Published:Updated:

நிலம் நீதி அயோத்தி - 7 - பாபர் மசூதியில் ராமர் சிலை... “தீயதே அதன் விளைவு!”

அயோத்தி
பிரீமியம் ஸ்டோரி
News
அயோத்தி

அன்றே கணித்துச் சொன்ன தீர்க்கதரிசி நேரு

ராம்குமார், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர். இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி - பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகம்) மீத்திறன் கணினிப் பொறியாளராகப் பணிபுரிகிறார்.

“ ‘சனிக்கிழமை தீர்ப்பு’னு டிவியில அறிவிப்பு வெளியான உடனேயே மதுபானக் கடைகள்லாம் மூடிட்டாங்க. 100 மீட்டர் தூரத்துக்கு ஒரு போலீஸ் இருந்தாங்க. தீர்ப்பு வெளியானதும் இந்துக்கள்லாம் ரொம்ப ஹேப்பியாகிட்டாங்கனுதான் சொல்லணும். ஒருமாதிரி வெறித்தனமான மனநிலையில இருந்தாங்க. ‘இதுக்காகத்தான் ரொம்ப வருஷமா காத்துட்டிருந்தோம்’னு சொன்னாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தீர்ப்பு வெளியாகி ஊர் நார்மலானதும் மதியமே இந்துக்கள் அவங்களோட கடைகளைத் திறக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா இஸ்லாமியர்கள், கடைகளை அன்னைக்கு பூரா திறக்கவேயில்லை. மதுபானக் கடைகளைத் திறக்க ரெண்டு நாளைக்கு போலீஸ் அனுமதிக்கல. காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்துல இருக்கிற ஞான்வாபி மசூதிக்கு என்கூட வேலைசெய்ற மும்பை நண்பர் ஒருத்தர் ரம்ஜான் சமயத்துல போயிட்டு உற்சாகமில்லாம வந்தார். ‘போனோமா தொழுகைய முடிச்சோமா... வந்தோமானுதான் இருக்காங்க. நார்மலா இந்த ரம்ஜான் சமயமெல்லாம் அவ்ளோ உற்சாகமும் கொண்டாட்டமுமா இருக்கும். இங்க ஏனோ அது மிஸ்ஸிங்’னு அந்த நண்பர் சொன்னார். வாரணாசியில இருக்கிற இஸ்லாமியர்கள் இந்த வாழ்க்கைக்குப் பழகிட்டாங்க” என்றார் ராம்குமார். நான் அவரிடமிருந்து விடைபெற்று சென்னைக்குப் புறப்பட்டேன்.

ஜவஹர்லால் நேரு, அபிராம தாஸ், கே.கே.கே.நாயர், சகுந்தலா நாயர்
ஜவஹர்லால் நேரு, அபிராம தாஸ், கே.கே.கே.நாயர், சகுந்தலா நாயர்

யோத்தியிலோ வாரணாசியிலோ ஏன்... ஒட்டுமொத்த இந்தியாவிலோ அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம். அதேசமயம் தீர்ப்பின்மீது இருவேறு கருத்துகள் பலருக்கும் இருந்தன. இந்துக்கள் பலருமே இந்தத் தீர்ப்பின்மீது அதிருப்தி கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் எதையும் வெளிப்படுத்தத் தயங்கினர் என்பது களத்தில் கண்ட உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அயோத்திப் பிரச்னை என்பது, அயோத்திக்கு மட்டுமான பிரச்னை அல்ல. அது ஒரு பெரிய திட்டத்தின் சிறு ஆரம்பம் மட்டுமே. வரலாற்று ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் அயோத்தியின் வரலாறு குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். 1528-1529 காலகட்டத்தில்தான் மசூதி கட்டப்பட்டது. அதில் உள்ள பாரசிக மொழிக் குறிப்புகளில் `கோயிலை இடித்துவிட்டுக் கட்டியதாக’க் குறிப்பு இல்லை. (Epigraphia Indica. Arabic and Persian Supplement 1965 P 58-62) அப்படி கோயிலை இடித்துக் கட்டியதென்றால், அதை பெருமையாகக் குறிப்பிட்டிருப்பார்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் வாதம்.

கடந்த 1949 டிசம்பர் 22, 23 தேதிகளில் அபிராம தாஸ் எனும் துறவி, பாபர் மசூதிக்குள் ராமர் சிலையை வைக்கிறார். அதிகாலை 5 மணிக்கெல்லாம் அங்கே ஃபைஸாபாத் மாவட்ட நீதிபதி கே.கே.கே.நாயர் ஆஜராகிறார். மசூதியை உடனே ஜப்தி செய்ய உத்தரவிடுகிறார். அந்த இடத்தைச் சுற்றி சாதுக்கள் அமர்ந்து மத உணர்வையூட்டும் பக்திப் பாடல்களைப் பாடு வதற்கு ஏற்பாடு செய்கிறார். அதில் பெரும்பங்கு வகித்தவர் நாயரின் மனைவி சகுந்தலா நாயர்.

நிலம் நீதி அயோத்தி - 7 - பாபர் மசூதியில் ராமர் சிலை... “தீயதே அதன் விளைவு!”

உத்தரப்பிரதேச மாநிலப் பிரதமர் (அப்போது பிரதமர் என்றுதான் அழைப்பார்கள்), கோவிந்த் வல்லப பந்த். அவருக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதத்தில், ராமர் சிலை நிறுவிய விஷயத்தை அதிர்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

`அயோத்தியில் நிகழ்த்தப்பட்டவை குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அங்கு நிகழ்த்தப் பட்டவை, அழிவைக்கொண்டுவரும் முன் எடுத்துக் காட்டு. தீயதே அதன் விளைவாக இருக்கும்’ என்று தந்தி அனுப்புகிறார். ராமர் சிலையை அகற்ற, மாவட்ட நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுக்கிறார். ஆனால், கே.கே.கே. நாயர் அந்த உத்தரவுகள் செயலாக்கம் பெறச் செய்யாமல் காலம் தாழ்த்து கிறார். அதன் பிறகு நிலைமை கைமீறிப்போகிறது.

நிலம் நீதி அயோத்தி - 7 - பாபர் மசூதியில் ராமர் சிலை... “தீயதே அதன் விளைவு!”

1950-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்து மகாசபையின் வேட்பாளராக கோண்டா தொகுதியில் நின்று வெற்றிபெறுகிறார் சகுந்தலா நாயர். டிசம்பர் 1949-ம் ஆண்டுச் சம்பவம் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கே பணியில் அமர்த்தப்பட்டு பிறகு மூன்றே மாதங்களில் அரசுப்பணியிலிருந்து விலக்கப்பட்ட கே.கே.கே.நாயர், 1967-ம் ஆண்டில் பாரதிய ஜனசங்கத்தின் சார்பாக உத்தரப்பிரதேசத்தின் பாஹ்ரெய்ச் தொகுதியிலிருந்து நாடாளு மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்ன ஒரு திட்டமிடல்!

அப்போதைய பிரதமரான நேருவின் அமைச்சரவையில் ‘இந்து ராஷ்டிரம் அமைய வேண்டும்’ என்பதில் சில காங்கிரஸ் அமைச்சர்களும் தீவிரமாக இருந்தனர். இவற்றையெல்லாம் தாண்டித்தான் இந்த விவகாரத்தின் வீரியம் பரவாமல் இருக்க வேண்டும் என நேரு பிரயத்தனப் பட்டார். 5.2.1950-ல் மீண்டும் கோவிந்த் வல்லப பந்த்க்கு நேரு எழுதிய கடிதத்தில், `அயோத்தியில் நிகழ்த்தப்பட்ட செயலுக்கும் அதன் எதிர்விளைவு அகில இந்தியாவிலும் (குறிப்பாக காஷ்மீரில்) எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கும் நான் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவை யாயின் நான் அயோத்திக்கும் செல்வேன் என நீங்கள் இங்கு வந்தபோது உணர்த்தினேன். நீங்களும் அவ்வாறு உணர்வீர்களானால், நான் என் அலுவல் களில் ஓயாது ஈடுபட்டிருக்கும் நிலையிலும் அயோத்தி செல்வதற்காக ஒரு நாளை ஒதுக்கிவைப்பதற்கு முயல்வேன்’ என எழுதுகிறார்.

அயோத்தி
அயோத்தி

அதற்கு கோவிந்த் வல்லப பந்த், `மாவட்ட நீதிபதி நாயர் தவறான மனிதர். அவர் மாற்றப்படுவார். ஆனால், அதற்கு முன் சில எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும்’ என்று பதில் எழுதுகிறார்.

ஆனாலும், அயோத்தியின் நிலையை கட்டுக்குள் கொண்டுவர முடியவேயில்லை. பிற்பாடு ஜவஹர்லால் நேரு 17.4.1950-ல் எழுதிய கடிதத்தில் `கடந்த காலங்களில் காங்கிரஸின் தூண்களாக இருந்தவர்களின் மனங்களிலும் மதவாத வெறுப்புணர்வு புகுந்துவிட்டதைக் காண்கிறேன். அயோத்தியில் நடத்தி முடிக்கப்பட்டது மிக மிக இழிவானது. தனிப்பட்ட அல்லது அரசியல் சார்ந்த காரணங்களுக்காக இந்த நோயை எதிர்த்துப் போராடாமல் விட்டதால் அது இந்தியா முழுவதும் பரவி இப்போது நமது சொந்த மாநிலத்திலும் நிலைகொண்டுவிட்டது’ என்கிறார்.

மேலும், பல இடங்களிலும், பாபர் மசூதி கைப்பற்றப்பட்ட விஷயத்தில் அப்போதைய உத்தரப்பிரதேச அரசு பலவீனமாக இருந்தது எனவும், இது பல தீயச்செயல்களுக்கு வித்திடும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ஜவஹர்லால் நேரு.

ந்துக்களுக்கு தனிநாடு என்பது இந்து- முஸ்லிம் பிரச்னையைத் தீர்க்காது என்பதில் தீர்மானமாக இருந்தவர் காந்தி. அபுல் கலாம் ஆசாத் போன்ற இஸ்லாமியர்கள்கூட அதை வழிமொழிந்தனர். ஆனால், ‘இந்து ராஷ்டிரம்’ அமைக்க வேண்டும் என்பதில் ஒரு கூட்டம் உறுதியாக இருந்தது. நாதுராம் கோட்சேவால் காந்தி சுட்டுக்கொல்லப் பட்டதற்கு ‘இந்து ராஷ்டிரம் அமைக்க காந்தி தடையாக இருந்தார்’ என்பதுதான் காரணமாகச் சொல்லப்பட்டது.

நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே 1998-ல் ஒரு பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், `` `இந்து-முஸ்லிம்களுக்கு தனித்தனி நாடு கூடாது. என் சடலத்தின்மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்’ என்றார் காந்தி. ஆனால், பாகிஸ்தான் பிரிந்த பிறகும் காந்தி மரண மடையவில்லை. எனவேதான் கொன்றோம்” என்றிருக்கிறார். அந்தப் பேட்டியில் கோபால் கோட்சே சொல்லி யிருக்கும் ஒரு விஷயம் முக்கியமானது. “இஸ்லாமியர்கள் தனிப்பட்ட முறையில் இந்துக்களுடன் நட்பாகத்தான் இருப்பார் கள். ஆனால், ஒரு கூட்டமாகப் பார்த்தால் அதில் நன்மையில்லை” என்றிருக்கிறார்.

இப்போது இந்துக்களையும் சிலர் அரசியல் ஆதாயங்களுக்காகக் கூட்டமாகச் சேர்ப்பதைப் பார்த்தால், அது எதில் போய் முடியும் என்கிற அச்சம் எழுகிறது. தவிர, அதே பேட்டியில் கோபால் கோட்சே சொன்ன இன்னொரு விஷயம் இன்றைக்கு நினைவுகூர வேண்டியதாக இருக்கிறது.

“சிவசேனா, பா.ஜ.க எது உங்கள் தேர்வு?” என்று கேட்டதற்கு, “நிச்சயம் சிவசேனாதான். பா.ஜ.க முழுக்க முழுக்க தன்னை இந்துக் கட்சியாக அறிவித்துக்கொள்ள தயக்கம் காட்டுகிறது. ஆனால், சிவசேனா அப்படியல்ல. மகாராஷ் டிரத்தைப் பொறுத்தவரை சிவசேனாவுக்குத்தான் மதிப்பு அதிகம்” என்றிருக்கிறார்.

இதையெல்லாம் குறிப்பிட காரணம், ராமர் கோயிலை முன்வைத்து நடக்கும் அரசியலை பலரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அரசியல்வயத்தில் நாம் நம் ஒற்றுமையைக் கலைத்துவிடக் கூடாது. எந்தக் காலத்திலும் எந்தத் தருணத்திலும் இந்தப் பிரிவினைகள் நம்மை பாதிக்கக் கூடாது என்ற ஆதங்கத்தில்தான் காந்தி இறுதியாக அந்த வார்த்தைகளை உதிர்த்தார்.

“ஹே ராம்!”

(நிறைவடைந்தது)