Published:Updated:

‘சாகும் வரை ஆயுள்!’ - அயனாவரம் வழக்கில் அதிரடி தீர்ப்பு

அயனாவரம் வழக்கில் அதிரடி தீர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
அயனாவரம் வழக்கில் அதிரடி தீர்ப்பு

நீங்கள் மரணதண்டனை அளிக்கும் வகையிலான குற்றத்தைப் புரிந்துள்ளீர்கள். இருப்பினும்...

மாற்றுத்திறனாளி சிறுமியை, பதினேழு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? 2018-ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தக் கொடூரத்தில் 64 வயது முதியவர் முதல் 23 வயது இளைஞர்கள் வரை ஈடுபட்டதுதான் கொடுமையிலும் கொடுமை! இந்தக் கொடூரர்களுக்கு, சென்னை போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தண்டனைகளை பிப்ரவரி 3-ம் தேதி வழங்கியது.

அயனாவரத்தில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் 350 குடியிருப்புகள் உள்ளன. இங்கு டெல்லியைச் சேர்ந்த தம்பதி வசித்தனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் வெளிமாநிலத்தில் படிக்க, இளைய மகளுடன் இந்த அப்பார்ட்மென்டில் வசித்தனர். ஏழாம் வகுப்பு படித்துவந்த இளைய மகளுக்கு, சரியாக காது கேட்காது; திக்கித்திக்கித்தான் பேசுவார்.

அப்பார்ட்மென்ட் லிஃப்ட்டைப் பயன்படுத்தும்போது, லிஃப்ட் ஆபரேட்டரான 64 வயது ரவிக்குமார் முதன்முதலில் தன் இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளார். பிறகு, ஒருவர் மாற்றி ஒருவர் என நான்கு பேர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியே சொன்னால் உன் அப்பா-அம்மாவைத் தீர்த்துக்கட்டி விடுவோம்’ என்று கத்தியைக் காட்டியும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி வேறு யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லவில்லை. சிறுமியின் பயம் அந்த மாபாதகர்களுக்கு இன்னமும் சாதகமாக இருக்க, அப்பார்ட்மென்ட்டுக்கு வேலைக்கு வரும் பிளம்பர் உட்பட பலரும் சிறுமியைச் சீரழித்துள்ளனர். மொத்தம் 17 பேர் சிறுமியைச் சீரழித்துள்ளனர். கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இந்தக் கொடுமை நடந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிறுமியின் மூத்த சகோதரி விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோதுதான் தங்கையின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டுள்ளார். ‘அம்மா... இவ ஏன் இப்படிப் பித்துப்பிடித்ததுபோல இருக்கா?’ என்று தன் தாயிடம் கேட்க, ‘அவ கொஞ்ச நாளாவே இப்படித்தான் இருக்கா’ என்று பதில் வந்துள்ளது. சிறுமியைக் கூர்ந்து கவனித்த சகோதரி, கழுத்துப் பகுதியில் பல் பதிந்த தடத்தைக் கவனித்துள்ளார். தொடர்ந்து தங்கையிடம் விசாரித்தபோதுதான், தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறி அழுதுள்ளார். அதையடுத்துதான் நடந்த கொடூரங்கள் அனைத்தும் அம்பலத்துக்கு வந்தன.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

2018, ஜூலை 18-ம் தேதி குற்றவாளிகள் 17 பேரும் கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தங்கள் மகளுக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தால் ஏற்பட்ட வேதனை காரணமாக, அந்தக் குடும்பம் மீண்டும் டெல்லிக்குச் சென்றுவிட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் தேவைப்பட்ட போதெல்லாம் சிறுமி ஆஜரானார். இதனால் வழக்கு விசாரணை தொய்வில்லாமல் நடந்து, ஒன்றரை ஆண்டுகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே பாபு என்பவர் இறந்துபோனார். விசாரணை முடிவடைந்து பிப்ரவரி 1-ம் தேதி `15 பேர் குற்றவாளிகள்’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. தோட்டக்காரர் குணசேகரன் என்பவர் மட்டும் விடுவிக்கப்பட்டார். தீர்ப்பைக் கேட்டதும், பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் தாய், தீர்ப்பளித்த நீதிபதி ஆகியோரை நீதிமன்றத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்த குற்றவாளிகளின் உறவினர்கள் வசைபாடிய சம்பவமும் நிகழ்ந்தது. அவர்களை போலீஸார் எச்சரித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீர்ப்பில் முதல் குற்றவாளியான லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் மற்றும் பிளம்பர் சுரேஷ், காவலாளிகள் அபிஷேக், பழனி ஆகியோருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வீட்டு வேலைக்காரர் ராஜசேகருக்கு ஆயுள்தண்டனையும், ஏரல் ப்ராஸ் என்பவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பரமசிவன், ஜெய்கணேஷ், சுகுமாறன், முருகேசன் உள்ளிட்ட மீதமுள்ள ஒன்பது பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டன.

அயனாவரம் வழக்கில் அதிரடி தீர்ப்பு
அயனாவரம் வழக்கில் அதிரடி தீர்ப்பு

தீர்ப்பு வழங்கிய நீதிபதி மஞ்சுளா, ‘‘நீங்கள் மரணதண்டனை அளிக்கும் வகையிலான குற்றத்தைப் புரிந்துள்ளீர்கள். இருப்பினும் உங்கள் தரப்பு குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொண்டதால், உங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறேன்’’ என்று சொன்னார்.

ரமேஷ்
ரமேஷ்

தீர்ப்பு குறித்து அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டபோது, ‘‘இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்ய எதிர்த்தரப்பில் இருந்து எவ்வளவோ முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. எனினும், மிக நேர்த்தியாக அரசுத் தரப்பில் வழக்கை நடத்தினோம். குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும் என்றே நாங்கள் நீதிபதியிடம் வேண்டுகோள்விடுத்தோம். ஆனால், பல்வேறு விஷயங்களைக் கருத்தில்கொண்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாட்சியங்களின் அடிப்படையில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வழக்கு வெகுவிரைவாக நடத்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படுத்தும்வகையில், 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் நாங்கள் அதைத் தகர்த்துள்ளோம். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்களின் சாட்சிகள் அடிப்படையில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, குற்றவாளிகள் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்றாலும், தண்டனையிலிருந்து தப்ப முடியாது’’ என்றார்.

விரைவில் தீர்ப்பு கிடைக்கப் பாடுபட்ட அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறையினர், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.