Published:Updated:

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி:சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின்  முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் "ஃபெமா சட்டத்தின்படி, அன்னிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் திருத்தம் மேற்கொள்வதற்கான அதிகாரம் படைத்த ரிசர்வ் வங்கி, கடந்த 2008 ம் ஆண்டுக்குப் பிறகு திருத்தம் தொடர்பாக எந்தவொரு சுற்றறிக்கையையும் வெளி யிடவில்லை.

எனவே, ஃபெமா சட்டத்தின்படி அன்னிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் "என்று குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் ஏ.ஆர். தவே ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 5 ம் தேதி இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.அத்துடன், சில சந்தேகங்கள் இருப்பதால் இதுதொடர்பாக ஆலோசனை வழங்குமாறு சட்ட வல்லுநர்களை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் இந்த மனு,நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் கொள்கைக்கு தடைவிதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

"சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான  கொள்கையில் சில குறைபாடுகள் உள்ளது.அதை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்தக் காரணத்துக்காக தடை விதிக்க முடியாது.அதேநேரம், இது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பு,விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

##~~##
எனினும், இதை அமல்படுத்துவதற்கு முன்பு ரிசர்வ் வங்கியின் மூலம் ஃபெமா சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணையின்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி, ரிசர்வ் வங்கி கவர்னரிடம் உடனடியாக பேசி ஃபெமா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.
மேலும்,குடியரசுத் தலைவர் அல்லது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கை பாதுகாப்பானதாக இருக்காது என சர்மா தனது மனுவில் குற்றம்சாட்டி இருந்தார்.ஆனால்,இந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
 மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.அதுபோல், அரசின் கொள்கைகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 5 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.