Published:Updated:

முத்துக்குமாரசாமி வழக்கு: `ஆறு வருடங்களாக ஆறாத ரணம்!’ - உறவினர்கள் உருக்கம்

தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரசாமி
தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரசாமி

வேளாண் பொறியியல் அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றிய முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து ஆறு வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், மரணத்தின் மர்மம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பாளையங்கோட்டையில், உழவர் சாலையில் வேளாண் பொறியியல் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. அந்த அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர், முத்துக்குமாரசாமி. மனைவி மற்றும் இரு மகன்களுடன் திருமால் நகர் பகுதியில் வசித்துவந்தார்.

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி
வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி

கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி முத்துக்குமாரசாமி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். பணியில் நேர்மையாகவும் திறமையாகவும் செயல்பட்ட அவரது மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் பணியாற்றியபோது, நெல்லை வேளாண்மைத்துறையில் காலியாக இருந்த ஏழு தற்காலிக ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஒவ்வொருவரிடமும் பணம் வசூல் செய்து கொடுக்குமாறு அமைச்சரும் உயரதிகாரியும் நெருக்கடி கொடுத்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் எழுந்தது.

Vikatan

அப்போதைய வேளாண்துறை அமைச்சராக இருந்த `அக்ரி’ கிருஷ்ணமூர்த்திக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து அப்போதைய முதல்வரான மறைந்த ஜெயலலிதா நீக்கினார்.

முத்துக்குமாரசாமி மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்தது. அதைத் தொடர்ந்து, அவருக்குத் தொலைபேசிவாயிலாக நெருக்கடி கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

நீதி கேட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
நீதி கேட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. அதை எதிர்த்து முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய முத்துக்குமாரசாமியின் உறவினரும், வழக்கறிஞருமான பிரம்மா,``நேர்மையாகச் செயல்பட்டதற்காக முத்துக்குமாரசாமியை நெருக்கடிக்கு உள்ளாக்கி அவரைத் தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறார்கள். அவரது மரணம் நடந்து ஆறு ஆண்டுகளாகியும் அவரது குடும்பத்தினர் இன்னும் அந்தத் துயரத்திலிருந்து விடுபடவில்லை.

வழக்கறிஞர் பிரம்மா
வழக்கறிஞர் பிரம்மா

வேளாண்மைத்துறையில் நடந்த பணியாளர் நியமனம் தொடர்பாக பணம் வசூலித்துக் கொடுக்குமாறு நிர்பந்தித்ததுடன், மிரட்டியுமிருக்கிறார்கள். இதில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அவர்களின் டார்ச்சர் காரணமாகவே அவர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த `அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியை உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருக்கிறோம். `எங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்காமலேயே வழக்கிலிருந்து முதலாவது குற்றவாளியை நீக்கியது செல்லாது’ என நாங்கள் முறையிட்டுள்ளோம்.

பாதிக்கப்பட்ட எங்கள் கருத்தைக் கேட்காமலேயே அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டது தவறு என முறையிட்டிருக்கிறோம்.
வழக்கறிஞர் பிரம்மா

சி.பி.சி.ஐ.டி தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. நான்கு வருடங்களாகக் கிடப்பிலிருக்கும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தால், எங்களுக்கு முழுமையாக நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக ஒவ்வொரு வருடமும் நான் நெல்லை மாநகரில் போஸ்டர்களை ஒட்டிவருகிறேன். முதலாம் ஆண்டில், `நெல்லையப்பா நீதி சொல்லப்பா... சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடு!’ என்று போஸ்டர் ஒட்டியதற்காக போலீஸார் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் நீதிமன்றம் என்னை வழக்கிலிருந்து விடுவித்தது.

பிரம்மா ஒட்டியிருக்கும் போஸ்டர்
பிரம்மா ஒட்டியிருக்கும் போஸ்டர்

இந்த ஆண்டும் வழக்கம்போலவே நான் போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். தற்போது தேர்தல் நேரமாக இருப்பதால் முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரம் அரசியல்ரீதியாகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது” என்று தெரிவித்தார். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்பதாக இந்த வழக்கு மாறிவிடக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு