Published:Updated:

``தேங்க் யூ சுப்ரீம் கோர்ட்... இதுதான் சுதந்திரம்!” - கலங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள்

``தேங்க் யூ சுப்ரீம் கோர்ட்... இதுதான் சுதந்திரம்!” - கலங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள்
News
``தேங்க் யூ சுப்ரீம் கோர்ட்... இதுதான் சுதந்திரம்!” - கலங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள்

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து தடையிலிருக்கும் இந்தப் பிற்போக்குத்தனமான சட்டம், நீர்த்துப்போயிருக்கிறது. `தன்பாலின ஈர்ப்பு, குற்றமல்ல' என்று, உச்ச நீதிமன்றம் ஓர் உன்னதத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 

ந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில், தன்பாலின ஈர்ப்பைக் குற்றமென அறிவிக்கும் 377 சட்டப்பிரிவின் ஒரு பகுதி கலைக்கப்பட்டிருக்கும் வரலாற்றுத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. சட்டப்பிரிவு 377-ஐக் குறித்த தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ``நான் நான்தான். என்னை என்னைப்போலவே ஏற்றுக்கொள்ளுங்கள். யாரும் தங்களது தனித்தன்மையிலிருந்து தப்பிவிட முடியாது” என்னும் வாசகத்தைச் சொல்லியிருக்கிறார்.

`வரலாற்றில் கொடுக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளிலேயே இதுதான் வசீகரமான, அழகான தீர்ப்பு வாக்கியம்' என, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சமூகச் செயற்பாட்டாளர், பத்திரிகையாளர் ரானா அய்யூப்.

``தன்பாலின ஈர்ப்பாளர்களிடம், வரலாறு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் நீதிபதி இந்து மல்ஹோத்ரா. ``எது இயற்கையானது, எது இயற்கைக்கு மாறானது? அனைத்துப் பாகுபாடுகளுக்கும் எதிரான குரல்கள் வலுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆண்-பெண் இணை மட்டும் மனித வரலாற்றில் இல்லை. இந்தச் சட்டத்திருத்தம் மக்களின் மாண்புக்கானது. தனிமனிதனின் சுயமரியாதைக்கானது” என்று தெரிவித்திருக்கிறார் நீதிபதி டி.வொய் சந்திரசுட்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``என்னதான் சட்டம் திருத்தப்பட்டுவிட்டாலும், சமூகத்தின் ஏற்புத்தன்மை கருதி, தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளைக் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்கு, அரசு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் நீதிபதி நரிமன். நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளின் மூலம் அறம் பேசியிருக்கிறார்கள்.

கேரளாவைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளரான முஹமது உனைஸ், ``2005-ம் ஆண்டு, நடிகர் திலீப் நடித்த `சாந்துப்பொட்டு’ என்ற திரைப்படம் வெளியானது. பாட்டியால் வளர்க்கப்படும் ஆணான திலீப், அனைவரிடமும் பெண்ணைப்போல பழகுவார். பெண்களின் குணநலத்தோடு இருப்பார். கடைசியாகத்தான் அவருடைய ஆண்மையை உணர்வார். ஹிட்டான அந்தத் திரைப்படம், மாநில விருது வாங்கியது. இந்தப் படத்தில் திருநங்கைகளும், திருநம்பிகளும், தன்பாலின ஈர்ப்பாளர்களும் கேலிப்பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டிருப்பார்கள். 

`சாந்துப்பொட்டு' கதாபாத்திரம்தான் எனக்கும். என் வகுப்பிலும் சமூகத்திலும்கூட எனக்கு அதே கதாபாத்திரம்தான். பகலில் எனக்கு நடக்கும் கேலிகளையும் பாகுபாட்டையும் நினைத்து இரவெல்லாம் அழுவது என் வழக்கம். இந்தத் தீர்ப்பு, வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சட்டம் இதை மாற்றியிருக்கிறது. சமூகம் ஏற்றுக்கொள்வதுதான் கனவாக உள்ளது. அதற்கான முயற்சிகள் சீக்கிரமே நடக்கவேண்டும்” என்றார்.

போனில் தொடர்புகொண்டபோது, தன் நண்பர்களுக்குத் தேநீர் விருந்து வைத்துக்கொண்டிருந்தார் முஹமது உனைஸ். ``தேங்க் யூ சுப்ரீம் கோர்ட். இண்டிபெண்டன்ஸ்” என்று முடித்தபோது, உனைஸின் குரல் முழுக்கப் புறக்கணிப்பை வென்ற நெகிழ்ச்சி.

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான உரிமைகளைப் பேசும் `நிறங்கள்' அமைப்பைச் சேர்ந்த சிவா, ``இந்தத் தீர்ப்பு எவ்வளவு பெரிய நிம்மதியைக் கொடுத்திருக்குன்னு வார்த்தைகள்ல வெளிப்படுத்த முடியலை. இனிமே, நாங்க செய்ற எந்த வேலையும் குற்றவுணர்வோடும் பயத்தோடும் செய்யத் தேவையில்லை. எங்களுடைய படிப்புலயும் வேலைகள்லயும் கவனம் செலுத்துறது சாத்தியமாகும்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது பதியும் எந்தக் குற்றத்துக்கும் ஆவணம் கிடையாது. யார் வேணும்னாலும் வன்முறையைப் பிரயோகிக்கிற அளவிலான விஷயம்தான், இத்தனை நாளும் இருந்தது. இனியும் வன்முறைகள் நடக்கலாம். ஆனா, இந்த வன்முறைகளை எதிர்த்துப் பேசும் துணிச்சலை, இந்தத் தீர்ப்பும் நீதியும் கொடுத்திருக்கு. இது, தன்பால் ஈர்ப்பாளர்கள் மட்டும் கொண்டாடவேண்டிய தீர்ப்பு கிடையாது; ஆணும் பெண்ணும்கூட கொண்டாடவேண்டிய அற்புதமான தீர்ப்பு. ஏன்னு கேட்டா, ஒரு தன்பால் ஈர்ப்பாளரைக் கட்டாயப்படுத்தி திருமணம் பண்ணிவைக்கிற ஆணும் பெண்ணும்கூட இதிலிருந்து காப்பாற்றப்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு” என்றார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து தடையிலிருக்கும் இந்தப் பிற்போக்குத்தனமான சட்டம், நீர்த்துப்போயிருக்கிறது. `தன்பாலின ஈர்ப்பு, குற்றமல்ல' என்று, உச்ச நீதிமன்றம் ஓர் உன்னதத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 

சமூக ஒழுக்கங்களாக வரையறுக்கப்பட்டிருக்கும் விதிகளின் பலிபீடத்தில், அறம் பலியிடப்பட்டுவிடக் கூடாது என்ற கவனத்துடன் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இனி மனிதர்களை, அவரவர் இயல்புகளுடன் இயற்கையுடன் ஏற்பதும் நேசிப்பதும் மட்டுமே நமது வேலை.