Published:Updated:

பவானி சிங் விவகாரம்: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Vikatan Correspondent
பவானி சிங் விவகாரம்: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை
பெங்களூர் சிறப்பு நீதிமன்றதில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கர்நாடக அரசு விசேஷ அரசு வழக்கறிஞரான பவானி சிங், கடந்த பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், திடீரென கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பவானி சிங்கை கர்நாடக அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. இதை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் எஸ்.ஏ.பாப்டே அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் எம்.என்.ராவ், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பொறுத்தவரை நான்கு வழக்கறிஞர்களின் பெயர்களை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது என்றும், அந்த பெயர்களை விட்டு விட்டு புதிதாக பவானி சிங்கை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) நியமித்ததாகவும் தெரிவித்தார்.

##~~##
மேலும் பவானி சிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்ததால், உடனடியாக கர்நாடக அரசு அவரை திரும்பப் பெற்றதாக வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, அரசு வழக்கிறஞர் நியமனம் செய்யப்பட்டு ஏழு மாதங்கள் கழித்துத்தான் கர்நாடக அரசுக்கு இது தெரியவந்ததா என கேள்வி எழுப்பினார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், பவானிசிங் நியமனம் மற்றும் நீக்கம் குறித்த ஆவணங்களை 6ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.