Published:Updated:

பாலியல் வன்கொடுமையால் இறந்த கேரள சிறுமி! - தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 10 ஆண்டு சிறை

பாலியல் வன்கொடுமையால் இறந்த கேரள சிறுமி! - தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 10 ஆண்டு சிறை
பாலியல் வன்கொடுமையால் இறந்த கேரள சிறுமி! - தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 10 ஆண்டு சிறை

பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியபோது கேரளாவைச் சேர்ந்த சிறுமியைக் கூட்டுப் பாலியல் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், 2012-ம் ஆண்டு தனது வீட்டில் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளார். அதன் பேரில் அவரின் நண்பர்கள் உதவியோடு கேரளாவிலிருந்து 15 வயது சிறுமியை ராஜ்குமாரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இரண்டு நாள்கள் கழித்து அந்தப் பெண் அவரின் அப்பாவுக்கு, `என்னால் இங்கு இருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் என்னைத் துன்புறுத்துகிறார்கள். உடனே அழைத்துச்செல்லுங்கள்' என்று போனில் தகவல் சொல்லியிருக்கிறார். அவர்கள் வறுமை கருதி அச்சிறுமியை சமாதானப்படுத்தி தங்க வைத்துள்ளனர். 

2012 ஜூன் 27-ம் தேதி ராஜ்குமாரின் நண்பர் சிறுமியின் தந்தையிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உடனே அழைத்துச் செல்லுங்கள். அழுதுகொண்டே இருக்கிறார். சரியாக வேலை செய்வதில்லை என்று புகார் அளித்திருக்கிறார். அதற்குச் சந்திரன், 29-ம் தேதி அழைத்துச் செல்வதாகச் சொல்லி போனை வைத்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் ராஜ்குமாரின் நண்பரான ஜெய்சங்கர் சத்யாவின் தந்தை சந்திரனை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, `உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவரைப் பார்த்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். 

அதன்படி அவரின் பெற்றோர்கள் வந்து பார்த்தபோது சத்யா சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். அங்கு மூன்று நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் அவர்கள் சொந்த ஊரான கேரளாவுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். வழியில் சத்யாவின் உடல் மோசமானதால் தேனி அரசு மருத்துவமனையில் 4-ம் தேதி சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் 6-ம் தேதி இறந்துபோனார். சத்யாவின் உடலை அடக்கம் செய்தபோது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து சத்யாவின் பெற்றோர்கள் மறுபிரேதப் பரிசோதனை செய்யும்படி கேரளாவில் உள்ள பீர்மேடு போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். 

பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், அவரின் நண்பர்கள் ஜெய்சங்கர், மகேந்திரன், விஜயகுமார், அன்பரசு உள்ளிட்ட 7 பேர் மீது ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை, மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது பன்னீர்செல்வம் இறந்துபோனார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ என்பதால் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கச் சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார்க்கு காவல்துறை குறிப்பிட்ட பாலியல் வன்கொடுமை, மரணத்துக்குக் காரணம், கூட்டுச் சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். 

இந்தத் தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் கூட்டாளி ஜெய்சங்கருக்கு கூட்டுச் சதி, மோசடி ஆகிய பிரிவுகளில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாகவும், இருவருக்கும் 42,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் காவல்துறை தரப்பில் நிரூபிக்கவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தார்.