆத்ரை நகரம்தான் கே.பி.ஷர்மா ஒலி பிறந்த ஊர். இந்தியாவின் உத்தரகாண்ட்டை பூர்வீகமாகக் கொண்ட குமோனி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான ஷர்மா ஒலி, பள்ளிப் படிப்புக்காக ஜப்பா மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்தார். பள்ளியில் படிக்கும்போதே கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட ஒளி, 1970-ல் தன் 18-வது வயதிலேயே நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால், அப்போதிருந்த நேபாள மன்னர் பிரேந்திர பீர் பைக்ராம் ஷா அரசு, இவரை 13 வருடங்கள் சிறைக்கு அனுப்பியது.

கே.பி.ஷர்மா ஒலி
கே.பி.ஷர்மா ஒலி

1987-ல் விடுதலை செய்யப்பட்ட ஒலிக்கு நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது அரசியல் வாழ்க்கைக்கு இதுதான் முதல் ஏணிப்படி. 1990-களில் நேபாளத்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியால், பஞ்சாயத்து முறை ஒழிக்கப்பட்டு தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதும் மன்னராட்சி தொடரத்தான் செய்தது. முதல்முறையாக நடைபெற்ற தேர்தலில், ஜப்பா-6 நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து கே.பி.ஷர்மா ஒலி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் கம்யூனிச பிரதமர் மன்மோகன் அதிகரியின் அமைச்சரவையில் உள்துறை பொறுப்பும் கே.பி.ஒலிக்கு வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2006-ம் ஆண்டு மிகப்பெரிய மாற்றங்கள் நேபாளத்தில் நிகழ்ந்தன. மன்னராட்சி முழுவதுமாக ஒழிக்கப்பட்டு, ராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இடைக்கால அரசியலமைப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் அமைச்சரவையில் துணை பிரதமராகவும் வெளியுறவு இலாகா அமைச்சராகவும் கே.பி.ஷர்மா ஒலி நியமிக்கப்பட்டார். இவருக்கும் சீனாவுக்குமான தொடர்புகள் இறுகத் தொடங்கின. இந்த உறவு அக்டோபர் 2015-ல், ஒலியை நேபாள பிரதமராக அமரவைக்கும் அளவுக்கு சீனாவை காய் நகர்த்த வைத்தது.

கே.பி.ஷர்மா ஒலி
கே.பி.ஷர்மா ஒலி
"ராமர் பிறந்த அயோத்தி நேபாளத்தில் உள்ளது!"- நேபாள பிரதமர் சொன்னது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

அச்சமயத்தில் நேபாளத்தின் மீது இந்தியா விதித்திருந்த தடையை உடைப்பதற்காக, சீனாவுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களில் ஒலி கையெழுத்திட்டார். டெல்லியின் பொறுமை குறைந்துகொண்டே போனது. ஒலிக்கு அளித்து வந்த ஆதரவை சில கட்சிகள் திடீரென வாபஸ் வாங்கின. ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டவுடன், தன் பிரதமர் பதவியை ஒலி ராஜினாமா செய்தார். 2017-ல் மீண்டும் தேர்தல் நடந்தது. இம்முறை மிகப்பெரிய பலத்துடன் ஒலியின் சி.பி.என் (யூ.எம்.எல்) கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. சி.பி.என் (மாவோயிஸ்ட் சென்டர்) கட்சியும் கரம் கொடுத்ததால், மொத்தமுள்ள 268 எம்.பி இடங்களில், 208 எம்.பி-க்கள் ஆதரவுடன் இரண்டாவது முறையாகப் பிரதமரானார் கே.பி.ஷர்மா ஒலி.

இப்போது என்ன பிரச்னை?

சீன தூதர் யன்ஹியுடன் கே.பி.ஷர்மா ஒலி
சீன தூதர் யன்ஹியுடன் கே.பி.ஷர்மா ஒலி

சீனாவுடன் நேபாளம் நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு பல சங்கடங்களையும் அச்சுறுத்தலையும் உருவாக்கியுள்ளது. நேபாளுக்கான சீன தூதர் யன்ஹியின் கட்டுப்பாட்டில்தான் கே.பி.ஷர்மா ஒலி இருப்பதாக இந்திய அரசு கருதுகிறது. நேபாள பள்ளிகளில் மண்டரின் மொழிக்கு அனுமதி, இந்திய எல்லையில் உள்ள லிபு லேக், கலாபானி பகுதிகளை நேபாள பகுதியாக சொந்தம் கொண்டாடியது என கே.பி.ஷர்மா ஒலி எடுத்த நடவடிக்கைகள் இந்தியாவை எரிச்சலூட்டின. நேபாளத்தை அடுத்த திபெத்தாக மாற்றும் முயற்சியை சீனா மேற்கொள்வதாக இந்தியா கருதுகிறது.

பி.ஜே.பி.யின் ராம் மாதவுடன் பிரசந்தா
பி.ஜே.பி.யின் ராம் மாதவுடன் பிரசந்தா

ஒலியுடன் ஒரே கட்சியில் இருந்தாலும் அவருக்கு எதிர் கோஷ்டியான முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் `பிரசந்தா’வை கையில் எடுத்து இந்தியா விளையாடத் தொடங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு ஐந்தாவது இந்தியா கான்க்ளேவ் நிகழ்ச்சிக்காக பிரசந்தா டெல்லி வந்திருந்தபோதே, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அவரிடம் பா.ஜ.க தேசிய செயலாளர் ராம் மாதவ் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒலிக்கு மற்றொரு எதிர் தரப்பான மாதவ் குமார் நேபாளிடமும் சில அசைன்மென்ட்டுகளை இந்தியா கொடுத்துள்ளதாம். தன் பதவிக்கு ஆபத்து நெருங்குவதால்தான், `ராமன் நேபாளத்தில் பிறந்தார்’ என்கிற கோஷத்தை எழுப்பி, நேபாளத்துக்குள் இந்து எழுச்சியையும் இந்தியாவுக்குள் பி.ஜே.பி.க்கு எதிரான நெருக்கடியையும் உருவாக்க கே.பி.ஷர்மா ஒலி திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தந்திர அரசியலில் யார் வெற்றியடைய போகிறார்கள் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு