Published:Updated:

எச்சரிக்கப்படுவது மட்டுமே தண்டனையாக இருக்க வேண்டும்!

பிரசாந்த் பூஷண்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாந்த் பூஷண்

வருத்தம் - விமர்சனம் - அவதூறு

எச்சரிக்கப்படுவது மட்டுமே தண்டனையாக இருக்க வேண்டும்!

வருத்தம் - விமர்சனம் - அவதூறு

Published:Updated:
பிரசாந்த் பூஷண்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாந்த் பூஷண்
உச்ச நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டதற்காக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘அவர் குற்றவாளி’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, விலையுயர்ந்த ‘ஹார்லி டேவிட்சன்’ மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது. அதைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘குடிமக்கள் நீதி பெறுவதற்கான அடிப்படை உரிமையை மறுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தைப் பூட்டிவிட்டு, நாக்பூர் ராஜ்பவனில் பா.ஜ.க தலைவர் ஒருவருக்குச் சொந்தமான ரூ.50 லட்சம் விலை மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை முகக்கவசமோ, தலைக்கவசமோ அணியாமல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓட்டுகிறார்’ என்று விமர்சித்திருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்தது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது பிரசாந்த் பூஷண் வருத்தம் தெரிவித்தார். ‘தலைமை நீதிபதி அமர்ந்திருந்த மோட்டார் சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதைக் கவனிக்காமல் கருத்து தெரிவித்துவிட்டேன். ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் அமர்வதற்குத் தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்கிறேன். எனவே, எனது ட்வீட்டில் அந்தப் பகுதிக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். மற்ற பகுதிகளுக்கு வருத்தம் இல்லை’ என்று கூறினார். இந்த வழக்கில், `பிரசாந்த் பூஷண் குற்றவாளி’ என்று ஆகஸ்ட் 14-ம் தேதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரம் ஆகஸ்ட் 20-ம் தேதி தெரிவிக்கப்படவிருக்கிறது.

பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்

தீர்ப்பு வருவதற்கு முன்பாக இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிமன்றங்களை விமர்சனமே செய்யக் கூடாதா?’ என்ற தலைப்பில் 12.08.2020 ஜூ.வி-யில் ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதியிருந்தார்.

கே.சந்துரு
கே.சந்துரு

அவரிடம் இந்தத் தீர்ப்பு குறித்துக் கேட்டபோது, ‘‘தலைமை நீதிபதி மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருந்தது பற்றி கருத்து சொன்னதற்காக இப்படியொரு தீர்ப்பு வழங்கியிருப்பது தவறு. ஒரு நீதிபதி, நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கில் இருக்கும்போது, ‘நீங்கள் பொழுதுபோக்குகிறீர்கள்... நீதிமன்றம் மூடியிருக்கிறது’ என்று இன்னொருவர் சொல்வது வெறும் வருத்தம்தான். அது, நீதிமன்றத்தின் மீதிருக்கும் நம்பிக்கையில் தெரிவிக்கப்பட்ட வருத்தமே தவிர, நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. இந்தத் தீர்ப்பின்படி, ஆறு மாதங்கள்வரை சிறைத்தண்டனை கொடுக்கலாம் அல்லது ரூ.2,000 அபராதம் விதிக்கலாம் அல்லது இரண்டையும் சேர்த்துக்கூட வழங்கலாம். பிரசாந்த் பூஷண்மீது ஏற்கெனவே ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதையும் விசாரித்தால், இதே தண்டனை தான். ஆனால், அந்த வழக்கைப் பிறகு விசாரிப்பதாகச் சொல்லிவிட்டு, இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். உச்ச நீதிமன்றம் தான் இறுதியான அமைப்பு. அதற்கு மேல் அப்பீல் இல்லை. எனவே, அவருக்கு எச்சரிக்கை கூட தரப்படலாம். என்னைப் பொறுத்தவரையில், ‘எச்சரிக்கப்படுவது’ மட்டுமே இந்த வழக்கில் தண்டனையாக இருக்க வேண்டும்” என்றார்.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன் -  குமரகுரு
ஆர்.கே.ராதாகிருஷ்ணன் - குமரகுரு

மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசிய போது, ‘‘பிரசாந்த் பூஷணின் ட்விட்டர் பதிவில் என்ன தவறு என்பது எனக்குப் புரியவில்லை. பைக்மீது தலைமை நீதிபதி அமர்ந்திருந்தது உண்மைதான். அந்த பைக் உரிமையாளர் யார் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. முழு ஊரடங்கு நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்திருக் கிறது என்பது உண்மை. கொரோனா பெருந்தொற்று காலத்தில், `தேவையில்லாமல் வெளியே போகக் கூடாது’, `பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்’ போன்ற விதிகள் அமலில் இருந்தன. அந்த விதிகளை தலைமை நீதிபதி கடைப்பிடிக்கவில்லை. அதைத்தான் பிரசாந்த் பூஷண் பதிவிட்டிருந்தார். அது எப்படி நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருக்க முடியும்? அரசியல் சாசனத்துக்கு முன்பாக அனைவரும் சமம்தானே... தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டமும் அனைவருக்கும் பொது தானே... அது தலைமை நீதிபதிக்கும் பொருந்தும்தானே... இதில் எங்கே நீதிமன்ற அவமதிப்பு வருகிறது? ஜனநாயகம் கேள்விக்குறியாக இருக்கிற பல வழக்குகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதே தெரியாமல் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அப்படியென்றால், நீதிமன்றத்தின் மீதே நமக்குக் கேள்வி எழுகிறது” என்றார்.

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான குமரகுருவிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக் கலாம். ஒரு குறிப்பிட்ட வழக்கில், `சாட்சிகள் சரியாக விசாரிக்கப்பட வில்லை’ என்று விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளை விமர்சிக்கக் கூடாது. சட்டப்படி அது தவறு. நீதிபதிகளை விமர்சித்தால், அது நீதிமன்ற அவமதிப் பாகக் கருதப்படும். அந்த வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைத் தனிப்பட்ட முறையில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விமர்சித்தது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ்தான் வரும். எனவேதான், `அவர் குற்றவாளி’ என்று தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, ஒருநாள் முழுவதும் நீதிமன்றத்தில் அவரை இருக்கவைத்து அனுப்பிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். தண்டனை எப்படிப் பட்டதாக இருந்தாலும், அவருக்கு ‘மூத்த வழக்கறிஞர்’ என்ற அந்தஸ்து நிச்சயம் பறிக்கப்பட்டுவிடும்’’ என்றார்.

எச்சரிக்கப்படுவது மட்டுமே தண்டனையாக இருக்க வேண்டும்!

உலகின் பெரும்பாலான நாடுகளில் `நீதிமன்ற அவமதிப்பு’ என்பது சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில், `கருத்து சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை’ என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறிவிட்டு, `நீதிமன்ற அவமதிப்பு’ என்ற அம்சத்தையும் சட்டத்தில் வைத்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய முரண்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிமன்றங்களை விமர்சனமே செய்யக் கூடாதா?’ - உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு எழுதிய கட்டுரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism