Published:Updated:

சபஹார் - ஜாகேடன் ரயில் பாதை அமைப்பதில் குழப்பம்? சீனாவின் தலையீடு காரணமா? #VikatanExplainer

சபஹார் - ஜாகேடன் ரயில் பாதை அமைப்பதில் ஏன் இவ்வளவு குழப்பம்?
சபஹார் - ஜாகேடன் ரயில் பாதை அமைப்பதில் ஏன் இவ்வளவு குழப்பம்?

இந்தத் தரை வழித்தடம் அமைக்கப்பட்டால், கச்சா எண்ணெயை ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் எளிதாக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

ஆப்கானிஸ்தானின் எல்லையில், சபாஹர் துறைமுகத்திலிருந்து (Chabahar Port) ஜாகேடன் வரை ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இரானும் கையெழுத்திட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இரான் அரசாங்கம்தான் மட்டும் அந்தக் கட்டுமானத்தைத் தொடர முடிவு செய்துள்ளது. இந்தியாவின் தரப்பிலிருந்து வழங்குவதாகச் சொல்லியிருந்த நிதி வருவதில் தொடர்ந்து காலதாமதம் நீடிப்பதால், இந்தியாவின் உதவியின்றி இரான் ரயில்வே அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபஹார் துறைமுகம் | Chabahar Port
சபஹார் துறைமுகம் | Chabahar Port

இரானிலிருக்கும் சபாஹரிலிருந்து ஆரம்பித்து, ஜாகேடன் - ஜாரக் - டெலாரம் - ஆஃப்கானிஸ்தான் - காந்தகர் போன்ற முக்கிய வழித்தடங்கள் வழியாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் காபுல் வரைக்கும் மொத்தம் 34 ரயில் நிலையங்களை இந்த ரயில் பாதைத் திட்டம் கொண்டிருக்கிறது. இந்தத் தரை வழித்தடம் அமைக்கப்பட்டால், கச்சா எண்ணெயை ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் எளிதாகப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்...

அண்மையில், இரான் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முகமது எஸ்லாமி, 628 கி.மீ. சபாஹர்-ஜாகேடன் தள அமைப்பு செயல்முறையைத் தொடங்கி வைத்தார். இந்தப் பணித்திட்டம் 2022-ம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. இதற்கான செலவுக்கு, இரான் தேசிய மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 400 மில்லியன் டாலர்களை எடுத்து செலவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தரப்பு ஒப்பந்தம்!

கடந்த மே 2016-ல், இரான் அதிபர் ரூஹானி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் கானியுடன் சபாஹர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா, இரான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான இந்த முத்தரப்பு ஒப்பந்தத்துக்கான அனைத்து சேவைகளையும் வழங்குவதோடு சுமார் 1.6 பில்லியன் நிதியுதவியையும் வழங்குவதாக இந்தியா உறுதியளித்தது. ஆனால், இதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கவில்லை. ஏனெனில், அமெரிக்காவை எதிர்க்கும் இரானுடன் கைகோர்ப்பதால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகக்கூடும் என்ற ஐயமே இதற்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

முத்தரப்பு ஒப்பந்தம்!
முத்தரப்பு ஒப்பந்தம்!

எந்த நாடும் அமெரிக்காவின் பகையைத் தேவையில்லாமல் சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை. குறிப்பாக, இந்தியா அதை விரும்பவில்லை. அதனாலேயே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும், நிதி வழங்குவதில் காலதாமதம் செய்து வந்தது எனச் சொல்லப்படுகிறது. மேலும், அமெரிக்க பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியா ஏற்கெனவே இரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. இந்தச் சமயத்தில், இந்தத் திட்டத்தைத் தூக்கினால், சரிவராது என இந்தியா நினைத்திருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

மிகப்பெரிய பின்னடைவு - அபிஷேக் மனு சிங்வி!

இரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில், இந்தியாவின் உதவியின்றி பணிகளை ஆரம்பிக்கப் போவதாக, இரான் அரசு அறிவித்தது, இந்தியாவுக்கு மிகப் பெரும் இழப்பு என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

சபஹார் - ஜாகேடன் ரயில் பாதை
சபஹார் - ஜாகேடன் ரயில் பாதை

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, "இந்தியாவின் அமெரிக்க சார்பு நிலையை உணர்ந்து கொண்ட இரான், இன்னொரு பக்கம் சீனாவை தம் வசமாக்கிக் கொண்டது. இரானின் ரயில் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சீனாவுடன் ஒப்பந்தமும் போட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் சபாஹர் துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்குவதாக இரான் கூறி இருக்கிறது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் மிகப் பெரிய பின்னடைவு இது. அதேநேரத்தில் சீனா ஆதாயம் அடைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கைகோக்கும் சீனா - இரான்!

சீனாவுடன் 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தத்தை இரான் கையெழுத்திட்டிருக்கும் சூழலில், இந்தியாவுடனான ஒப்பந்தத்தை இரான் கைவிட்டுள்ளதாகவே சொல்லப்படுகிறது.

கைகோர்க்கும் சீனா - ஈரான்!
கைகோர்க்கும் சீனா - ஈரான்!

இரானும் சீனாவும் தயாரித்து வரும் இந்த வரைவு ஒப்பந்தத்தின்படி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இரான் குறைந்த விலையில் சீனாவுக்குக் கச்சா எண்ணெயை வழங்கும். இதற்குப் பதிலாக 400 பில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு முதலீடுகளை இரானில் சீனா செய்யவுள்ளது. உலகமே கொரோனாவுக்கு எதிராகப் போராடிவரும் நிலையில், இரு நாடுகளும் அமைதியாக இந்த ஒப்பந்தத்தை தயார்ப்படுத்தி வருகின்றன. இந்த ஒப்பந்தங்களால் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். மேலும் 5ஜி தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை உருவாக்க ஈரானுக்குச் சீனா உதவும். அத்துடன் வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகங்கள், ரயில்வே போன்ற பல திட்டங்களை இரானில் மேம்படுத்தச் சீனா தனது பங்களிப்பைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இரான் மற்றும் சீனா இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானால் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவுக்கு அதிகளவிலான எண்ணெயை இரான் ஏற்றுமதி செய்து வந்தது. பாகிஸ்தானின் கயாடர் துறைமுகத்தில் முதலீடு செய்து சீனா மேம்படுத்திய நிலையில், இதற்குப் பதிலடியாக இரானின் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா நினைத்தது. ஆனால், இப்போது இரானில் சீனா செய்யவுள்ள முதலீடுகள் இந்தியாவின் திட்டங்களுக்கு ஆபத்தாக அமையலாம். ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் வலுவிழந்து உள்ளன. மேலும், இந்தியா அமெரிக்காவின் ஆதிக்கத்துக்குக் கீழ் உள்ளது என அண்டை நாடுகள் கருதுகின்றன" என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்தியாவின் மூத்த அதிகாரிகள், "இந்தியா இன்னமும் சபாஹர் துறைமுகத் திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதிலும், ரயில்வே கட்டுமானப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டுள்ளது" என்றே தெரிவித்து வருகிறார்கள்.

இது பற்றி டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி, "சபாஹர் - ஜாகேடன் இடையிலான ரயில் பாதையை அமைப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தத் திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக இரான் அரசு அதிகாரிகளுடனும் தொடர்ந்து இந்தியா தொடர்பிலேயே இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

பாஹர் திட்டத்தைப் பொறுத்தவரை இந்தியாவுடனான கூட்டுறவில் உறுதியாக உள்ளோம். அமைதியையும், பொருளாதார ஒருங்கிணைப்பையும் உருவாக்கவே இரான் உறுதி கொண்டுள்ளது. இதோடு சபாஹர் முதல் ஜாகேடன் வரையிலும், மற்றும் ஜாகேடன் முதல் சாரக் வரையிலான டிரான்ஸிட் பாதை அமைப்பதிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கலாம். இப்போது இந்தியாவின் பங்களிப்பு இன்றி, இரானின் நிதி மற்றும் பொருளியல் திறன் மூலம் அங்கு வேலைகள் நடைபெற ஆரம்பித்திருக்கின்றன.
இரான் அரசு அதிகாரிகள்

இந்திய அரசின் தெளிவான விளக்கம்!

"ரயில்வே பாதையை அமைப்பதற்குத் தேவையான பொருள்களை பெறுவதில் சிக்கல் இருந்தாலும், அவை தற்போது கொஞ்சம் கொஞ்சமாகக் களையப்பட்டு வருகின்றன. இதனால் சில நாள்களில் இரானிய ஏஜென்சிகளும் அங்கு கட்டுமானங்களைத் தொடங்கவுள்ளன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
AP

இந்தத் திட்டத்தில் இரண்டு முக்கிய அங்கங்கள் இருக்கின்றன. முதல் அங்கமான சப் ஸ்ட்ரக்சரில் தரைதளத்தை டிராக்குகள் அமைக்க சீர் செய்ய வேண்டும். இரண்டாவது அங்கமான சூப்பர் ஸ்ட்ரக்சர் மற்றும் ரேக்ஸ் இடம்பெறும். இதில் முதலில் இரான்தான் தனது வேலைகளை தொடங்க வேண்டும். பின்னர் இந்தியா அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். இந்தியாவின் பங்களிப்பை பொறுத்தவரை, அமெரிக்காவிலிருந்து இரும்பிற்கான ஒப்புதல்களை பெற வேண்டும். அதனால்தான் இன்னும் அங்கு வேலைகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ளன. துறைமுகத்தை பொறுத்தவரை சுறுசுறுப்பாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க பொருளாதார தடைகளும் இந்தியாவின் உதவி கொண்டு நீக்கப்பட்டுள்ளன" என்கிற தெளிவான தன் தரப்பு விளக்கத்தை இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு