Published:Updated:

மருத்துவப்படிப்பு பொது நுழைவுத்தேர்வு ரத்து: மத்திய அரசு மேல்முறையீடு ?

விகடன் விமர்சனக்குழு
மருத்துவப்படிப்பு பொது நுழைவுத்தேர்வு ரத்து: மத்திய அரசு மேல்முறையீடு ?
மருத்துவப்படிப்பு பொது நுழைவுத்தேர்வு ரத்து: மத்திய அரசு மேல்முறையீடு ?
மருத்துவப்படிப்பு பொது நுழைவுத்தேர்வு ரத்து: மத்திய அரசு மேல்முறையீடு ?

புதுடெல்லி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.

எம்.பி.,பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ, பல் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு முறையை அகில இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 115 வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்து வந்த தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதி விக்ரமஜித் சென், ஏ.ஆர்.தவே ஆகியோரைக் கொண்ட அமர்வு, மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வினை ரத்து செய்து நேற்று முன்தினம் (18ஆம் தேதி) பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

இதில் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதி விக்ரமஜித் சென் ஆகிய 2 பேரும் அகில இந்திய ரீதியிலான பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராகவும், நீதிபதி ஏ.ஆர்.தவே, ஆதரவாகவும் தீர்ப்பு அளித்தனர்.

பெரும்பான்மை காரணமாக, நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில், பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறுகையில், ஒரு சிறப்பான முடிவை எதிர்பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. இது கொஞ்சம் தைரியம் இழக்கச்செய்துள்ளது. ஏனெனில் நிறைய விஷயங்களை தூய்மையாக்க நினைத்திருந்தோம். இந்த தீர்ப்பினால் சற்றே நிலைகுலைந்து போய் உள்ளோம்.

இயற்கையாகவே இதில் சட்ட நிவாரணம் நாடவேண்டி உள்ளது. அதைத் தவிர வேறு வழி இல்லை. தீர்ப்பினை மறுஆய்வு செய்யக்கோருவதா அல்லது இதில் நாம் வேறு என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்க வேண்டும். இது தொடர்பாக சட்ட ஆலோசனை கேட்டுள்ளோம்.

##~~##
இந்த பிரச்னை குறித்து ஏற்களவே உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினேன். தீர்ப்பினை முழுமையாக படிக்கும்படி அறிவுறுத்தி உள்ளேன். தீர்ப்பினை முழுமையாக படித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம்.
பொது நுழைவுத்தேர்வு இல்லாவிட்டால், மாணவர்களுக்கு நிறைய நேரம், பணம் வீணாகிறது. அலைக்கழிப்புகள் ஏற்படுகின்றன. எனவே பொது நுழைவுத்தேர்வின் வாயிலாகத்தான் அதைக் கடந்து வரவேண்டி உள்ளது என்றார் ஆசாத்.