Published:Updated:

நிலம் நீதி அயோத்தி - 1 - எப்படி இருக்கிறது அயோத்தி? - ஒரு நேரடி ரிப்போர்ட்

அயோத்தி
பிரீமியம் ஸ்டோரி
News
அயோத்தி

அயோத்திக்கு இன்னும் 65 கிலோமீட்டர் என்றது போர்டு. அடுத்து ஒரு செக்போஸ்ட்.

பல தசாப்தங்களாக முடிவு எட்டப்படாத வழக்கின் தீர்ப்பு ப்ரேக்கிங் நியூஸாக ஓடிக்கொண்டிருந்தது. ‘‘அயோத்தி நிலவரம் குறித்து ஸ்பாட் ரிப்போர்ட் வேண்டும். உடனே கிளம்புங்கள். அங்கிருந்தே சில அத்தியாயங்கள் வரை தரவும்” ஆசிரியர் குழு முடிவெடுத்த நிமிடத்திலிருந்து அயோத்தியின் நிலவரம் குறித்து விசாரிக்க ஆரம்பித்தேன். “50 கிலோ மீட்டருக்கு நெட்வொர்க் இல்லை. 144 தடை உத்தரவு போட்டிருக்கு. மீடியாவுக்கு ரொம்ப கெடுபிடி. 30 கிலோமீட்டர் தள்ளி வந்துதான் ரிப்போர்ட் பண்ணணும். பயங்கர செக்கிங்” என்றெல்லாம் சொல்லப்பட்டது. எதுவாக இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டுசெல்வோம் என்று புகைப்படக் கலைஞர் அசோக்குமாருடன் சனிக்கிழமை மாலை லக்னோ வந்தடைந்தேன்.

நிலம் நீதி அயோத்தி - 1 - எப்படி இருக்கிறது அயோத்தி? - ஒரு நேரடி ரிப்போர்ட்

லக்னோவில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது அயோத்தி. டாக்ஸி புக் செய்தபோது டிரைவர் முதலில் கேட்ட கேள்வி, “எதுக்கு அயோத்தி போறீங்க?” “கோயிலுக்கு” என்றோம். “அயோத்தி வரைக்கும் விடுவாங்களான்னு தெரியாது. எதுவரைக்கும் முடியுமோ அதுவரைக்கும் போகலாம்” என்றார். அந்த டிரைவர் அபிஷேக் சுக்லா, லக்னோவாசி. அவரது பேச்சில் ராம பக்தி மணக்கிறது. “ரொம்ப நாளா ராமஜென்ம பூமியைப் பார்க்க ஆசை. ஏற்கெனவே புக் பண்ணிருந்தோம். இப்படி தீர்ப்பு நாளா அது அமையும்னு எதிர்பார்க்கல” என்றோம். “சந்தோஷப்படுங்க. முன்னாடி நீங்க வந்திருந்தாகூட அது ராமஜென்ம பூமின்னு முடிவாகாத நிலையில் வந்திருப்பீங்க. இப்ப கோர்ட்டே, ‘இது ராமஜென்ம பூமி’னு சொன்ன பிறகு வந்திருக்கீங்க!” என்று நமது வருகைக்கு புதுகோணம் கொடுத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அயோத்திக்கு இன்னும் 65 கிலோமீட்டர் என்றது போர்டு. அடுத்து ஒரு செக்போஸ்ட். கேள்வி கேட்ட போலீஸாரிடம் “கோயிலுக்கு வந்திருக்காங்க” என்று டிரைவரே பதில் சொல்லிக்கொண்டிருந்தார். டாக்ஸி ஃபைஸாபாத்தை அடைந்தபோது மீண்டும் இரண்டு இடங்களில் செக்கிங். ஆனால், எங்கும் காரைத் திறந்து சோதனையிடவில்லை. அதேபோல பலரும் கூறியதுபோல மீடியாவுக்கு கெடுபிடி எல்லாம் இல்லை. ஐ.டி கார்டு காட்டினால் புன்னகைத்து அனுப்புகிறார்கள்.

நிலம் நீதி அயோத்தி - 1 - எப்படி இருக்கிறது அயோத்தி? - ஒரு நேரடி ரிப்போர்ட்

அயோத்திக்கு 12 கிலோமீட்டர் முன் விசாரித்தபோது, அதற்கு மேல் எந்த ஹோட்டலிலும் இடம் இருக்காது; மீடியா ஆட்கள் புக் செய்துவிட்டார்கள் என்றார்கள். ஒருவழியாக அயோத்திக்கு எட்டு கிலோமீட்டர் முன் ஒரு ஹோட்டலில் அறை கிடைத்தது. இரவில் ஃபைஸாபாத் எப்படி இருக்கிறது என்று ஒரு ரவுண்ட் போனோம். பத்தடிக்கு இரண்டு போலீஸார் இருந்தார்கள். சந்தேகம் தோன்றினால் விசாரிக்கிறார்கள். மிரட்டலோ பயமுறுத்தலோ இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபைஸாபாத்தும் அயோத்தியும் கிட்டத்தட்ட சமஅளவில் மக்கள்தொகை கொண்ட நகரங்கள். இரண்டிலும் தலா ஆறு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஃபைஸாபாத்தில் பெரும்பாலும் முஸ்லிம்களும், அயோத்தியில் பெரும்பாலும் இந்துக்களும் இருப்பதாகப் பேச்சு. ஆனால், ‘‘அப்படி எல்லாம் இல்லை சார். ரெண்டு ஊர்லயும் ரெண்டு தரப்பு மக்களும் கலந்துதான் இருக்கோம். எங்களுக்குள்ள எந்தப் பிரிவினையும் இல்ல” என்கிறார் 53 வயதாகும் குஷல் குமார். ஃபைஸாபாத்தில் பேக்கரி வைத்திருக்கும் இவர், பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கேதான்.

பஜனையில் ராம பக்தர்கள்
பஜனையில் ராம பக்தர்கள்

“இந்தத் தீர்ப்பு இரு தரப்புலேயும் புகைஞ்சுகிட்டிருக்கும் வெறுப்பு அக்னியை அணைக்கும். அதனாலேயே இதை வரவேற்கிறேன். 400 வருட பிரச்னையை, 70 வருடம் ஆண்ட கட்சியான காங்கிரஸ் தீர்க்கலை. ஆனா, ஆறு வருடம் ஆண்ட மோடி தீர்த்துட்டார். ஸ்ரீராமன் நான் வணங்கும் தெய்வம். மசூதிக்குக் கீழ் இருக்கும் கட்டுமானங்கள் இஸ்லாமிய முறைப்படி கட்டப்படலை என்பதை நீதிமன்றமே சொல்லியிருக்குது. எங்கள் நிலத்தை ஆக்கிரமிச்சவங்களுக்கு ரெண்டு மடங்கு நிலத்தை அந்தக் கடவுள் கொடுத்திருக்கார்” என்று மோடி புகழ் பாடுகிறார் குஷல்.

“பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992-ம் ஆண்டு உங்கள் வயது 25 இருக்கலாம். அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள், அன்று உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?” என்றேன் அவரிடம்.

வாகன சோதனையில் போலீஸார்
வாகன சோதனையில் போலீஸார்

“1992, டிசம்பர் 6-ம் தேதி மட்டுமே உங்க மனசுல பதிஞ்சிருக்குது. அதுக்கு ரெண்டு வருடத்துக்கு முன்ன நடந்தது பெரிசா பேசப்படல. அல்லது மறந்துபோச்சு. 1990 அக்டோபர் 30, நவம்பர் 2... இந்த ரெண்டு நாள்கள்ல நடந்தவை எங்கள் மனசுல ரணமா படிஞ்சிருக்கு’’ என்றார். அவரது முகம் இருளடைந்தது.

1990, அக்டோபர் இறுதி வாரத்தில் ‘அத்வானி தலைமையில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ரதயாத்திரை மேற்கொள்ளப்படும்’ என்று கரசேவகர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அப்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ், ‘பொதுமக்களுக்கு இடையூறாக ஒரு பறவைகூட அயோத்தியாவில் பறக்காது’ என்றார். 25,000-க்கும் அதிகமான காவலர்கள் அயோத்தியில் குவிக்கப்பட்டனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் சீல் வைக்கப்பட்டன. அக்டோபர் 21-ம் தேதி அத்வானியும் அசோக் சிங்காலும் அயோத்தியை அடைந்தனர். அக்டோபர் 30-ம் தேதி 40,000 கரசேவகர்கள் அயோத்தியை நோக்கி பயணித்தனர். ஒருகட்டத்துக்கு மேல் நடந்து மட்டுமே அயோத்தியை அடைய முடியும் என்ற நிலையில், நடந்தே சென்றார்கள். சிலர் சரயு நதியை நீந்திக் கடந்து, அயோத்தியை அடைந்தார்கள். இவர்களில் ஆயிரம் பேர் மட்டுமே அயோத்திக்குள் புக முடிந்தது. பாக்கி பெருங்கூட்டத்தை ஆங்காங்கே தடுத்து நிறுத்தியது போலீஸ் படை. ஆனாலும், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து சுமார் ஐந்தாயிரம் பேர் ராமஜென்ம பூமியில் திரண்டார்கள்.

குஷல் குமார்
குஷல் குமார்

கரசேவகர் ஒருவர் போலீஸ் பஸ்ஸைக் கைப்பற்றி, தாறுமாறாக ஓட்டிச் சென்றார். அங்கிருந்த பேரிகார்டுகளை எல்லாம் உடைத்துக் கொண்டு சீறிப்பாய்ந்தது பஸ். கரசேவகர்கள் குறுக்கும்நெடுக்குமாகப் பாய, அந்த இடம் கிட்டத்தட்ட போர்க்களமானது. பாபர் மசூதிமீது ஏறி காவிக்கொடியைக் கட்டினார்கள். “சார்ஜ்...” என்று மைக்கில் ஒலித்தது போலீஸ் அதிகாரியின் குரல். மடைதிறந்த வெள்ளமாகப் பாய்ந்தார்கள் காவலர்கள். லத்திகள் தாக்கத்தொடங்கின. தடியடியில் அசோக் சிங்கால் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. நிலைமை கட்டுக்கடங்காமல் மேலும் தீவிரமடையவே, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அடுத்தடுத்த நாள்களிலும் கலவரம் தொடர்ந்தது. நவம்பர் 2-ம் தேதி மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர்.

“16 பேர் கொல்லப்பட்டதாக ரிப்போர்ட். ஆனா, சரயு நதியில கொத்துக்கொத்தா உடல்களைக் கொட்டினாங்க” என்று சொல்லும் குஷல் குமாரின் கண்களில் பீதியைப் பார்க்க முடிந்தது. அவரிடம், “நீங்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தீங்களா?’’ என்று கேட்டேன். ஏனோ அவர் என் கண்களை எதிர்கொள்வதைத் தவிர்த்து விட்டார். “என் வயது 53. இத்தனை வருடத்துல மூணு முறைதான் அயோத்தி போயிருப்பேன். ராமர் இதோ இங்கிருக்கார்” - இதயத்தைத் தொட்டுக்காட்டினார் குஷல்.

மறுநாள் நவம்பர் 10. ஞாயிற்றுக்கிழமை. அதிகாலையிலேயே அயோத்தியை நோக்கிப் பயணித்தோம். ரிக்‌ஷா, ஷேர் ஆட்டோக்கள் என்று பக்தர்களை ஏற்றிக்கொள்ள நிறைய வாகனங்கள். ராமஜென்ம பூமிக்கு ஆறேழு கிலோ மீட்டர்கள் முன்பாக ஜல்பா காலனியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. மீடியா மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் செல்லலாம். உள்ளே கடை, வீடு இருப்பவர்களுக்கும் அனுமதி உண்டு. அனைவரிடமும் அடையாள அட்டையைக் கேட்டு, சோதனை செய்தபிறகே அனுமதிக்கிறார்கள்.

நிலம் நீதி அயோத்தி - 1 - எப்படி இருக்கிறது அயோத்தி? - ஒரு நேரடி ரிப்போர்ட்

அந்த இடத்துக்கு மேல் நாங்கள் நடந்தே சென்றோம். சுமார் மூன்று கிலோமீட்டரில் ராமஜென்ம பூமி என்ற போர்டு தெரிந்தது. சற்றுத் தள்ளி அங்கிருக்கும் மசூதி ஒன்றில் நடக்கும் விழாவுக்கான அறிவிப்பு ஃப்ளெக்ஸ் மின்னியது. அதை போட்டோ எடுத்தார் அசோக்குமார். வலியவந்த காவல் அதிகாரி ஒருவர், ‘‘பார்த்தீங் களா... எல்லாம் நார்மலாதான் இருக்கு” என்றார்.

முன்னேறி சென்றோம். வழியெங்கும் காவலர்கள், மத்திய ரிசர்வ் படை. ‘டேக் டைவர்ஷன்’ என்பதுபோல ஏராளமான பேரிகார்டுகள் நம்மை வழிநடத்தின. மூன்று கிலோமீட்டர் தாண்டியதும் அனுமன் மந்திர் வந்தது. இங்கிருந்து போலீஸ் கெடுபிடி மேலும் அதிகரித்தது. சிறிது தூரம் சென்றவுடன், “இதற்கு மேல் பக்தர்களைத் தவிர யாருக்கும் அனுமதி இல்லை” என்று சொல்லி நிறுத்தினார்கள். ஒருவழியாகப் பேசி, அனுமதி பெற்று விரைந்தோம். இருபுறமும் கடைகள் இருந்தாலும் பெரிய கூட்டமில்லை. “இன்னைக்கெல்லாம் எவ்வளவு கூட்டம் இருக்கும் தெரியுமா?” என்று புலம்பினார் கடைக்காரர் ஒருவர். ராமஜென்ம பூமியை அடைய இன்னும் ஒரு கிலோமீட்டர் மட்டுமே பாக்கி!

மீண்டும் போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். ‘‘எந்த பிரஸ், பர்மிஷன் வாங்கியிருக்கீங்களா?” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே, நம் புகைப்படக்கலைஞரிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டது. அதன் கேலரியைத் திறந்தார்கள். முந்தைய செக்போஸ்ட்டில் போலீஸ் சோதனை செய்துகொண்டிருந்ததை அதில் பதிவு செய்திருந்தோம். “பாருங்க... போலீஸ் செக் பண்றதைலாம் வீடியோ எடுத்திருக்காங்க” என்று உயரதிகாரியிடம் முறையிட்டார் காவலர். நான் அவர்களிடம், “உங்களுக்கு இது எப்படி டியூட்டியோ, அப்படி எங்களுக்கும் இது டியூட்டிதான்” என்றேன். பொத்தாம் பொதுவாக, “உள்ளே மீடியாவுக்கு அனுமதி இல்லை” என்றார்கள்.

மசூதி விழாவுக்கான அறிவிப்பு ஃப்ளெக்ஸ்
மசூதி விழாவுக்கான அறிவிப்பு ஃப்ளெக்ஸ்

என் செல்போன், பர்ஸிலிருந்த பத்திரிகையாளர் அடையாள அட்டை, இதர அடையாள அட்டைகள், ரெக்கார்டர், ஹெட்செட், பாக்கெட்டிலிருந்த பென்டிரைவ் எல்லாவற்றையும் புகைப்படக் கலைஞரிடம் கொடுத்தேன். பர்ஸில் சிறிது பணம் மட்டுமே இருந்தது. ‘‘ஒரு பக்தனாக உள்ளே அனுமதிப்பீர்கள்தானே?’’ என்றேன்.

‘‘நீங்க மீடியா என்று சொல்லிவிட்டீர்கள். அப்புறம் எப்படி விடுவது?’’ என்றார்.

“ஏன், மீடியாவில் இருக்கிறவங்களுக்கு பக்தி இருக்கக்கூடாதா?’’ என்று கேட்டேன். இப்போது உயரதிகாரி பேசினார். ‘‘நீங்கள் உள்ளே செல்லலாம். பக்தர்களுக்கு அனுமதி மறுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை’’ என்றார் அந்த அதிகாரி.

700 மீட்டர் தூரத்தில் இருக்கும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான ராமஜென்ம பூமியைப் பார்க்க, உள்ளே காலடி எடுத்துவைத்தேன்!

(களம் தொடரும்)