Published:Updated:

கறுப்புப் பண பட்டியல்: 3 பேர் பெயர்களை வெளியிட்டது மத்திய அரசு!

கறுப்புப் பண பட்டியல்: 3 பேர் பெயர்களை வெளியிட்டது  மத்திய அரசு!
கறுப்புப் பண பட்டியல்: 3 பேர் பெயர்களை வெளியிட்டது மத்திய அரசு!
கறுப்புப் பண பட்டியல்: 3 பேர் பெயர்களை வெளியிட்டது  மத்திய அரசு!

புதுடெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள 3 இந்தியர்களின்  பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளது மத்திய அரசு.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ( அபிடவிட்) இந்த பட்டியல் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் டாபர் குழுமத்தின் முன்னாள் இயக்குநர் பிரதிப் பர்மன், ராஜ்கோட் பகுதியைச்சேர்ந்த பங்கஜ் சிமன்லால் லோதியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ நிறுவனத்தின் ராதா எஸ். டிம்ப்லோ ஆகிய 3 பேரின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல பெயர்கள் வெளியாகும்

இன்னும் பலரின் பெயர்கள் மத்திய அரசால் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள யாருடைய பெயரையும் வெளியிடாமல் நிறுத்தி வைக்கும் எண்ணம் ஏதும் இல்லை என அரசு தனது அபிடவிட்டில் தெரிவித்துள்ளது.

அதே சமயம் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் வங்கி கணக்குகள் அனைத்துமே சட்ட விரோதமானதல்ல என்றும், வரி ஏய்ப்புக்கான முகாந்திரம் இருப்பதற்கான ஆதாரம் இல்லாதபட்சத்தில் அவர்களது பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க., நாங்கள்  ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிடுவோம் என்று அறிவித்து இருந்தது  குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிகள் பெயர் வெளியிடப்படவில்லை

இந்நிலையில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் அரசியல்வாதிகள் பெயர் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா விமர்சித்துள்ளார்.கருப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டால் அது காங்கிரஸ் கட்சியை தர்மசங்கடத்திகுள்ளாக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்ததை நினைவுப்படுத்தி உள்ள ராஜா, காங்கிரஸை தர்மசங்கடத்திற்குள்ளாக்கும் பெயர்கள் எங்கே? என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியும், குறிப்பிட்ட சிலரது பெயர்களை மட்டும் மத்திய அரசு வெளியிட்டிருப்பது குறித்து வியப்பு தெரிவித்துள்ளதோடு, முழு பட்டியலையும் வெளியிடுமாறு வலியுறுத்தி உள்ளார்.

காங்கிரஸ் சவால்

இதனிடையே வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் முழு பட்டியலையும் வெளியிட தயாரா? என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் சவால் விடுத்துள்ளார்.

டாபர் குழுமம் மறுப்பு

இதனிடையே பிரதிப் பர்மன் வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தபோது இந்த வங்கி கணக்கு தொடங்கப்பட்டதாகவும், இதில் சட்டப்பூர்வமாகவே இந்த வங்கி கணக்கு தொடங்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ள டாமர் குழும நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இந்த விவகாரத்தில் அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறையிடம் கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய வரிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பங்கஜ் லோதியா

அதேப்போன்று பங்கஜ் லோதியாவும், தான் எதுவும் தவறிழைக்கவில்லை என்றும், தமக்கு சுவிஸ் வங்கி கணக்கு ஏதும் இல்லை என்றும், தமது சொத்துக்கள் குறித்த முழு விவரங்களையும் தாம் வெளியிட்டுள்ளதாகவும், தமக்கு நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ராதா டிம்ப்லோ

மேலும் ராதா டிம்ப்லோவும், பல்வேறு தருணங்களில் தமக்கு தொடர்புடைய சில  இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இந்நிலையில் எந்த அடிப்படையில் தமது பெயர் மத்திய அரசின் அபிடவிட்டில் இடம்பெற்றது என்பதை பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.