Published:Updated:

மது குடிப்பதற்கும், வாங்குவதற்கும் எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன வயது வரம்பு?

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு மதுச் சட்டங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. சில மாநிலங்களில் மது வாங்குவதற்கு ஒரு வயது வரம்பும், மது குடிப்பதற்கு ஒரு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Liquor
Liquor

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், மது விற்பனை மற்றும் உட்கொள்ளுதல் தொடர்பான சட்டம் இயற்றும் உரிமையை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. அதன்படி இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் மது தொடர்பாக வெவ்வேறு சட்டங்களைப் பின்பற்றுகின்றன.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில், டெல்லி கலால் சட்டம் பிரிவு 23 இப்படிச் சொல்கிறது... `25 வயதுக்குக் குறைவான ஒரு நபருக்கு, உரிமம் பெற்ற விற்பனையாளரோ, அவரது ஊழியரோ, அவரது முகவர்களோ, அந்த நபரின் சொந்த பயன்பாட்டுக்காக இருப்பினும் அல்லது மற்றவருக்காக இருப்பினும் மதுவை விற்பனை செய்யக் கூடாது.'

Delhi High Court
Delhi High Court

இந்தக் குறிப்பிட்ட சட்டப்பிரிவு பற்றிக் குறிப்பிட்டு, டெல்லி இளைஞர்களுக்கு இந்தச் சட்டம் நியாயமற்ற பாகுபாடு காட்டுவதாகவும், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இன்னும் குறைவான வயதிலேயே மது குடிக்க அனுமதி இருப்பதாகவும், குஷ் கல்ரா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ``மனுதாரர் இந்தச் சட்டப்பிரிவைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார். இந்தச் சட்டப்பிரிவு மது விற்பனையாளருக்குத்தான் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. குடிப்பதற்கான சட்டபூர்வமான வயது என இந்தப் பிரிவு எந்த வரம்பையும் குறிப்பிடவில்லை" என விளக்கினர்.

`ஒருவேளை குடிப்பதற்கு வயது வரம்பு இருப்பினும், அது அரசின் கொள்கை முடிவு. அதில் நாங்கள் தலையிட முடியாது’ எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தச் சட்டப்பிரிவு டெல்லி இளைஞர்களுக்குப் பாகுபாடு காட்டுவதாகக் குறிப்பிட்டதை பற்றிப் பேசிய நீதிபதிகள், ``மற்ற மாநிலங்களைப் போலவே செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் டெல்லி அரசுக்குக் கிடையாது. மாநில அரசு உகந்த காரணங்களை முன்வைத்தே 25 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனையைத் தடை செய்திருக்கிறது, இதில் யாரும் தலையிட முடியாது" என்று கூறி இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Liquor
Liquor

இந்த வழக்கு விவரங்கள் ஒருபுறமிருக்க, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு மதுச் சட்டங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்தியாவில் சில மாநிலங்களில் மது வாங்குவதற்கு ஒரு வயது வரம்பும், மது குடிப்பதற்கு ஒரு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்ததுக்கு, மகாராஷ்ட்ராவில், ஒருவர் மதுவை வாங்குவதற்கு 18 வயதைத் தாண்டியிருக்க வேண்டும். ஆனால், மதுவைக் குடிப்பதற்கு 25 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். இதற்கு இரு வேறு சட்டப் பிரிவுகள் பயன்பாட்டில் உள்ளன. அதேபோல கர்நாடகாவில் மது வாங்கக் குறைந்தபட்ச வயது வரம்பு 18. ஆனால் குடிப்பதற்கு 21.

இந்நிலையில், குழப்பத்தை ஏற்படுத்தும் இந்தச் சட்டங்களால், அதை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிக்கல் இருக்கின்றது. இங்கெல்லாம் ஒரு 18 வயது நபர் மதுவோடு கைப்பற்றப்பட்டால்கூட தவறு கிடையாது, அதை அவர் குடித்திருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

சில மாநிலங்கள் இப்படி இருக்க, டெல்லியைப்போல பல மாநிலங்கள் மது வாங்குவதற்கான சட்டங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், மது குடிப்பதற்கான வயது வரம்பு குறித்து வெளிப்படையான சட்டங்கள் இங்கு இல்லை. எனவே, பொதுவாக வாங்குவதற்கான வயது வரம்பையே குடிப்பதற்கான வயது வரம்பாக அந்த மாநிலங்கள் பின்பற்றுகின்றன. டெல்லியிலும் அவ்வாறே பின்பற்றப்பட்டு வந்தன.

Liquor
Liquor

சரி எந்தெந்த மாநிலங்களில் குடிப்பதற்கான வயது வரம்பு எவ்வளவு என்கிறீர்களா ? இதோ...

மது குடிப்பதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக உள்ள மாநிலங்கள் :

அந்தமான் நிக்கோபார் தீவுகள், இமாசலப்பிரதேசம், மிசோரம், பாண்டிச்சேரி, ராஜஸ்தான், சிக்கிம்.

மது குடிப்பதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆக உள்ள மாநிலங்கள் :

ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், சத்தீஸ்கர், தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி, டாமன் அண்ட் டையூ, கோவா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியபிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், மேற்கு வங்காளம்.

மது குடிப்பதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 23 ஆக உள்ள மாநிலங்கள் :

கேரளா

மது குடிப்பதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 25 ஆக உள்ள மாநிலங்கள் :

சண்டிகர், டெல்லி, ஹரியானா, மேகாலயா, பஞ்சாப், மகாராஷ்ட்ரா (பீர் குடிப்பதற்கு 21 வயது, சில மாவட்டங்களில் 30)

மது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருக்கும் மாநிலங்கள் :

பீகார், குஜராத், மணிப்பூர், நாகலாந்து, லட்சத் தீவு.

தடை செய்யப்பட்ட மாநிலங்களிலும், மது தாராளமாக, மிக குறைந்த விலையில் கிடைக்கத்தான் செய்கிறது என்பதே நடைமுறை நிஜம். காரணம் மது விற்கும் அண்டை மாநிலங்களில் இருந்து இம்மாநிலங்களுக்கு மது கடத்தப்படுகிறது. மதுவை வேண்டும் என்பவர்களுக்கும், வேண்டாம் என்பவர்களுக்குமான போராட்டம் இந்தியாவில் தீராக்கதை. இந்த விஷயத்தில் ‘ஒன் நேஷன்’ அமுலுக்கு வந்து மதுவுக்குத் தடைகொண்டு வந்தால் ஒருவேளை விடிவு காலம் பிறக்கலாம்!

Vikatan