அரசியல்
அலசல்
Published:Updated:

இன்ஸ்பெக்டர் அங்கிள் அந்த ரூமுக்கு வந்தாங்க... 21 பேருக்கு தண்டனை வாங்கிக்கொடுத்த மழலைக்குரல்!

இன்ஸ்பெக்டர் புகழேந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஸ்பெக்டர் புகழேந்தி

சிறுமியைப் பாலியல் தொழிலில் கட்டாயப் படுத்தித் தள்ளிய ஏழு பெண்கள் உட்பட எட்டு பேருக்கு ஆயுள் முழுக்கச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

“ஒரு ரூம்ல என்னைய அடைச்சு வெச்சாங்க... இன்ஸ்பெக்டர் அங்கிள் அந்த ரூமுக்கு வந்தாங்க... ரொம்ப கொடுமைப்படுத்துனாங்க” என்று மழலை மொழியில் அந்த 13 வயது சிறுமி அளித்த வாக்குமூலம்தான் 6 பேருக்கு ஆயுள் தண்டனை உள்பட 21 பேருக்கு தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கிறது

இன்ஸ்பெக்டர் புகழேந்தி
இன்ஸ்பெக்டர் புகழேந்தி

ஒரு தாயின் கண்ணீர்!

2020-ம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர், தன்னுடைய மகளைக் காணவில்லை என்று கண்ணீருடன் புகார் கொடுத்தார். சில தினங்களுக்குப் பிறகு, மாயமான சிறுமி தானாகவே வீடு வந்து சேர்ந்தாள். ஆனால், பெற்ற தாயால் மகிழ முடியவில்லை. மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்திருந்த அந்தச் சிறுமி தனக்கு நடந்ததாகக் கூறிய கொடுமைகளைக் கேட்டு அந்தத் தாய்க்கு ஈரக்குலையே நடுங்கிவிட்டது.

ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டே, மகளை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அந்தத் தாய், அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் தன்னுடைய மகளுக்கு நடந்த வன்கொடுமைகள் குறித்துப் புகார் எழுதிக் கொடுத்தார். ‘யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்’ என்று மேலிடத்திலிருந்து சிக்னல் கிடைத்ததும், சிறுமியின் உறவினர்கள் மட்டுமன்றி போலீஸ் இன்ஸ்பெக்டர், பா.ஜ.க பிரமுகர், செய்தியாளர் என வரிசையாகக் கைது வேட்டை ஆரம்பமானது.

இன்ஸ்பெக்டர் அங்கிள் அந்த ரூமுக்கு வந்தாங்க... 21 பேருக்கு தண்டனை வாங்கிக்கொடுத்த மழலைக்குரல்!

பருவமடைந்த 13-வது நாளில்...

மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவர், வறுமையின் காரணமாக அவர்களை வளர்க்க முடியாமல் தவித்தார். இதையறிந்த அந்தத் தாயின் அக்காள் மகள், 13 வயதான அவரின் மூத்த மகளை மட்டும் தான் வளர்ப்பதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கிறார். சிறுமிக்கு அந்தப் பெண், அக்காள் முறை. வடசென்னையில் வசித்துவந்த அந்த அக்காள், தன் கணவனின் ஒத்துழைப்புடன் அதே பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்தது, பாவம்... இந்தத் தாய்க்குத் தெரியவில்லை. அவர்களின் ரெகுலர் கஸ்டமர்கள் சிலரது பார்வை பூப்படையாத சிறுமியின் மேல் விழுந்திருக்கிறது. இதனால், சிறுமி பூப்பெய்திய 13-வது நாளிலேயே அவளைக் கட்டாயப்படுத்தி, பாலியல் தொழிலில் தள்ளியிருக்கிறார்கள் அக்காளும், அவள் கணவனும்.

தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து விவரமறியாத சிறுமியைச் சீரழித்து, காசு பார்த்திருக்கிறார்கள் அந்தத் தம்பதியினர். ஒரு நாளைக்கு மூன்று ‘கஸ்டமர்களை’ ஏற்பாடு செய்து அவளைச் சுரண்டியதுடன், வலிக்கிறது என்று அழுத அவளை உடை, தின்பண்டங்கள் கொடுத்து ஏமாற்றியிருக்கிறாள் அந்த அக்காள். இந்தச் சூழலில்தான் வடசென்னையில் மளிகைக்கடை நடத்தி வந்த பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரனுக்கு, பாலியல் தொழிலுக்குப் புதிதாக ஒரு சிறுமி வந்திருக்கும் செய்தி தெரியவந்திருக்கிறது. இதையடுத்து ராஜேந்திரனும், அவருடன் நட்பிலிருந்த இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதற்காக ராஜேந்திரனின் கடைக்குள் மறைவாக ஒரு ரகசிய இடத்தை ஏற்படுத்தி, தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

22 பேர் கைது... 680 பக்க குற்றப்பத்திரிகை!

இந்தக் கொடுமை தொடர்ந்து நீடிக்க, 2020-ம் ஆண்டு, நவம்பர் மாதம் திடீரென சிறுமி, தன் அக்காள் வீட்டிலிருந்து மாயமாகிவிட்டாள். அவள் திரும்பி வந்த பிறகே இந்தக் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்தன. சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தார். இந்த வழக்கில் மகளிர் போலீஸாரின் பங்கு மகத்தானது. சிபாரிசுகள், பேரங்களுக்கு மசியாமல் இந்த வழக்கில், சிறுமியின் உறவினர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன், டி.வி செய்தியாளர் வினோபாஜி, காமேஸ்ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், கிரிதரன், ராஜசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் என்ற அஜய், கண்ணன், மாரீஸ்வரன் உட்பட 22 பேரைக் கைதுசெய்தனர் போலீஸார். நான்கு பேர் தலைமறைவாகிவிட, இன்ஸ்பெக்டர் புகழேந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 16.2.2021-ம் தேதி தொடங்கி நடந்துவந்தது. வழக்கின் முக்கிய ஆதாரமாகச் சிறுமியின் வாக்குமூலமே இருந்தது. மேலும் கைதானவர்களின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் என 680 பக்கக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 96 பேர் சாட்சியம் அளித்தனர். விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட மாரீஸ்வரன் என்பவர் உயிரிழந்துவிட, மீதமுள்ளவர்கள் மீது விசாரணை நடைபெற்றது.

இன்ஸ்பெக்டர் அங்கிள் அந்த ரூமுக்கு வந்தாங்க... 21 பேருக்கு தண்டனை வாங்கிக்கொடுத்த மழலைக்குரல்!

விசாரணை முடிவடைந்து கடந்த 15-ம் தேதி, ‘சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறுமியின் உறவினர் மற்றும் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன் உட்பட 21 பேரையும் குற்றவாளிகள்’ எனத் தீர்ப்பளித்தார் நீதிபதி எம்.ராஜலட்சுமி. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் கடந்த 26.9.2022-ம் தேதியன்று வெளியாகின.

சிறுமியைப் பாலியல் தொழிலில் கட்டாயப் படுத்தித் தள்ளிய ஏழு பெண்கள் உட்பட எட்டு பேருக்கு ஆயுள் முழுக்கச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன் உட்பட 12 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டிருக்கின்றன. தற்போது குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குற்றவாளிகளுக்கு 7,01,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டது. கூடுதலாக, சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டிருக்கிறார்.

குற்றவாளிகள் பலருக்கு அந்தச் சிறுமி வயதில் மகள்கள் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை!