Published:Updated:

`கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்!’ - கடலூர் ஆணவக்கொலை வழக்கில் ஒருவருக்குத் தூக்கு; 12 பேருக்கு ஆயுள்!

கடலூர் மாவட்டம், கண்ணகி, முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என்று எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்திருக்கிறது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படிக்கும்போது காதல் ஏற்பட்டிருக்கிறது. தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்று நினைத்த இருவரும் கடந்த 5.05.2003 அன்று கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

கொலை
கொலை

அதையடுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்) தனது உறவினர் வீட்டில் மனைவி கண்ணகியைத் தங்கவைத்த முருகேசன், ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்திருக்கும் வண்ணாங்குடிகாட்டிலுள்ள வேறோர் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியைக் காணாமல் தேடிய அவரின் உறவினர்களுக்கு இருவரின் காதல் விவகாரம் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியை அடித்து உதைத்து, மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும், ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து முருகேசனையும் 2003-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி குப்பநத்தம் கிராமத்துக்கு அழைத்து வந்தனர் கண்ணகியின் உறவினர்கள். அன்றைய தினமே இருவரையும் மயானத்துகு அருகில் அழைத்துச் சென்று கை கால்களை கட்டி ஊர்மக்கள் முன்னிலையில் காது மற்றும் மூக்கில் விஷத்தை ஊற்றிக் கொலைசெய்தனர். அதையடுத்து அவர்களின் சடலத்தை தனித்தனியாக எரித்துவிட்டனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தில் கூறியபோது, அது தற்கொலை என்று கூறி அந்தப் புகாரை ஏற்காமல் திருப்பியனுப்பப்பட்டனர். அதற்கடுத்து சில நாள்கள் கழித்து ஊடகங்களில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானது. அதனால் 18 நாள்கள் கழித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரை வாங்கி காதல் திருமணத்தால் தங்கள் பிள்ளைகளை ஆணவக்கொலை செய்துவிட்டனர் என்று கண்ணகி தரப்பில் நான்கு பேர் மீது வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், முருகேசன் தரப்பிலும் நால்வர் மீது வழக்கைப் பதிவுசெய்தது.

தூக்கு மேடை
தூக்கு மேடை

அதையடுத்து காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பியதால் 2004-ம் ஆண்டு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது வழக்கு. வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதே ஆண்டில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரின் மகன் மருதுபாண்டி, வழக்கைச் சரியாகக் கையாளாமல் கொலையை மறைக்க முயன்ற விருத்தாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது சி.பி.ஐ. கடலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கின் விசாரணையில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிப்போனார்கள். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று 13 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி உத்தமராசா.

Vikatan

தொடர்ந்து வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி, அவரின் உறவினரான குணசேகரன் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிபதி, மிகவும் காட்டுமிராண்டித்தனமாகக் கொடுஞ்செயலை அரங்கேற்றியிருப்பதாகத் தெரிவித்தார். அதையடுத்து தண்டனைப் பட்டியலை வாசிக்கத் தொடங்கியவர், கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரின் அண்ணன் மருதுபாண்டி, குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் வழக்கை சரியாகக் கையாளாத விருத்தாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என்றும் அறிவித்தார்.

தொடர்ந்து இரண்டாம் குற்றவாளியான கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்குத் தண்டனை என்றும், மற்ற 12 பேருக்கும் மூன்று ஆயுள் தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஆணவக்கொலைக்காக வழங்கிய இரண்டு தீர்ப்புகளை மேற்கோள்காட்டிய அவர், ``இந்த ஆணவக்கொலைகள் எளிய மக்களை அச்சுறுத்தக்கூடியவையாக இருக்கின்றன” என்று கூறி இறுதியில் ``தமிழக வரலாற்றைப் பொருத்தவரை கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்” என்று தீர்ப்பை முடித்தார்.

மேலும், போலீஸாரால் பொய் வழக்கு போடப்பட்ட முருகேசனின் சித்தப்பா உள்ளிட்ட மூன்று பேருக்கு தலா 2 லட்சம் ரூபாயை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு