Published:Updated:

நிலக்கரி சுரங்க ஊழல் அறிக்கையை திருத்தம் செய்தது பிரதமர் அலுவலகம்: சி.பி.ஐ. தகவல்

நிலக்கரி சுரங்க ஊழல் அறிக்கையை திருத்தம் செய்தது பிரதமர் அலுவலகம்: சி.பி.ஐ. தகவல்
நிலக்கரி சுரங்க ஊழல் அறிக்கையை திருத்தம் செய்தது பிரதமர் அலுவலகம்: சி.பி.ஐ. தகவல்
நிலக்கரி சுரங்க ஊழல் அறிக்கையை திருத்தம் செய்தது பிரதமர் அலுவலகம்: சி.பி.ஐ. தகவல்

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சி.பி.ஐ. அறிக்கையை பிரதமர் அலுவலக அதிகாரிகள், சட்ட அமைச்சர் திருத்தம் செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் ஆன புதிய பிரமாண பத்திரத்தில் இத்தகவல் இடம்பெற்று உள்ளது.

நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற ஊழலால் அரசுக்கு ரூ.1.85 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையர் (சிஏஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.

ஊழல் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்தில் நிலக்கரி துறை அமைச்சர் பதவியை பிரதமர் மன்மோகன் சிங் வகித்த நிலையில், அவரை காப்பாற்றும் நோக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சி.பி.ஐ. அறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த திருத்தங்களை மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா கடந்த 26ஆம் தேதி ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சி.பி.ஐ. விசாரணை நிலவர அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக மத்திய சட்ட அமைச்சரின் விருப்பப்படி, அவருடனும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் மட்ட அதிகாரிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டது என கூறப்பட்டிருந்தது.

இந்த செயல், நமது அரசு அமைப்புகளையே குலுங்கச்செய்துள்ள நம்பிக்கை மோசடி என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ரஞ்சித் சின்காவை புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

அதன்படி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்னிலையில், சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா 9 பக்க பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். இதில், சி.பி.ஐ. விசாரணை நிலவர வரைவு அறிக்கையில், சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி, பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி துறை அமைச்சக அதிகாரிகள் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி திருத்தம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த தகவல், சி.பி.ஐ. விசாரணை நிலவர வரைவு அறிக்கையில் எந்த திருத்தமும் செய்ய வில்லை என்று கூறிய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார், அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி ஆகியோரின் கூற்றுக்கு நேர் எதிர்மாறாக அமைந்துள்ளது. இது மத்திய அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சி.பி.ஐ. சார்பில்  தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வரைவு அறிக்கையில் சட்ட மந்திரி அஸ்வினி குமார், அட்டார்னி ஜெனரல் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் செய்யப்பட்ட திருத்தங்கள், அறிக்கையை மாற்றி விடவில்லை. எந்த விதத்திலும் விசாரணையின் நோக்கத்தை திசை திருப்பி விட வில்லை.

நிலவர அறிக்கையில், சந்தேக ஆசாமிகள் அல்லது குற்றவாளிகள் பெயர்கள் நீக்கப்படவில்லை. நடைமுறையிலிருந்து அவர்கள் விடப்படவும் இல்லை.

அறிக்கையினை நேர்த்தி ஆக்குவதற்கு செய்யப்பட்ட இந்த திருத்தங்களில் பெரும்பாலானவை எனது அதிகாரிகளால், சொந்தமாகவே செய்யப்பட்டன அல்லது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை (ராவல்), அவரது உதவி வக்கீலை அல்லது சட்ட மந்திரியை கலந்து ஆலோசனை செய்து செய்யப்பட்டன.

சில திருத்தங்கள் அட்டார்னி ஜெனரல், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி துறை அமைச்சக அதிகாரிகளின் அறிவுரைப்படி செய்யப்பட்டன.

இந்த தருணத்தில், செய்யப்பட்ட ஒவ்வொரு மாற்றத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நபரை நிச்சயமாக கற்பித்து கூறுவது கடினமானது ஆகும்.

இறுதி நிலவர அறிக்கையில், சில குறிப்பிட்ட மாற்றங்கள் சட்டமந்திரி அஸ்வினி குமார், அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி,  பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகளின் அறிவுரைப்படி செய்யப்பட்டன.

சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், பிரதமர் அலுவலகம், நிலக்கரி துறை அமைச்சக அதிகாரிகள் செய்த மாற்றங்களை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது.

மேலும், சி.பி.ஐ. அறிக்கையில் திருத்தம் செய்த பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி துறை அமைச்சக அதிகாரிகளின் பெயரும் பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றுள்ளது.  திருத்தங்களை செய்த அதிகாரிகள் பிரதமர் அலுவலக இணை செயலாளர் சத்ருகன் சிங், நிலக்கரி துறை அமைச்சக இணை செயலாளர் ஏ.கே.பல்லா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில், நடந்து கொண்டிருக்கும் விசாரணை தொடர்பான அறிக்கையை பிறருடன் பகிர்ந்துகொள்வது தொடர்பாக சி.பி.ஐ. கையேட்டில் வழிகாட்டும் நெறிமுறைகள் எதுவும் இல்லை; துறை சுற்றறிக்கை மற்றும் அரசின் அறிவுரைகள் ஆகியவற்றிலும் இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்காவின் பிரமாண பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

##~~##
"சட்ட மந்திரி அஸ்வினிகுமார், பிரதமர் மற்றும் நிலக்கரி துறை அமைச்சக அதிகாரிகளுடனான சந்திப்புகள் குறித்து நடவடிக்கை குறிப்பு எதுவும் இல்லை என்ற நிலையில், எனது நினைவிலும், எனது அதிகாரிகளின் நினைவிலும் இருந்த விஷயங்களின் அடிப்படையில் இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் கவனக்குறைவால் ஏதாவது விடுபட்டிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்" என சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா தன் பிரமாண பத்திரத்தில் கூறி உள்ளார்.
இந்த பிரமாண பத்திரத்தை நாளை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்கிறது. அப்போது சி.பி.ஐ. அறிக்கையை திருத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி,  பிரதமர் அலுவலக இணை செயலாளர் சத்ருகன் சிங்,  நிலக்கரி துறை அமைச்சக இணை செயலாளர் ஏ.கே.பல்லா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்பது தெரிய வரும்.