அரசியல்
அலசல்
Published:Updated:

மதுரை நந்தினி கைது... பழி வாங்குகிறதா அரசு?

மதுரை நந்தினி கைது... பழி வாங்குகிறதா அரசு?
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரை நந்தினி கைது... பழி வாங்குகிறதா அரசு?

மதுரை நந்தினி கைது... பழி வாங்குகிறதா அரசு?

ரசை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களையும் சமூகப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்கும் போராளிகளையும் அடக்குமுறை மூலம் ஒடுக்கும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அதற்குச் சமீபத்திய உதாரணம், மதுரை நந்தினி கைது சம்பவம்.

டாஸ்மாக் கடைகளை மூடுதல் உட்பட பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர்கள், மதுரையைச் சேர்ந்த நந்தினியும் அவருடைய தந்தை ஆனந்தனும். இவர்கள் இருவரையும் கடந்த ஜூன் 27-ம் தேதி, திடீரெனக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது, மதுரை காவல்துறை. வருகிற ஜூலை 5-ம் தேதி, நந்தினிக்குத் திருமணம் ஏற்பாடாகியுள்ள நிலையில் நந்தினி கைது செய்யப்பட்டிருப்பதால், ‘இது பழிவாங்கும் செயல்’ என்று புகார் எழும்பியுள்ளது.

மதுரை நந்தினி கைது... பழி வாங்குகிறதா அரசு?

பல்வேறு போராட்டங்கள் நடத்திவருவதால், நந்தினி மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராட்டம் நடத்தும் இடங்களில் போலீஸாராலும் அரசியல் கட்சி யினராலும் தாக்கப்பட்டிருக்கிறார், நந்தினி. ஆனாலும் போராட்டம் நடத்துவதிலிருந்து எப்போதும் பின்வாங்கியதில்லை அவர்.

கடந்த ஆறு ஆண்டுகளாகத் தன் தந்தை ஆனந்தனுடன் பல்வேறு போராட்டங்கள் நடத்திவரும் நந்தினி, எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை. எந்த உள்நோக்கமும் இல்லாமல், யாரிடமும் நிதி வாங்காமல், ‘மதுக்கடைகளை மூட வேண்டும்’, ‘வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும்’ என தினம் ஓர் ஊரில் போராட்டம் நடத்தி வருகிறார், நந்தினி.

வேளாண் பொறியியல் துறையில் பணியாற்றிய ஆனந்தன், தொழிற்சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். மக்கள் சேவையில் மிகவும் அலட்சியமாக நடந்துவரும் அரசு நிர்வாகத்தின்மீது வெறுப்புகொண்டு, விருப்ப ஓய்வுபெற்றவர். தொடர்ந்து பொதுப் பிரச்னைகளுக்காகப் போராடத் தொடங்கினார். அவருடைய சிந்தனை களை உள்வாங்கி வளர்ந்தவர், நந்தினி. சட்டக் கல்லூரியில் படிக்கும்போது இவருடைய தோழியின் தந்தை மதுப்பழக்கத்தால் மரணமடைந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நந்தினி, ‘அரசே மதுவை விற்பதா?’ என்று சட்டக்கல்லூரி வாசலில் அமர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்தினார். நீண்ட நாள்கள் நடந்த அப்போராட்டம், தமிழகம் முழுதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போராட்டத்தை நிறுத்த முடியாத நிலையில், நந்தினியைக் கைதுசெய்து மருத்துவ மனையில் சேர்த்துப் போராட்டத்தை முடித்தது, காவல்துறை. தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட மாகச் சென்று மதுவுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பது, மக்கள் கூடும் இடத்தில் பதாகையோடு ஆர்ப்பாட்டம் நடத்துவது, உண்ணாவிரதம் இருப்பது என்று செயல்படத் தொடங்கினார் நந்தினி. இவர்மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால், சட்டப்படிப்பு முடித்த பிறகும்கூட நீதிமன்றத்தில் செயலாற்ற முடியவில்லை.

மதுரை நந்தினி கைது... பழி வாங்குகிறதா அரசு?

நந்தினியின் ஒரே கேள்வி, ‘போதைப்பொருள் விற்பது ஐ.பி.சி 328-ன்படி குற்றம். அந்தக் குற்றத்தை அரசே செய்யலாமா?’ என்பதுதான். இதை வலியுறுத்தித்தான் கடந்த ஆறு ஆண்டு களாகப் போராடி வருகிறார். ஜெயலலிதா வீட்டின் முன் போராட்டம் நடத்தச் சென்ற போதும் அமைச்சர்களது வீடுகளின் முன் போராட்டம் நடத்தச் சென்றபோதும் கைது செய்யப்பட்டிருக்கிறார், நந்தினி. சில மாதங்களுக்கு முன், ‘வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை யுடன் டெல்லியில் பிரதமர் வீட்டு முன் போராட்டம் நடத்தச் சென்றபோது டெல்லி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். மதுரை புதூரில் இருக்கும் இவருடைய வீடு எப்போதுமே போலீஸ் கண்காணிப்பில்தான் இருக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டு, டாஸ்மாக்குக்கு எதிராக, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் போராட்டம் நடத்தியபோது, நந்தினி, ஆனந்தன் ஆகியோர்மீது போலீஸைத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கு, கடந்த ஜூன் 27-ம் தேதி, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை ஜாமீனில் எடுக்க நந்தினியின் தங்கை நிரஞ்சனா மற்றும் வருங்கால வாழ்க்கைத் துணைவர் குணா ஜோதிபாசு ஆகியோர் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மதுரை நந்தினி கைது... பழி வாங்குகிறதா அரசு?

குணா ஜோதிபாசுவிடம் பேசினோம். ‘‘சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது போடப்பட்ட வழக்கு இது. இவ்வளவு நாட்களாக விட்டுவிட்டு தற்போது விசாரணைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். விசாரணையின்போது, ‘டாஸ்மாக்கில் விற்பனை செய்வது போதைப் பொருளா, உணவுப்பொருளா, மருந்துப் பொருளா?’ என்றும் ‘ஐ.பி.சி 328-ன்படி டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா?’ என்றும் நீதிபதியிடம் கேட்டிருக்கிறார், நந்தினி. அதற்காகத்தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்துள்ளனர்.

திருமணம் நடக்கவிருந்த நிலையில் கைது செய்திருப்பது, பழிவாங்கும் செயல். ஜாமீன் கேட்டபோது, ‘மது விற்பது குற்றமா என்பது போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் இனி கேட்கக் கூடாது’ என்று எழுதி, நந்தினியிடம் கையெழுத்துக் கேட்டார்கள். நாங்கள் ஒப்புக்கொள்ளாததால் ஜாமீன் கொடுக்கவில்லை. அதனால், உயர் நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்’’ என்றார்.

‘சட்டம் படித்தவர், நீதிமன்றத்தில் சட்டம் குறித்துப் பேசலாமா, கூடாதா?’ என்பது நீதி தேவதைக்குத்தான் வெளிச்சம்!

- செ.சல்மான்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்