Published:Updated:

இரவு நேர தங்குமிடம் அமைக்கும் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

விகடன் விமர்சனக்குழு
இரவு நேர தங்குமிடம் அமைக்கும் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இரவு நேர தங்குமிடம் அமைக்கும் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இரவு நேர தங்குமிடம் அமைக்கும் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: இரவு நேர தங்குமிடம் அமைக்கும் விவகாரத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோருக்கு குளிர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக இரவு நேர தங்குமிடம் அமைப்பது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடனும் 10 நாள்களுக்குள் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடற்றோர் குளிரால் இறக்க நேரிடுவதால் போதுமான இரவு நேர தங்குமிடங்கள் அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கி அமர்வு விசாரணை நடத்தியது.

அப்போது நீதிபதிகள், ''தலைநகரில் வசிக்கும் வீடற்றோர் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், அது தொடர்பான வழக்கை விசாரிக்க முடியாது. அதேசமயம், குளிர் காலத்தில் வீடற்றோர் தவிக்கும் நிலையை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில், அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்பதை அறியத் தெளிவான விளக்கம் இல்லை.

அதனால், வீடற்றோருக்கு குறைந்த பட்சம் தாற்காலிக இரவு நேர தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களை 10 நாள்களுக்குள் அழைத்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசனை நடத்த வேண்டும். வீடற்றோருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், நடவடிக்கைகள் பற்றி அறிந்து அதன் விவரத்தை பிரமாணப் பத்திரமாக 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர்.