Published:Updated:

புகாரளிக்கும்போது நேபாளி... விசாரணையின்போது இந்தியர்!

 கிருஷ்ண தாபா
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ண தாபா

கொடநாடு கொலை வழக்கில் ‘ஆள்மாறாட்ட’ சர்ச்சை

‘‘கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் முக்கிய சாட்சியான கிருஷ்ண தாபாவுக்கு பதிலாக அதே பெயரில் வேறொருவரை ஆள்மாறாட்டம் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர்’’ - எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள் இப்படியொரு சர்ச்சையைக் கிளப்பியிருப்பதால், ஊட்டி குளிரைத் தாண்டியும் அங்கு அனல் பறக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஜெயலலிதாவின் டிரைவராக இருந்த சேலத்தைச் சேர்ந்த கனகராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று, கடந்த 2017, ஏப்ரல் 24-ம் தேதி இரவு கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைந்தது. பணியிலிருந்த காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் சென்று சில பொருள்களைத் திருடிச் சென்றது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள்..
குற்றம்சாட்டப்பட்டவர்கள்..

இந்த வழக்கில் முதலானவராகக் கருதப்படும் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அன்றைய தினமே குற்றம்சாட்டப்பட்ட இன்னொரு நபரான சயான் சென்ற கார்மீது டேங்கர் லாரி மோதியது. கேரள மாநிலம், பாலக்காட்டில் நடந்த இந்த விபத்தில் சயான் காயங்களுடன் தப்பினாலும், அவரின் மனைவி வினுப்பிரியாவும் ஐந்து வயது குழந்தை நீலியும் உயிரிழந்தனர். இந்த மர்ம விபத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கனகராஜ் தவிர்த்த மற்ற 10 குற்றம்சாட்டப்பட்ட நபர்களும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டனர். வழக்கில் முக்கியமானவர் களான சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, ‘இந்தக் குற்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பிருக்கிறது’ என்று ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க, வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது நாள்தோறும் சாட்சிகள் விசாரணை நடைபெற்றுவருகிறது.

 கிருஷ்ண தாபா
கிருஷ்ண தாபா

கொலையான ஓம்பகதூருடன் அன்றிரவு பணியாற்றிய நேபாளியான கிருஷ்ண தாபா, இந்த வழக்கின் முக்கிய சாட்சி. வழக்கின் புகார்தாரரும் அவர்தான். கொடநாடு கொலைச் சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே கிருஷ்ண தாபா திடீரென மாயமாக, அவரைத் தேடிப்பிடிக்க, சொந்த நாடான நேபாளத்துக்கு விரைந்தனர் நீலகிரி போலீஸார். பல மாதத் தேடலுக்குப் பிறகு, அவரைப் பிடித்துவிட்டதாகக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரிடம் சாட்சி விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது; அவர் முன் குற்றவாளிகள் அணிவகுப்பும் நடந்தது.

இந்த வாரம் நடந்த சாட்சி விசாரணையில், கிருஷ்ண தாபாவின் அடையாள அட்டையில் தந்தையின் பெயர், முகவரி மற்றும் தேசமே மாறி யிருப்பதைக் கண்டு, ‘இது ஆள்மாறாட்டம்’ என எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

எதிர்த்தரப்பில் ஆஜராகிவரும் வழக்கறிஞர்களில் ஒருவரான விஜயன், இந்தக் குளறுபடி குறித்து நம்மிடம் பேசினார். ‘‘இந்த வழக்கு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் தொடர்புடையதாகச் சொல்லப்படும் கனகராஜ் மரணத்துக்கும், சயானின் மனைவி, மகளின் மரணத்துக்கும் இன்றுவரை விடை கிடைக்கவில்லை. இப்போது, முக்கிய சாட்சியான கிருஷ்ண தாபாவும் சந்தேகத்துக்குரியவராக மாறியிருக்கிறார். புகாரளிக்கும்போது நேபாளியாக இருந்தவர், சாட்சி விசாரணையின் போது இந்தியராக மாறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் தந்தையின் பெயரும் மாறியிருக்கிறது’’ என்றார்.

விஜயன் - ஆனந்தன் - பால நந்தகுமார்
விஜயன் - ஆனந்தன் - பால நந்தகுமார்

வழக்கில் ஆஜராகிவரும் மற்றொரு வழக்கறிஞரான ஆனந்தன், ‘‘கொலை நடந்த சமயத்தில் சாட்சி கிருஷ்ண தாபா அளித்த புகார்க் கடிதத்தில் இருந்த தந்தை பெயர் மற்றும் முகவரியை, தற்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கும் கிருஷ்ண தாபாவின் தந்தை பெயர் மற்றும் முகவரியோடு ஒப்பிடும்போது முற்றிலும் மாறியிருக்கிறது. புகாரளிக்கும்போது, ‘கிருஷ்ண தாபா, த/பெ பல்பகதூர் தாபா, மிக்கினி பிக்கேரே, பார்லோங் மாவட்டம், நேபாள்’ என்ற முகவரியை அப்போது கொடுத்திருந்தார். ஆனால், தற்போது வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கும் கிருஷ்ண தாபாவின் அடையாள அட்டையில், ‘கிருஷ்ண தாபா த/பெ மைத்தா தாபா, பட்டான் பஜார், ஷில்லாங், இந்தியா’ என இருக்கிறது. இதனால், போலியான ஒரு சாட்சியைக் கொண்டுவந்திருப்பதாகச் சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே, முக்கிய சாட்சியான கிருஷ்ண தாபா மற்றும் அவரின் குடியுரிமை குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட நீதிபதியிடமும் உயர் நீதிமன்றத்திலும் மனு கொடுக்கவிருக்கிறோம்’’ என்றார்.

இது குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் பால நந்தகுமாரிடம் பேசினோம். ‘‘இது சாதாரண விஷயம். கிருஷ்ண தாபாவின் சொந்த நாடு நேபாளம். ஆனால், வேலை நிமித்தமாக அவர் இந்தியாவின் ஷில்லாங்குக்கு வந்திருக்கிறார். மேலும், அவரின் அப்பாவுக்கு இரண்டு பெயர்கள் இருக்கின்றன. அடையாள அட்டையில் வேறு வேறு பெயர் இருக்கிறதே தவிர, வேறெந்தக் குளறுபடியும் இல்லை’’ என்றார்.

கொடநாடு கொலை வழக்கு இன்னும் எத்தனையெத்தனை திருப்பங்களைச் சந்திக்க இருக்கிறதோ... வெளிவரும் நேரம் பார்த்து, உண்மை எங்கோ ஒளிந்திருக்கிறது!