Published:Updated:

பதவி உயர்வா... பந்தாடினார்களா? - குட்கா போலீஸுக்குக் குட்டு

பதவி உயர்வா... பந்தாடினார்களா? - குட்கா போலீஸுக்குக் குட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
பதவி உயர்வா... பந்தாடினார்களா? - குட்கா போலீஸுக்குக் குட்டு

பதவி உயர்வா... பந்தாடினார்களா? - குட்கா போலீஸுக்குக் குட்டு

மிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதை பாக்குகளைப் பதுக்கி வைத்திருந்த குடோனில் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. சென்னை செங்குன்றம் அருகே நடத்தப்பட்ட அந்த ரெய்டும், அதில் கண்டறியப்பட்ட உண்மைகளும் தமிழக அரசியலையே புரட்டிப்போட்டன. அந்த குட்கா நிறுவனத்தை நடத்திவந்த மாதவ ராவ் என்பவரிடமிருந்து மாதா மாதம் யார் யார் லஞ்சம் பெற்றனர் என்று எழுதப்பட்டிருந்த கணக்கு டைரி அப்போதுதான் சிக்கியது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த விவகாரம் இப்போது சி.பி.ஐ கைக்குப் போயிருக்கிறது. விசாரணையைத் தொடங்கியுள்ள சி.பி.ஐ அதிகாரிகள், அப்போது புழல் ஏரியாவில் யார் யார் பணியில் இருந்தார்கள் என்று உணவுப் பாதுகாப்புத் துறையின் தேனாம்பேட்டை அலுவலகத்துக்குப்போய் விசாரித்துத் தகவல் களைக் கேட்டுப்பெற்றனர். அடுத்து, சென்னை மாநகர போலீஸில் அந்தக் காலகட்டத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களின் பெயர்களைக் கேட்கப்போகிறார்கள். முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், தற்போதைய சட்டம் ஒழுங்குப்பிரிவு டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன் மற்றும் மாநகர உயர் போலீஸ் அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் சி.பி.ஐ-யின் விசாரணை வளையத்துக்குள் விரைவில் கொண்டுவரப்படவுள்ளனர். இந்தச் சூழ்நிலையில்தான், தமிழகக் காவல் துறையில் அடுத்தடுத்து போடப்படும் ட்ரான்ஸ்ஃபர்கள் கவனம் பெற்றுள்ளன.  

பதவி உயர்வா... பந்தாடினார்களா? - குட்கா போலீஸுக்குக் குட்டு

மேட்டருக்கு வருவோம்...

மாற்றம் 1: ஜூன் 29-ம் தேதி தமிழக போலீஸின் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அவர்களில் சிலரின் மாற்றத்தின் பின்னணியின் காரணங்கள் பற்றி போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. குட்கா விவகாரத்தைத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் பிரிவுதான் முதலில் விசாரித்தது. விசாரணை க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டும்போது, இந்தப் பிரிவின் ஆணையராக இருந்த ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ் திடீரென மாற்றப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, இதே பிரிவின் விசாரணையைக் கவனித்துவந்த கூடுதல் டி.ஜி.பி மஞ்சுநாதா மாற்றப்பட்டார்.

காவல் துறையின் நம்பர் ஒன் பதவியான சட்டம் - ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி பதவி வகிக்கும் ராஜேந்திரனை, ஜூனியர் அதிகாரியான மஞ்சுநாதா டீம் விசாரிக்க இருந்த நேரத்தில்தான், திடீரென மஞ்சுநாதா போலீஸ் தொழில்நுட்பப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். ‘தமிழக அரசு, குட்கா வழக்குக்கு மூடுவிழா நடத்தப் பார்க்கிறது’ என அப்போது விமர்சனம் எழுந்தது. ‘‘விவகாரத்தை விசாரித்த முக்கிய அதிகாரிகள் இருவரும் எந்த பிரஷருக்கும் வளைந்துகொடுக்காதவர்கள். அதனால், அவர்களை மாற்றிவிட்டனர்’’ என்று எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

குட்கா விவகாரத்தின் ஆணிவேர் வரை நன்றாகத் தெரிந்தவர் மஞ்சுநாதா. இப்போ தெல்லாம் போலீஸ் தொழில்நுட்பப் பிரிவு தொடர்பான ஆலோசனைகளுக்காக நேரில் டி.கே.ராஜேந்திரனை மஞ்சுநாதா அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழ்நிலை. இதைப் பார்த்த ராஜேந்திரனின் விசுவாச அதிகாரிகள் முகம் சுளித்தனர். இதன் தொடர்ச்சியாக, டி.ஜி.பி ஆபீஸ் வளாகத்தைவிட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள காவலர் வீட்டு வசதிக் கழகக் கூடுதல் டி.ஜி.பி-யாக தற்போது மஞ்சுநாதா மாற்றப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் சிலர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பதவி உயர்வா... பந்தாடினார்களா? - குட்கா போலீஸுக்குக் குட்டு

மாற்றம் 2: கடலோரக் காவல்படை ஐ.ஜி-யாக இருந்தார் அருணாசலம். இவரின் அலுவலகமும் டி.ஜி.பி அலுவலக வளாகத்தில்தான் இயங்குகிறது. தற்போது, அருணாசலத்துக்குக் கூடுதல் டி.ஜி.பி பதவி உயர்வு வந்தது. அதன் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் பாதுகாப்பு அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது, டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து மண்டபத்துக்குத் தூக்கியடித்திருக்கிறார்கள். குட்கா விவகாரம் சூடு பிடித்தபோது சென்னை மாநகரின் கூடுதல் கமிஷனராக இருந்தவர் இவர். அந்தக் காலகட்டத்தில்தான், வருமானவரித் துறை ரெய்டில் குட்கா மாமூல் கணக்கு நோட்டு சிக்கியது. ‘அந்த நோட்டில் இருக்கும் விவரங்களை வருமானவரித் துறையிடமிருந்து கேட்டு வாங்கி சிலரைப் பலி கொடுக்கக் காவல் துறையின் உயர் அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள்’ என்கிறரீதியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குப் புகார் போனது. இந்தச் சூழ்நிலையில், அப்போதைய டி.ஜி.பி-யான அசோக்குமார், அருணாசலம் ஆகியோரின் தலையீடுகள் இருந்ததாகப் பேச்சு கிளம்பியது. அதையடுத்து, அசோக்குமார் விருப்ப ஓய்வில் சென்றார். அருணாசலமும் அங்கிருந்து டம்மியான பதவிக்கு மாற்றப்பட்டார். இதே அருணாசலத்தைத் தற்போது பதவி உயர்வு தருவதைப்போல் கொடுத்து ‘பனிஷ்மென்ட் இடம்’ என்று போலீஸில் வர்ணிக்கப்படும் மண்டபம் முகாமுக்கு மாற்றிவிட்டதாகவே போலீஸ் துறையில் பேசிக்கொள்கிறார்கள்.

மாற்றம் 3: மூன்றாவது அதிகாரி... தாமரைக்கண்ணன். சி.பி.சி.ஐ.டி. பிரிவின் ஐ.ஜி-யாக இருந்தார். பேராசிரியை நிர்மலாதேவி போன்ற சென்சிடிவான விவகாரங்களை விசாரிக்கும் முக்கியப் பொறுப்பில் இருந்தார். இவருக்கும் தற்போது கூடுதல் டி.ஜி.பி-யாகப் பதவி உயர்வு வந்தது. அவரை ‘காவலர் நலன்’ என்கிற டம்மியான போலீஸ் பிரிவுக்கு மாற்றிவிட்டனர். அவருக்குப் பதில், புதிதாக வந்திருப்பவர் மகேஷ்குமார் அகர்வால்.  சி.பி.சி.ஐ.டி-யின் கூடுதல் டி.ஜி.பி-யான அம்ரேஷ் பூஜாரி, அவரது குட்- புக்ஸில் இருந்த மகேஷ்குமார் அகர்வாலைக் கேட்டு வாங்கிக்கொண்டதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

மொத்தத்தில் ‘பதவி உயர்வு’ என்ற பெயரில் சில அதிகாரிகள் பந்தாடப்பட்டுள்ளனர்.

- சூரஜ்