Published:Updated:

நின்று வென்ற நீதி!

கண்ணகி - முருகேசன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணகி - முருகேசன்

முருகேசனின் மாமாவையும் சித்தப்பாவையும் மரத்தில் கட்டிவைத்து அவர்கள் பார்க்கத்தான் முருகேசனுக்கும் கண்ணகிக்கும் விஷம் ஊற்றினார்கள்.

நின்று வென்ற நீதி!

முருகேசனின் மாமாவையும் சித்தப்பாவையும் மரத்தில் கட்டிவைத்து அவர்கள் பார்க்கத்தான் முருகேசனுக்கும் கண்ணகிக்கும் விஷம் ஊற்றினார்கள்.

Published:Updated:
கண்ணகி - முருகேசன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணகி - முருகேசன்

நீண்ட தாமதத்துக்குப் பிறகு நீதி வென்றிருக்கிறது. 2003, ஜூலை 8-ம் தேதி விருத்தாசலம் அருகே கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்ட முருகேசன்-கண்ணகி வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு மரண தண்டனையும் வழங்கியிருக்கிறது கடலூர் சிறப்பு நீதிமன்றம். ஆவணக் கொலைக்கெனத் தனிச்சட்டம் தேவையென்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் சூழலில், இப்படியொரு தீர்ப்பு வந்திருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

விருத்தாசலம் அருகேயுள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த பொறியாளர் முருகேசனும் புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த கண்ணகியும் காதலித்து ரகசியமாகப் பதிவுத்திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் வசித்தார்கள். பிறகு, கண்ணகியை அழைத்துச்சென்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்தார் முருகேசன். கண்ணகி காணாமல்போனதையறிந்த அவரது உறவினர்கள் முருகேசனைப் பிடித்து சித்திரவதை செய்ய, அவர் கண்ணகி இருக்குமிடத்தைத் தெரிவித்தார். அங்கு சென்று கண்ணகியைத் தங்கள் கிராமத்துக்கு அழைத்து வந்தார்கள்.

ரத்தினம்
ரத்தினம்

அனைவரையும் மயானத்துக்குக் கூட்டிச் சென்றவர்கள், முருகேசனின் சித்தப்பாவைக் கட்டிவைத்துவிட்டு கண்ணகிக்கும் முருகேசனுக்கும் வாய், காது, மூக்கில் விஷம் ஊற்றிக் கொலை செய்து சடலங்களைத் தனித்தனியாக எரித்தார்கள். முருகேசனின் உறவினர்கள் இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

ஊடகங்களில் செய்தி வெளியானபிறகு அவசர அவசரமாக, முருகேசன் தரப்பில் நான்கு பேர், கண்ணகி தரப்பில் நான்கு பேரைக் கைது செய்தது காவல்துறை. ‘நடந்தது ஆணவக்கொலை, இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்து விசாரிக்க வேண்டும்’ என்று பல்வேறு இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன. 2004-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ-யிடம் மாற்றியது. சம்பவத்தை மறைக்க முயன்ற விருத்தாசலம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், கண்ணகியின்‌ அப்பா துரைசாமி, சகோதரர் மருதுபாண்டி, முருகேசனின் மாமா குணசேகரன், சித்தப்பா அய்யாச்சாமி உள்ளிட்ட 15 பேரைக் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ. நீண்ட இழுத்தடிப்புகள், இழுபறிகளுக்குப் பிறகு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முருகேசனின் மாமாவும் சித்தப்பாவும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் ஒரு ஆயுள் தண்டனைக் கால அளவுக்குச் சிறையையும் சித்திரவதையையும் அனுபவித்திருக்கிறார்கள். தண்டனைக்குள்ளான காவல் ஆய்வாளர் செல்லமுத்து, துணைக் காவல் கண்காணிப் பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நின்று இந்த வழக்கைப் பல்வேறு தலையீடுகளைத் தாண்டி, போராடி முன்னகர்த்திச் சென்ற வழக்கறிஞர் ரத்தினத்திடம் பேசினேன்.

“இந்த வழக்கை திசைமாற்ற தொடக்கத்திலிருந்தே முயற்சிகள் நடந்தன. முருகேசனின் மாமாவையும் சித்தப்பாவையும் மரத்தில் கட்டிவைத்து அவர்கள் பார்க்கத்தான் முருகேசனுக்கும் கண்ணகிக்கும் விஷம் ஊற்றினார்கள். ஆனால், அவர்களையும் வழக்கில் குற்றவாளிகளாக்கிவிட்டார்கள். அவர்களுக்காகப் பலமுறை நீதிமன்றத்துக்குச் சென்றோம். சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்கும் போது, சாட்சிகள் சொல்வதை அப்படியே ஆங்கிலத்தில் எழுதிக் கொள்வார்கள். அதை அப்படியே பெரிய ஆவணப்பண்டலாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள். ‘இது சரியல்ல, படித்துப் புரிந்துகொள்ள முடியாது’ என்று சுட்டிக்காட்டினோம். நீதிபதி சி.பி.ஐ அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்தார். ‘ஆவணங்களைத் தமிழில் வழங்க வேண்டும்’ என்று வழக்கு போட்டோம். இந்தப் போராட்டத்திலேயே இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.

கைது செய்யப்பட்ட 23 நாள்களில் ஏ-1 ஆக இருக்கும் கண்ணகியின் அப்பாவுக்கு மாவட்ட நீதிபதி பெயில் தந்துவிட்டார். ‘குற்றம் சாட்டப்பட்டவர் ஊராட்சி மன்றத் தலைவர். 30 நாள்கள் தொடர்ந்து செயல்படாவிட்டால் அவர் பதவி போய்விடும் என்று வழக்கறிஞர் சொல்கிறார். அதில் நியாயம் உள்ளது’ என்று ஆர்டரிலேயே எழுதி பெயில் கொடுத்தார். இதையும் உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்று ரத்து செய்யவைத்தோம்.

இந்தத் தீர்ப்பில் நான் முக்கியமாகக் கருதுவது, வழக்கைச் சரியாகக் கையாளாத இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஆயுள் தண்டனைக்குள்ளாகியிருப்பதைத்தான். இதுவரை எங்கும் நடக்காதது இது.

நின்று வென்ற நீதி!

நூற்றுக்கணக்கான மக்கள் பார்க்க நடந்த கொடூரச் சம்பவத்துக்கு நீதியைப் பெற இத்தனை காலம் போராட வேண்டியிருக்கிறது. இரண்டு நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டு இத்தனை ஆண்டுக்காலம் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். என்ன நஷ்டஈடு தந்தாலும், அவர்கள் இழந்த காலத்துக்கு அது ஈடாகாது.

கல்வி, பொருளாதாரம் எல்லாம் வளர்ந்தபிறகும் சாதிய மனநிலை மாறவில்லை. ஆணவக் கொலைகள் அந்த உணர்விலிருந்துதான் தொடங்குகின்றன. இதுமாதிரியான தீர்ப்புகள் சாதிவெறியர்களுக்கு அச்சத்தை உருவாக்கலாம். சமூகத்தில் மாற்றம் வந்தால்தான் நிரந்தரமாக ஆணவக் கொலைகளைக் களையமுடியும்” என்கிறார் ரத்தினம்.

“ஆணவக் கொலைகளைத் தடுக்கச் சிறப்புச் சட்டம் வேண்டும் என்ற தேவையைத்தான் கண்ணகி-முருகேசன் வழக்கு ஏற்படுத்துகிறது. அப்படியொரு சட்டம் இருந்திருந்தால் இவ்வளவு காலவிரயத்தைத் தடுத்திருக்கலாம். 2016 முதல் 2020 வரை ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 4 ஆணவக்கொலைகள் மட்டுமே நடந்திருப்பதாகச் சொல்கிறது குற்ற ஆவணக் காப்பகம். ஆனால் நாங்கள் நேரடியாகக் களத்துக்குச் சென்று ஆய்வுசெய்து 35 ஆணவக் கொலைகளைக் கண்டறிந்து வழக்காக எடுத்துச் சென்றிருக்கிறோம்” என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ‘எவிடென்ஸ்’ கதிர்.

“2014-ல் விமலாதேவி படுகொலை வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ‘சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் பாதுகாப்புக்கென ஒரு மையத்தை உருவாக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. 2019-ல் சென்னை உயர் நீதிமன்றம் சுயமாக ஒரு வழக்கையெடுத்து விசாரித்தபோது, ‘எல்லா மாவட்டங்களிலும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட வர்கள் பாதுகாப்பு மையத்தை அமைத்துள்ளோம்’ என்று தமிழக அரசு தெரிவித்தது. நாங்கள் ஆர்.டி.ஐ-யில் இந்த மையத்தில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன என்று கேட்டபோது, 4 மாவட்டங்களில் மட்டுமே வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. மற்ற மாவட்டங்களில் ஒரு வழக்குகூடப் பதிவாகவில்லை.

கடந்த 20 ஆண்டுகளில், கௌசல்யா, கல்பனா, அமிர்தவள்ளி வழக்குகள் உட்பட ஐந்து ஆணவக் கொலைகளில் மட்டும்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பிற வழக்குகள் என்னவாகின என்பது பற்றி முழுமையாக ஒரு தணிக்கை செய்யவேண்டியது அவசியம்.

நின்று வென்ற நீதி!

2012-ல் தேசிய சட்ட ஆணையம் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் ஒரு வரைவைக் கொண்டுவந்தது. ஆனால் அது இன்னும் சட்டமாகவில்லை. 2014-ல் உச்ச நீதிமன்றம் ஆணவக்கொலைகள் குறித்து எல்லா மாநிலங்களிடமும் அறிக்கை கேட்டது. 22 மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் ஆணவக்கொலை நடப்பதை ஒப்புக்கொண்டன. தமிழகம் இன்றுவரை அமைதி காக்கிறது. 2018-ல் ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் 20 வழிமுறைகளைத் தெளிவாக வழங்கியிருக்கிறது. ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உட்பட ஒவ்வொருவரின் கடமைகள் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை இனிமேலாகினும் தீவிரமாகக் கடைப்பிடிக்கவேண்டும். தமிழகத்தில் தாமதமின்றி ஆணவக்கொலையைத் தடுக்கச் சட்டம் கொண்டு வரவேண்டும்” என்கிறார் ‘எவிடென்ஸ்’ கதிர்.

சாதி ஆதிக்கம் பல நூற்றாண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கிறது. ஆனாலும் தமிழ்நாடு அதில் உடைப்பை ஏற்படுத்தும் பல முற்போக்கான முன்னகர்வுகளைச் செய்திருக் கிறது, கண்ணகி-முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் நின்று வென்ற நீதியும் அதற்கு வலுச்சேர்க்கும். ஆனாலும், ஆணவக்கொலைகள் ஒழிவதும் சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கான சூழல் அமைவதுமே சமூகநீதிக் கொண்டாட் டங்களுக்குப் பெருமை சேர்க்கும்.