Published:Updated:

ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின!” - நடிகர் விஜய்

தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கக் கோரும் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

`சமூகநீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாயப் பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்திலிருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடமிருந்துதான் அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது."

- இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துகள் இவை.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

நீதிபதியின் இந்தக் கருத்துகள் தமிழகத்தில் விவாதப் பொருள் ஆகின. தொடர்ந்து வாகன நுழைவு வரி பாக்கியைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னைப் பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இன்று இந்த வழக்கில் விஜய் தரப்பில் இருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், ``இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின” எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது. வழக்கு விவரங்களில் தொழிலைக் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை” எனத் தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கக் கோரும் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ``என்னை தேச விரோதியாக விமர்சித்து கருத்து கூறியதும் தேவையற்றது’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கக் கோரும் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு