Published:Updated:

சர்க்கஸில் சிறுவர்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

விகடன் விமர்சனக்குழு
சர்க்கஸில் சிறுவர்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சர்க்கஸில் சிறுவர்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சர்க்கஸில் சிறுவர்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: சிறுவர், சிறுமிகள் சர்க்கஸில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள சர்க்கஸ் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளை மீட்டு அவர்களுடைய மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ‘பச்பன் பச்சாவ் ஆந்தோலன்‘ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ''ஏற்கனவே உச்ச நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளை சர்க்கஸ்களில் பணிக்கு அமர்த்துவதை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஏதேனும் விதிமீறல்கள் கவனத்துக்கு வந்தால் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகள் சர்க்கஸ் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது குறித்து மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் சர்க்கஸ்களில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர், சிறுமிகளை கொத்தடிமைகளாக பயன்படுத்துதல், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் விரிவான அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

மத்திய அரசு அந்த அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாநில அரசுகளுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்" என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.