Published:Updated:

பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு: 2வது நாளாக தயாநிதி மாறனிடம் இன்று விசாரணை!

விகடன் விமர்சனக்குழு
பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு: 2வது நாளாக தயாநிதி மாறனிடம் இன்று விசாரணை!
பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு: 2வது நாளாக தயாநிதி மாறனிடம் இன்று விசாரணை!
பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு: 2வது நாளாக தயாநிதி மாறனிடம் இன்று விசாரணை!

புதுடெல்லி: பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் இன்றும் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தயாநிதி மாறன் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரரின் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, 2013 ஆம் ஆண்டில் தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர் பிரம்மநாதன் மற்றும் தயாநிதி மாறனின் சகோதரர் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது டெல்லி சி.பி.ஐ. போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் கவுதமன், அவரது சகோதரர் டி.வி.யின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.

மேலும், தயாநிதி மாறனை ஜூலை 1 ஆம் தேதி (நேற்று) நேரில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து, அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அதற்கு, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தயாநிதி மாறன், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி, பிணைத் தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு டெல்லியிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தயாநிதி மாறன் ஆஜரானார். அவரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, தயாநிதி மாறனிடம் 65 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதில் அவர் பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியவில்லை எனவும், நினைவில் இல்லை என்றும் கூறியதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

இந்நிலையில், பல்வேறு கேள்விகளுக்கு தயாநிதிமாறன் முறையாக பதிலளிக்கவில்லை என்பதால் இன்று மீண்டும் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. உத்தரவிட்டது. இதையடுத்து இன்று மீண்டும் ஆஜரான தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.