Published:Updated:

மன்சூர் அலிகான் படப்பிடிப்பில் குறுக்கீடு: பெப்சிக்கு நீதிமன்றம் தடை!

Vikatan Correspondent
மன்சூர் அலிகான் படப்பிடிப்பில் குறுக்கீடு: பெப்சிக்கு நீதிமன்றம் தடை!
மன்சூர் அலிகான் படப்பிடிப்பில் குறுக்கீடு: பெப்சிக்கு நீதிமன்றம் தடை!
மன்சூர் அலிகான் படப்பிடிப்பில் குறுக்கீடு: பெப்சிக்கு நீதிமன்றம் தடை!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் நடிக்கும் ‘அதிரடி’ படத்தின் படிப்பிடிப்பு பணிகளில் தலையிட பெப்சி அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனுவில் “ என்னுடைய ராஜ் கென்னடி பிலிம்ஸ் நிறுவனம், ‘அதிரடி’ என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. அதில் நான் கதாநாயகனாக நடித்து வருகிறேன். இந்த படத்தை 2 கட்டமாக படமாக்க முடிவு செய்து, பணியில் ஈடுபட்டிருந்தேன்.

இதற்கிடையில், அண்மையில் நடந்த தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தங்களது தனிப்பட்ட நலனுக்காக சங்க நடவடிக்கையை பயன்படுத்துவதையும் கடுமையாக எதிர்த்து இருந்தேன். இதனால், என் மீது சிலர் பகை கொண்டனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி முதல்கட்டப் படப்பிடிப்பு திருவள்ளூர் மாவட்டம், வீராபுரத்தில் நடந்தது. அப்போது, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் அங்கு வந்து, படப்பிடிப்பை நிறுத்தினார்கள். படத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழில்நுட்ப கலைஞர்களை மிரட்டி, அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், அன்று மட்டும் எனக்கு ரூ.5 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியபோது, தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் வரவில்லை. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு மேலாளர் இளங்கோவனிடம் கேட்ட போது, ‘பெப்சி’ அமைப்பின் செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் படப்பிடிப்புக்கு செல்லக்கூடாது என்று மிரட்டி வைத்துள்ளதாக கூறினார்.

மேலும் கே.ஆர்.செல்வராஜ் என்னை தொடர்பு கொண்டு, பெப்சி சங்கத்தை சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் படப்பிடிப்புக்கு பணிக்கு வரமாட்டார்கள் என்றும், பெப்சி சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களை கொண்டு படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றும் கூறினார். காரணம் எதுவுமின்றி இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், எனக்கு இதுவரை ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை, பெப்சி அமைப்பிடம் இருந்து பெறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது.

மன்சூர் அலிகான் படப்பிடிப்பில் குறுக்கீடு: பெப்சிக்கு நீதிமன்றம் தடை!

எனவே, ராஜ் கென்னடி என்ற என்னுடைய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ‘அதிரடி’ என்ற படத்தையும், எதிர்காலத்தில் என் நிறுவனம் தயாரிக்கும் வேறு திரைப்படங்களுக்கும் இடையூறு ஏற்படுத்த ‘பெப்சி’ அமைப்புக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், எனக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகை ரூ.25 லட்சத்தை பெப்சி அமைப்பு, அதன் செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், உறுப்பினர்கள் டிஸ்கோ பாபு, காஸ்டீயூம் மூர்த்தி ஆகியோர் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் முரளிகுமரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘மனுதாரர் மன்சூர் அலிகான் தயாரித்து நடிக்கும் ‘அதிரடி’ படத்தின் படப்பிடிப்பு பணியில் பெப்சி அமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகள் தலையிட இடைக்கால தடை விதிக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.