Published:Updated:

பொள்ளாச்சி பயங்கரம்... பொதுமக்கள் சொல்வது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொள்ளாச்சி பயங்கரம்... பொதுமக்கள் சொல்வது என்ன?
பொள்ளாச்சி பயங்கரம்... பொதுமக்கள் சொல்வது என்ன?

பொள்ளாச்சி பயங்கரம்... பொதுமக்கள் சொல்வது என்ன?

பிரீமியம் ஸ்டோரி

குலைநடுங்கவைக்கிறது பொள்ளாச்சி பாலியல் கொடூரம். பாதிக்கப்பட்ட பெண்களின் கதறலைக் கேட்டு ஒட்டு மொத்தச் சமூகமும் விக்கித்துக் கிடக்கிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் திகிலடைந்துகிடக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆறுதலுக்குக்கூட வழியில்லாமல் அவமானத்தில் தவிக்கிறார்கள். காதலின் பெயரிலும் நட்பின் பெயரிலும் துரோகம் இழைக்கப்பட்ட அந்தப் பெண்கள் உடல், மன வேதனைகளில் அரற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டும். இது பொள்ளாச்சியில் நடந்தது என்று நாம் கடந்துவிடக்கூடாது. நாளை நம் ஊரிலும் நடக்கலாம். ஏன், நமக்குத் தெரியாமலேயே ஏற்கெனவே நம் ஊரில் எங்கோ ஒரு மூலையில் இத்தகைய கொடூரம் அரங்கேறிக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற அக்கிரமங்களை எதிர்த்து நாம் ஒவ்வொருவரும் குரல் கொடுப்பது அவசியம். சரி, இந்தச் சம்பவம் குறித்து என்ன சொல்கிறார்கள் பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள்?

பொள்ளாச்சி பயங்கரம்... பொதுமக்கள் சொல்வது என்ன?

ராதிகா, மாவட்டச் செயலாளர், ஜனநாயக மாதர் சங்கம், கோவை 

“இது சாதாரணக் குற்றம் கிடையாது. மிகப்பெரிய சமூகக்குற்றம். இந்த வழக்கை ஆண் அதிகாரி விசாரிப்பது சரியல்ல. நேர்மையான பெண் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். கடந்த ஏழு ஆண்டுகளாக பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன பெண்களின் விவரங்களைச் சேகரித்து, அவற்றையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். நான்கு பேர் மட்டுமே இந்தக் குற்றத்தைச் செய்திருக்க முடியாது. இன்னும் நிறையப் பேருக்கு இதில் தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். எனவே, முறையான விசாரணை தேவை.

நாகராஜ், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு திராவிடர் விடுதலைக் கழகம், பொள்ளாச்சி

“அன்றாடச் செய்திகளையும் சமூக நடப்புகளையும்  இளம்பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வெறும் பாடப் புத்தகங்களும், ஸ்மார்ட் போனும் மட்டுமே உலகம் அல்ல. சமூகத்தையும் படிக்கவேண்டும். நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு பெண்தான் புகார் கொடுத்துள்ளார். மற்றவர்கள் ஏன் புகார் கொடுக்க முன்வரவில்லை? தவறு செய்தவனை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டப் பெண்களின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கும் சமூகக் கட்டுமானம் இங்கு இருக்கிறது. அந்தக் கட்டுமானம்தான் இதுபோன்ற குற்றங்களை வெளியில் வராமல் மறைக்கவைக்கிறது. இதில் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆகையால், இந்த வழக்கில் சுதந்திரமான விசாரணை தேவை.”

ஸ்வாதி, புகைப்படக் கலைஞர், திருப்பூர்

“சமூகவலைதளங்களை எதற்காக, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த தெளிவு வேண்டும். சமூகவலைதளங்களின் மூலம் நிகழக்கூடிய இதுபோன்ற குற்றங்கள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் தொடர்ச்சியாகக் கலந்தாலோசிக்க வேண்டும். விழிப்புஉணர்வு வகுப்புகள் நடத்தப்படவேண்டும். தங்களின் குழந்தைகளை முறையாகக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புப் பெற்றோர்களுக்கு இருக்கிறது. அப்படியும் தவறுகள் நடக்கும் பட்சத்தில், பெண்கள் பயப்படாமல் காவல்துறையை அணுக வேண்டும்.”

பொள்ளாச்சி பயங்கரம்... பொதுமக்கள் சொல்வது என்ன?

விக்னேஷ், ஏற்றுமதி நிறுவனப் பணியாளர், திருப்பூர்

“பெரும் குற்றத்தைச் செய்துவிட்டுத் துணிச்சலாக வீடியோ வெளியிடுகிறார்கள். அதிலும் ஒருவன், ‘ஒரு பெண் மட்டும்தான் எங்களுக்கு எதிராகப் பேசியிருக்கிறார். மற்ற பெண்கள் எல்லாம் எனக்குத்தான் ஆதரவாக இருக்கிறார்கள்’ என்றெல்லாம் சொல்கிறான். இதற்கெல்லாம் எத்தனை தைரியம் இருக்க வேண்டும். இவர்களை காவல்துறை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் பெண்கள் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்களின் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது.”

சூர்யா, கல்லூரி மாணவி, கோவை

“இந்த வழக்கில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதிலும் சந்தேகங்கள் இருக்கின்றன. இதன் பின்னணியில் இருப்பவர்களை மறைத்து, வழக்கை அவசரமாக முடிப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றனவா என்கிற கேள்வி எழுகிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி, இதன் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்ய வேண்டும். மேலும், சாதாரணப் பிரிவின் கீழ்தான் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும். ஓர் ஆண் ஒரு பெண்ணை விரும்பினால், அதை வெளியே சொல்லும் அளவுக்கு அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதே ஒரு பெண், ஆண்மீது காதல் கொண்டால், அதை அவளின் பெற்றோரிடம் சொல்லும் அளவுக்கு சுதந்திரம் இருந்தாலே, இதுபோன்ற பிரச்னைகள் வராது.”

நாராயணன், பொள்ளாச்சி

“அதிகரித்துவரும் செல்போன் பயன்பாட்டால்தான் இதுபோன்ற தவறுகள் அதிகரிக்கின்றன. கல்வி நிறுவனங்கள் பணத்தைக் குறியாகக்கொண்டு, செல்போன் பயன்படுத்துவதில் மாணவர்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பதில்லை. பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் வெளியில் வந்துவிட்டது. பல இடங்களில் விஷயம் வெளியில் வரவில்லை. இந்த விஷயத்தில் அரசியல் தலையீடுகளைக் கடந்து, தவறு செய்தவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

- எம்.புண்ணியமூர்த்தி, இரா.குருபிரசாத், தி.ஜெயப்பிரகாஷ், ச.கார்த்திகா

படங்கள்: தி.விஜய்

பொள்ளாச்சி பயங்கரம்... பொதுமக்கள் சொல்வது என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு