Published:Updated:

முயற்சி உடையாள் - 2 - நீதித்துறையில் நீங்களும் ஜெயிக்கலாம்!

முயற்சி உடையாள்
பிரீமியம் ஸ்டோரி
முயற்சி உடையாள்

வழிகாட்டும் வழக்கறிஞர் அஜிதா

முயற்சி உடையாள் - 2 - நீதித்துறையில் நீங்களும் ஜெயிக்கலாம்!

வழிகாட்டும் வழக்கறிஞர் அஜிதா

Published:Updated:
முயற்சி உடையாள்
பிரீமியம் ஸ்டோரி
முயற்சி உடையாள்

வக்கீல் பொண்ணு குடும்பத் துக்கு சரிப்பட்டு வராதுங்க’. ‘கல்யாணத் துக்கு அப்புறம், வக்கீல் தொழில்லேருந்து விலகிருவேன்னு வாக்கு கொடுத்தா, கல்யாணத்தைப் பத்தி பேசுவோம்.’

எங்கள் ஊர் குமாரி அக்காவைப் பெண் பார்க்க வருபவர்கள் பொதுவாகச் சொல்லும் காரணம் இது. தன் லட்சியத்தில் கவனமாக இருந்த குமாரி அக்காவுக்குத் திருமணம் தள்ளிப்போனது. பல வருடங்கள் கழித்து, குமாரி அக்காவைத் திருமணம் முடித்தார் ஒருவர். இன்று குமாரி அக்கா வெற்றிகரமான வழக்கறிஞர்.

வழக்கறிஞர்கள் உள்ள குடும்பப் பின்னணி யிலிருந்து வருபவர்கள்தாம் அந்தத் துறைக்கு வருவார்கள் என்ற நிலை சில ஆண்டுகள் முன்பு வரை இருந்தது. இன்று அது மாறி யிருக்கிறது. நீதித்துறைக்கு வரும் பெண் களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கறுப்பு அங்கியில் கம்பீர நடை போடத் துடிக்கும் பெண்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா தரும் அனுபவபூர்வமான யோசனைகள் இதோ...

‘‘ஒரு வழக்கறிஞராக வெற்றி பெற, அந்தத் தொழில் பற்றிய பார்வை மிக முக்கியம். ‘பெண் தானே… நாம் சொல்வதைக் கேட்பார்கள்’ என்ற எண்ணத்தில் கட்சிக்காரர்கள் உங்களை அணுகலாம். நான் உட்பட பெண் வழக்கறிஞர்கள் பலரும் இந்தச் சூழலைக் கடந்துதான் வந்திருக்கிறோம். ‘நான் சட்டம் பயின்றவள், சட்டத்தின் நுணுக்கங்களைக் கற்றவள்’ என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெளிவுபடுத்தி விட வேண்டும். மேலும், பெண் வழக்கறிஞர் என்பதற்காகக் குறைந்த கட்டணத்தில் வாதாடச் சொல்லிக் கேட்பார்கள். வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாகக்கூட வாதாடலாம், தவறில்லை. ஆனால், நம் திறமையைக் குறைத்து மதிப்பிடுபவர்களிடம் கறாராக இருங்கள்.

முயற்சி உடையாள் - 2 - நீதித்துறையில் நீங்களும் ஜெயிக்கலாம்!

பெண்களைவிட ஆண்கள் திறமை யானவர்கள் என்ற பொது மனநிலை வழக்கறிஞர்கள் துறையிலும் உண்டு. பாலினம் பார்க்காமல், ஒரு கட்சிக்காரர் உங்களைத் தேடி வர, உங்கள் திறமையில் நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள். எந்த வழக்கை எடுத்தாலும், உங்கள் பணிகளை நேர்த்தியாகச் செய்து முடியுங்கள். பெண்களிடம் ரகசியம் தங்காது என்ற கருத்தும் இருக்கிறது. வழக்கறிஞராக வரும் பெண்களுக்கு ரகசியம் காக்கத் தெரிந்திருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கட்சிக்காரர்கள் பகிரும் தகவலை மற்றவர்களிடம் பகிராதீர்கள்.

வழக்கறிஞராக விரும்புபவர்களுக்கு தங்களைச் சுற்றி நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் இருக்க வேண்டும். எதையும் கேள்வி கேட்கும் வழக்கத்தை படிக்கும் போதே வளர்த்துக் கொள்ளுங்கள்.

எந்த வழக்கைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம். என் கரியரில், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக இதுவரை நான் வாதாடியதே இல்லை. அதே போன்று போதைப் பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட வர்களுக்கு ஆதரவாகவும் நான் வாதாடியதில்லை. அதற்காக நீங்களும் வாதாடக் கூடாது என்று நான் சொல்ல வில்லை. இது என் கொள்கை. அதே போன்று உங்களுக்கான கொள்கையில் தெளிவாக இருங்கள்.

வழக்கறிஞர் பணியில் அடுத்தடுத்த நிலைகளுக்குப் போக, குறிப்பாக உயர் நீதிமன்றத்தில் பணி செய்ய, ஆங்கிலப் புலமை மிக முக்கியம். தமிழ் மொழியில் சட்டம் பயின்றாலும், உயர் நீதிமன்றங்களில் வாதாடவும், முன்பு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளை அலசி ஆராயவும் ஆங்கில அறிவு அவசியம். எனவே, படிக்கும்போதே ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

பெண் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னை திருமணம். என் உடன் பயின்ற தோழரைத் திருமணம் செய்து கொண்ட தால், நான் திருமணம் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ள வில்லை. ஆனால், பெண் வழக்கறிஞர்கள் சிலருக்கு திருமணம் என்பது பிரச்னையாகவும் தடை யாகவும் உள்ளது. எனவே, திருமணத்துக்கு முன்பே உங்கள் இணையரின் வீட்டில் உங்கள் பணி பற்றித் தெளிவாகப் பேசி முடிவெடுத்து விடுவது நல்லது.

வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய முதல் சில ஆண்டுகளுக்கு பொருளாதார நெருக்கடிகள் இருக்கும். சீனியர் வழக்கறிஞர் களிடம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். அதன் பின்பும் கூட, ‘என்னை நம்பி யார் வழக்குகள் தருவார்?’ என்ற குழப்பம் இருக்கும். அவற்றை யெல்லாம் உடைத்து, உங்கள் திறமை மீது நம்பிக்கை கொள்ளுங்கள். சீனியர்களிடம் பயிற்சி எடுக்கும்போது, வழக்குகளைக் கையாளும் விதம், குறிப்புகள் எடுத்தல், வாதாடுதல், பிரச்னைகளை அலசி ஆராய்தல் போன்றவற்றில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். அனுபவமிக்க, அதிக வழக்குகளை கையாளும் வழக்கறிஞரிடம் ஜூனியராக சேரும்போது நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் வரும்.

வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கியவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு ஒன்று உள்ளது. அதுதான் நீதிபதி பதவி. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமும் நீதித்துறையும் சேர்ந்து நடத்தும் நீதிபதிக்கான தேர்வு எழுதி, படிப்பை முடித்த அடுத்த ஆண்டே கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி ஆகலாம். நீதிபதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நீதிமன்ற வளாகம், பார் கவுன்சிலில் நடத்தப்படுகின்றன.

வழக்கறிஞர்கள், முனைவர் பட்டம் பெற்று, தனியார் மற்றும் பொதுத் துறை கல்லூரிகளில் விரிவுரையாளராக, பேராசிரியராகப் பணிபுரியும் வாய்ப்புகளும் உள்ளன.

எங்கு படிக்கலாம்... என்ன படிக்கலாம்?

நீங்கள் தமிழ்நாட்டுக்குள் சட்டம் பயில விரும்புகிறீர்கள் என்றால் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளைத் தேர்வு செய்து, சட்டத்தில் இளங்கலை, (ஐந்தாண்டு, மூன்றாண்டு) முதுகலை படிப்புகளைப் படிக்க இயலும். இளங்கலை ஐந்தாண்டு பட்டப்படிப்பில் சேர, பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். நீங்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்கிறீர்கள் என்றால் சட்டக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்து இளங்கலை சட்டத்துக்கான சான்றிதழ் பெற முடியும். சட்டத்தில் இளங்கலை முடித்தவர்கள் இரண்டாண்டு முதுகலை சட்டப்படிப்பு படிக்கலாம்.

அரசு சட்டக் கல்லூரிகள் அல்லாமல், டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர்ந்து மூன்றாண்டு, ஐந்தாண்டு (ஹானர்ஸ்) படிப்புகள் படிக்கலாம். ஆனால், அரசு சட்டக்கல்லூரியைவிட இங்கு கட்டணம் அதிகம். பொதுவாகத் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வுகள் கிடையாது. நீங்கள் இளங்கலை சட்டம் படிக்கிறீர்கள் என்றால் பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் அடிப்படையிலும், முதுகலை என்றால் இளங்கலையில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெறும்.

முயற்சி உடையாள் - 2 - நீதித்துறையில் நீங்களும் ஜெயிக்கலாம்!

அடுத்தபடியாக இந்தியா முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சேர பொது சட்டச் சேர்க்கைக்கான தேர்வை, (Common Law Admissions Test - CLAT ) பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஒவ்வோர் ஆண்டும் நடத்தும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம், LLB என்ற ஐந்து வருட இளநிலை சட்டப்படிப்பு அல்லது LLM என்ற ஒரு வருட முதுநிலை பட்டப்படிப்பு படிக்க இயலும். சட்டத்தில் இளங்கலை முடித்தவர்கள் டிப்ளோமா இன் பிசினஸ் லா, கிரிமினல் லா, கார்ப்பரேட் லா மேனேஜ்மென்ட் போன்ற டிப்ளோமா படிப்புகளையும், சில சான்றிதழ் படிப்புகளையும் படிக்கலாம். சட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வழக்கறிஞராக வாதாடுவதைத் தாண்டி நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. வழக்கறிஞராகப் பணிபுரிய வேண்டும் என்றால் இந்திய பார் கவுன்சிலில் பதிவு செய்து, பார் கவுன்சில் நடத்தும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகே வழக்கறிஞராக வாதாட முடியும்.

காவல்துறையில் கால் பதிக்க...

கடந்த இதழில் 'முயற்சி உடையாள்' பகுதியில் வெளியான 'காக்கிச்சட்டை கனவு நனவாக' கட்டுரையைப் படித்த வாசகியருக்கு உதவும் வகையில் கூடுதல் தகவல்கள்...

காவல்துறையில் நுழைய நான்கு வகையான என்ட்ரி நிலைகள் உள்ளன. ஐ.பி.எஸ் போன்ற காவல்துறையின் உயர் பதவிக்கு வருபவர்கள் அகில இந்திய அளவிலான ஆட்சிப்பணி தேர்வில் எடுத்த மதிப்பெண்ணைப் பொறுத்தே அவர்களுக்கு காவல்துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தத் தேர்வு தொடர்பான தகவல்களை அறிய https://www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும். கான்ஸ்டபிள் மற்றும் எஸ்.ஐ பணிக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்துகிறது. அந்தத் தேர்வில் நீங்கள் கலந்துகொள்ள https://www.tnusrb online.org இணையதளப் பக்கத்தைக் காணவும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1 தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் நேரடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவிக்குத் தேர்வாகலாம். இந்தத் தேர்வில் 30 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு உண்டு . இந்தத் தேர்வு குறித்த தகவல்களை அறிய https://www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தைக் காணவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism