Published:Updated:

மொய்லி, அம்பானி மீது வழக்கு தொடர கெஜ்ரிவாலுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு

Vikatan Correspondent
மொய்லி, அம்பானி மீது வழக்கு தொடர கெஜ்ரிவாலுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு
மொய்லி, அம்பானி மீது வழக்கு தொடர கெஜ்ரிவாலுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு
மொய்லி, அம்பானி மீது வழக்கு தொடர கெஜ்ரிவாலுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு

புதுடெல்லி: வீரப்ப மொய்லி, முகேஷ் அம்பானி மீது வழக்கு தொடர கெஜ்ரிவாலுக்கு அதிகாரமில்லை என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் மீது டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்தபோது அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்து மத்திய அரசுக்கு வழங்குகின்ற இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயித்ததில் பெருமளவு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் கூட்டுச்சதி செய்து இதில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவிடம் அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கடற்படை முன்னாள் தளபதி தகிலியானி, பிரபல வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால், மத்திய அரசு முன்னாள் செயலாளர் சர்மா ஆகியோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார் கெஜ்ரிவால். இந்த விசாரணைக்கு ரிலையன்ஸ் நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்தது.

இந்நிலையில், இவர்கள் மீது வழக்கு தொடர டெல்லி அரசுக்கு உரிமையில்லை என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததது.

அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தபோது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ''மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட மாநில அரசுகளுக்கு உரிமையில்லை. டெல்லி அரசு தொடர்ந்த வழக்கை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கை கெஜ்ரிவால் அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பதிவு செய்துள்ளது" என்று வாதிட்டார்