Published:Updated:

எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலி: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலி: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலி: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலி: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: எதிர்கட்சித் தலைவர் பதவியை முக்கியமானதாக கருதுவதாகவும், ஆனால் அப்பதவி காலியாக உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், லோக்பால் நியமனக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வார்த்தைக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மக்களவையில் மொத்தமுள்ள 545 உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை, அதாவது 55 உறுப்பினர்களை கொண்ட கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க முடியும் என்பதால், 44 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி அளிக்க முடியாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அண்மையில் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இந்நிலையில், லோக்பால் விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கூறிய கருத்துக்களை தெரிவித்த நீதிபதிகள், "லோக்பால் சட்டத்தின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகவும் முக்கியமான அம்சமாக விளங்குகிறது.

லோக்பால் நியமனக் குழுவின் முக்கிய உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராகலாம். மத்திய அரசு முன் வைக்கும் விவகாரங்களில் உள்ள எதிர்மறையான விஷயங்களை எடுத்துரைத்து, அதற்காக குரல் கொடுப்பதே எதிர்க்கட்சித் தலைவரின் முக்கியப் பணியாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டியது அவசியம், அதனை நிலுவையில் வைத்திருக்க முடியாது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் என்ற வார்த்தைக்கு உரிய விளக்கத்தை 4 வார காலத்திற்குள் அளிக்க வேண்டும்"  என மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.