Published:Updated:

மாட்டிறைச்சி சாப்பிட்டதால் கொலை: குடும்பத்தினரை சந்திக்க கெஜ்ரிவாலுக்கு அனுமதி!

மாட்டிறைச்சி சாப்பிட்டதால் கொலை: குடும்பத்தினரை சந்திக்க கெஜ்ரிவாலுக்கு அனுமதி!
மாட்டிறைச்சி சாப்பிட்டதால் கொலை: குடும்பத்தினரை சந்திக்க கெஜ்ரிவாலுக்கு அனுமதி!

பசேரா (உ.பி.): உத்தரபிரதேசத்தில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டதாக கூறி அடித்துக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்க, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அம்மாநில காவல்துறை முதலில் அனுமதி மறுத்தது சர்ச்சையானதை தொடர்ந்து, மாநில அரசு பின்னர் அவருக்கு அனுமதி அளித்தது. 
 

மாட்டிறைச்சி சாப்பிட்டதால் கொலை: குடும்பத்தினரை சந்திக்க கெஜ்ரிவாலுக்கு அனுமதி!

உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டம் அமலில் உள்ள நிலையில், அங்குள்ள தாத்ரி மாவட்டத்தின் பசேரா கிராமத்தில் மொஹாமத் இக்லாக் (50) என்பவர் மாட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக தகவல் பரவியது. இந்த பிரச்னையில் அந்த கிராமவாசிகளால் இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டார். அவருடைய மகன் தானிஷ் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரபிரதேச அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

மத்திய அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், கொல்லப்பட்ட இக்லாக் குடும்பத்தினரை சந்திக்க தாத்ரி மாவட்டத்தில் உள்ள பசேரா கிராமத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செல்ல முயன்றார். ஆனால், பசோரா கிராமத்திற்குள் நுழைய கெஜ்ரிவாலுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். கெஜ்ரிவால் மற்றும் அவருடன் வருகை தந்த சஞ்செய் சிங் மற்றும் குமார் விஷ்வாஸ் ஆகியோரை அரசு விருந்தினர் மாளிகைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், பசேரா கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், ஓவசி, மகேஷ் சர்மா ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அமைதியை விரும்பும் தனக்கு ஏன் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர் என்று கேள்வி எழுப்பினார். மேலும்  இக்லாக் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவே தாம் விரும்புவதாக கெஜ்ரிவால் கூறினார்.

கெஜ்வாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மாநில அரசு பின்னர் அவருக்கு பசேரா கிராமத்திற்குள் நுழையவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கவும் உத்தரபிரதேச அரசு பின்னர் அனுமதி அளித்தது.