Published:Updated:

நிலம் நீதி அயோத்தி! - 2 - துப்பாக்கி முனையில் ராம தரிசனம்!

அயோத்தி
பிரீமியம் ஸ்டோரி
News
அயோத்தி

இங்கே ராமர் கோயில் கட்டலாம்னு தீர்ப்பு வந்துடுச்சு. ஆனா, எதுக்கு இப்படி அடிச்சிக்கிறாங்கன்னு தெரியலை.

‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் விண்ணைப் பிளந்தது. பக்தர்கள் இடைவிடாமல் ராம கோஷத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர். “இங்கிருந்து அரை கிலோமீட்டர்தான். பாதுகாப்பு காரணங்களுக்காக பாதையை வளைச்சு வளைச்சு திருப்பிவிட்டிருப் பாங்க. ஒன்றரை கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும்” என்றார் என்னுடன் நடந்துகொண்டிருந்த கமலேஷ் திரிபாதி.

நிலம் நீதி அயோத்தி! - 2 - துப்பாக்கி முனையில் ராம தரிசனம்!

இவருக்கு வயது அறுபது ப்ளஸ் இருக்கலாம். கொல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறார். “வருஷாவருஷம் வந்துடுவேன் தம்பி. இது பத்தாவது வருஷம். இந்த வருஷம் நான் வர்றதுக்கு முக்கியமான காரணம் இருக்கு” என்றார். `தீர்ப்பாக இருக்கும்’ என நினைத்தேன். ஆனால், அவர் சொன்ன பதிலில் நெகிழ்ந்துவிட்டேன். மேலும், நான் அப்படி நினைத்தது கொஞ்சம் குற்ற உணர்வாகவும் இருந்தது.

‘‘என் மனைவி இல்லாமல் வர்ற முதல் டிரிப் இது. ரெண்டு பேருக்கும் சேர்த்து ஆறு மாசத்துக்கு முன்னாடியே டிரிப் புக் பண்ணிட்டேன். மூணு மாசத்துக்கு முன்னாடி திடீர்னு உடம்புக்கு சுகமில்லாம அவ இறந்துட்டா. கிளம்புற ஐடியாவே இல்லை. கடைசி நேரத்துல இங்க வர்றதுதான் அவளுக்கு நான் செலுத்தும் உண்மையான அஞ்சலியா இருக்கும்னு கிளம்பிட்டேன். இதோ இப்பவும் அவ என்கூடத்தான் நடந்து வந்துட்டு இருப்பா” என்றவர், வெற்றிடத்தை நோக்கி வாஞ்சையாக முணுமுணுத்தார். ஒருவேளை மரணித்த அவரின் மனைவியிடம் பேசியிருக்கக் கூடும். அவர் கண்களைப் பார்த்தேன். அவை லேசாகக் கசிந்திருந்தன. சிறிது நேரம் அவருடனே நடந்தேன். வேறு ஏதேனும் பேசினால், அவர் மனம் காயமடைந்துவிடுமோ என அமைதியாக வந்தேன். அவரே தொடர்ந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“இங்கே ராமர் கோயில் கட்டலாம்னு தீர்ப்பு வந்துடுச்சு. ஆனா, எதுக்கு இப்படி அடிச்சிக்கிறாங்கன்னு தெரியலை. அவங்கவங் களுக்கு அவங்கவங்க நம்பிக்கை முக்கியம். பத்து வருஷமா இங்க வர்ற அனுபவத்துல சொல்றேன். எனக்குத் தெரிஞ்சு இங்கே இந்து - முஸ்லிம்னு எந்தப் பகைமையும் இல்லை. பாய் கடையில டீ வாங்கிட்டு, பக்கத்துல இருக்கிற இந்து கடையில பலகாரம் வாங்கிக்குவோம். அவங்களுக்குள்ளும் நிறைய கொடுக்கல்-வாங்கல் இருந்தது. மொத்தத்துல எல்லோரும் சகோதரர்களாத்தான் பழகுறாங்க. இந்த அரசாங்கம், கோர்ட், மதம், சண்டை, நிலம், இதுக்கான தீர்ப்பு, நீதி இதெல்லாம் ஒண்ணுமே இல்லை தம்பி. ஆனா, ‘இதெல்லாம் ஒண்ணுமே இல்லை’ங்கிறதைப் புரிஞ்சிக்கிற புள்ளி எல்லோருக்கும் ஒண்ணா அமையாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சமயத்துல அது புரியும்” என்றார்.

நிலம் நீதி அயோத்தி! - 2 - துப்பாக்கி முனையில் ராம தரிசனம்!

பாதையின் இருபுறங்களிலும் கடைகள் இருந்தன. சிற்றுண்டி கடைகளில் லட்டும் கச்சோரியும் சமோசாவும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. `ஏதாவது சாப்பிடுறீங்களா?’ என்று அந்தப் பெரியவரிடம் கேட்க நினைத்தேன். அவர் எனக்கு முன்னே பல அடி தூரம் தாண்டி வேகமாக நடந்துகொண்டிருந்தார். கடைக் காரர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசினர். ‘பகுத் குஷிஹே’ என்பது பலரிடமிருந்து வந்த வார்த்தைகள்.

வழக்கமாக கார்த்திகை மாதத்தில் குவியும் கூட்டத்தில் பத்து சதவிகிதம்கூட இப்போது இல்லை என்பது வியாபாரிகளின் வருத்தம். ஆனால், அசோக் தாஸ் என்கிற வியாபாரியின் கூற்றோ வேறுமாதிரி இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பல வருஷங்க எங்களுக்கு பெரும்சோதனையா அமைஞ்சிருக்கு. பாபர் மசூதியை இடிச்சப்ப, நாங்க இங்க இல்லை. ஆனா, அப்ப இருந்த எங்க நண்பர்களோட அப்பாக்கள் பட்ட கஷ்டத்தை நினைச்சா, இப்ப ஒண்ணுமே இல்லை. வியாபாரம் படுத்துடுச்சிதான். ஆனா, இந்தப் பிரச்னை யெல்லாம் முடிஞ்சு, ராமன் எங்களுக்கு இரட்டிப்பா திருப்பித் தருவார். அவருக்காக இந்த இழப்பைக்கூட தாங்கிக்க மாட்டோமா!” என்றார்.

உற்சாகத்தில் பக்தர்கள்
உற்சாகத்தில் பக்தர்கள்

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் ஒரு சோதனை மையம். இங்கே தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்தனர். யதேச்சையாக பேன்ட் பாக்கெட்டைத் தடவினேன். போன் சார்ஜிங் கேபிள் இருந்தது. மறதியாகக் கொண்டுவந்திருந் தேன். அதை எடுத்துக் கொடுத்தபோது, அங்கு இருந்த பிளாஸ்டிக் கூடையைக் காட்டி, “இதில் போட்டுவிடுகிறீர்களா அல்லது அங்கு இருக்கும் கடைகளில் கொடுத்துவிட்டு வருகிறீர்களா?” என்று கேட்டார் காவலர். அவர் காட்டிய திசையில் இருந்த கடைகளில் ‘லாக்கர்’ என எழுதி ஒரு பெட்டியைத் தொங்கவிட்டிருந்தனர். ஒரு கடையில் கேபிளைக் கொடுத்து டோக்கன் வாங்கிக்கொண்டேன்.

உள்ளே வளைந்து வளைந்து சென்றது வழி. இப்போது பஞ்சாப்பின் ஜலந்தரிலிருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினர் என் அருகே நடந்து வந்துகொண்டிருந்தனர். அவர்களில் மூத்தவரான பாட்டி ஒருவர் ‘ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சாடனம் செய்துகொண்டே வந்தார். எனக்கு முன்னும் பின்னும் மொத்தமாக நூறு பேர்தான் இருப்பார்கள். “கூட்டம் ரொம்பவும் கம்மி. தீர்ப்புங்கிறதால ஏதாவது அசம்பாவிதம் நடக்குமோனு பயந்து வராம இருக்காங்க. இல்லைன்னா இந்நேரம் இங்கெல்லாம் நிக்க முடியாது” என்றார் பக்கத்தில் ஒருவர். மீண்டும் ஒரு சோதனை மையம் வந்தது.

இங்கே ஷூ அணிந்து வந்தவர்களை ஷூ, சாக்ஸ் எல்லாவற்றையும் கழற்றி, கையில் எடுத்துச் சோதித்தார்கள். மீண்டும் கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார்கள். கோயிலுக்குள் செல்ல ஷூ, செருப்பு எதுவும் தடையில்லைபோலிருக் கிறது. அதன் பிறகும் இதேபோல் இரண்டு இடங்களில் சோதனை செய்தார்கள். திடீரென பாதையில் ஒரு திருப்பம். மற்றோர் உள்பகுதியை நெருங்கிவிட்டதுபோல் தெரிந்தது.

ராமர் கோயிலின் மாதிரி வடிவம், ராமர் விக்கிரகம்
ராமர் கோயிலின் மாதிரி வடிவம், ராமர் விக்கிரகம்

இங்கு உத்தரப்பிரதேச மாநில காவல் துறையினரைக் காண முடியவில்லை. கோயில் வளாகமா... ராணுவ முகாமா என்ற சந்தேகம் எழுந்தது. எங்கும் மத்திய ரிசர்வ் படையினர் நிறைந்திருந்தார்கள். பச்சை நிறச் சீருடையில் தலையில் கறுப்புத் துணியைக் கட்டியிருந்தார்கள். பக்தர்கள் எண்ணிக்கையைவிட அவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது. இவர்கள் தவிர, ஐம்பது அடி இடைவெளியில் மணல் மூட்டைகளுக்கு நடுவே கமாண்டோக்கள் நவீன ரக துப்பாக்கியைப் பிடித்து குறிபார்த்துக் கொண்டிருந்தார்கள். எதையாவது வித்தியாசமாகச் செய்தால், பட்டெனச் சுட்டுவிடுவார்கள்போலிருக்கிறது. துப்பாக்கி முனையில் ராமர் தரிசனம். எத்தனையோ கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். இதுவரை கிடைத்திராத அனுபவம் இது. சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கோபுரங்களில் இரண்டிரண்டு போலீஸார் உன்னிப்பாகக் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். இவர்கள் போதாதென, எங்கு திரும்பினாலும் கண்காணிப்பு கேமராக்கள் தென்பட்டன. வெளியே இருந்த காவலர்களாவது சகஜமாகப் பேசினார்கள். இங்கு இருப்பவர்களோ இறுக்கமான பாவனை காட்டினார்கள்.

எனக்கு முன்பாக பஞ்சாப் குடும்பத்தினர் நடந்துகொண்டிருந்தார்கள். பாட்டியின் `ஜெய் ஸ்ரீராம்’ உச்சாடனம் இப்போது இன்னும் உரக்கக் கேட்டது. இதோ கண்ணெதிரே சற்றே தொலைவில் அந்த இடம் இருக்கிறது. உலகமே உற்று நோக்கும் அந்த 2.77 ஏக்கருக்கு நடுவே ஷாமியானா போடப்பட்டிருக்கிறது. வலதுபுறத்தில் ஐம்பது அடி தூரத்தில் ஸ்ரீராமனின் ஜென்மபூமி என்று நம்பப்படும் இடம். அங்கு அப்படி என்ன இருக்கிறது எனப் பார்க்கும் ஆவலில் கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. பல உயிர்ப்பலிகளுக்கும் மனக்கசப்புகளுக்கும் பெரும் அரசியல் மாற்றங்களுக்கும் காரணமாக இருந்தது இந்த இடம்தானா என்பதை நம்ப முடியவில்லை.

காலணிகளுடன் அனைவரும் கைகளைக் குவித்து வலதுபுறத்தையே பார்த்தபடி நகர்ந்துகொண்டிருந்தனர். ஏற்கெனவே நினைத்ததுபோல் உள்ளே காலணிகளுக்குத் தடையில்லை. கண்ணாடி உண்டியல் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் கரன்சியால் அதை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். அதற்கடுத்து சற்று தொலைவில் பூக்களாலும் பட்டுத் துணிகளாலும் சாத்தப்பட்ட சிறிய ராமர் சிலை ஒன்று இருக்கிறது. அதற்கு மேல் கிருஷ்ணனின் புகைப்படம். மேலும், ஐந்தாறு சக்திச் சக்கரங்கள் ஃப்ரேம் போடப்பட்டு மாட்டப்பட்டிருந்தன. காவலர் “ஜல்தி... ஜல்தி” என்று விரட்டிக் கொண்டிருந்தார். ராமர் சிலை இருக்கும் இடத்தில் சாதுக்களோ அல்லது பூசாரிகளோ இல்லை. காவி உடையில் ஒருவரும், வெள்ளை உடையில் ஒருவரும் பக்தர்களுக்கு வெள்ளை நிறத்தில் குட்டிக் குட்டி இனிப்பு உருண்டைகளை பிரசாதமாகத் தருகிறார்கள்.

பஞ்சாப் பாட்டி, இப்போது உணர்ச்சிப் பிரவாகத்தில் இருந்தார். சன்னதம் வந்ததுபோல் அவரிடமிருந்து `ஜெய் ஸ்ரீராம்’ ஆவேசமாக வந்து கொண்டிருந்தது. உடல் ஆடிக்கொண்டிருந்தது. சத்தமாக அந்தப் பாட்டி, “மூணு மாசத்துல திரும்ப வருவேன் ராமா!” என்று கத்தினார். “மூணு மாசத்துல கோயில் கட்ட முடியாது. கோயிலைக் கட்ட ஒரு கமிட்டி அமைக்கப் போறாங்க” என்று பக்கத்தில் இருப்பவரிடம் சொன்னேன். தொடர்ந்து அந்தப் பாட்டி, “சந்நிதி இல்லாம இருந்த ராமா... இப்போ சீக்கிரமே உனக்கு சந்நிதி வரப்போகுது. கோயில் வேலை முடியட்டும், அப்ப வந்து உன்னைப் பார்ப்பேன்!” என்றவரின் குரல் ஒலி, அந்த வளாகம் முழுவதும் எதிரொலித்தது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் சலனமே இல்லாமல் பாட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். பாட்டி சட்டெனக் குனிந்தார். மண்ணைத் தொட்டு நெற்றி முழுவதும் பூசிக்கொண்டு நகர்ந்தார். `ஜெய் ஸ்ரீராம்’ இன்னும் சத்தமாக ஒலித்தது. கோயில் வளாகத்திலிருந்து வெளியே வந்தோம்.

அயோத்தியிலிருந்து ஃபைஸாபாத் செல்லும் வழியில் இருக்கிறது இக்பால் அன்சாரியின் வீடு. சிறிய வீடு அது. வீட்டின் எதிர்ப்பக்கம் பந்தல் அமைக்கப்பட்டு, இரண்டு காவலர்கள் அமர்ந்திருந்தனர். நமது புகைப்படக் கலைஞர் அசோக்குமார், வீட்டின் முகப்பைப் புகைப்படம் எடுக்க கேமராவை உயர்த்தினார். காவலரின் குரல் எங்களைத் தடுத்தது. “காரில் சார் இருக்கார். அவர்கிட்ட சொல்லி, நோட்டில் ரிஜிஸ்டர் பண்ணுங்க” என்றார். அருகில் நின்றிருந்த காரில் காவல் அதிகாரி அமர்ந்திருந்தார். நம்மைப் பற்றி விசாரித்த வரிடம் விவரம் சொன்னதும், ரிஜிஸ்டரை நீட்டினார். அதில் எங்கள் இருவரின் பெயர், முகவரி, அலைபேசி எண்களை எழுதி வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல அனுமதித்தார்.

இக்பால் அன்சாரி
இக்பால் அன்சாரி

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் புன்னகைத்து வரவேற்றார் இக்பால். “தமிழ்நாடா... அந்தப் பக்கம்தான் மக்கள் நல்ல தெளிவுடன் இருக்காங்க” என்றார். இக்பால் அன்சாரியின் தந்தை முகம்மது ஹாசிம் அன்சாரி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முஸ்லிம்கள் தரப்பின் முக்கிய மனுதாரர்களில் ஒருவர். அவர் இப்போது உயிருடன் இல்லை. மசூதி இடிக்கப்பட்டபோது, தங்களது குடும்பமே பல மாதங்கள் சோகமாக முடங்கி விட்டது எனக் குறிப்பிட்டார் இக்பால்.

“அந்த நாள்களை நினைக்க விரும்பவில்லை. அது நினைவுக்கு வந்தா, ஒருகணம் நெஞ்சை அறுத்துப்போட்டதுபோல இருக்கும். ஆனா, எதையும் நாங்க மனசுல வெச்சுக்கலை. உண்மையில, இந்த அயோத்தி பூமியில ஒருபோதும் இந்து - முஸ்லிம் சண்டை வந்ததில்லை. அண்ணன் தம்பியாத்தான் பழகுறோம். வியாபாரம் தொடங்கி பல விஷயங்கள்ல ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். பாபர் மசூதி இடிப்புக்கு அப்புறமும் இங்கே இதுதான் நிலைமை. இங்க ஒண்ணுமே இல்லை. ஆனா, இதை வெச்சு நாடு முழுவதும் அரசியல் செய்றாங்க” என்ற இக்பாலிடம் தீர்ப்புகுறித்துக் கேட்டேன். சில நொடிகளுக்கு அவர் ஒன்றும் பேசவில்லை. முகத்தில் வெறுமை தெரிந்தது.

“அதான் ராமர் கோயில் கட்டப்போறாங்களே. தாராளமா கட்டட்டும். நல்லபடியா எல்லாரும் வந்து போகிற இடமா அயோத்தி மாறட்டும். அவங்க அரசாங்கம். கோர்ட்டு தீர்ப்பு. அதை ஏத்துக்கிட்டுதானே ஆகணும். ஏன்னா... என்ன தீர்ப்புன்னாலும் ஏத்துக்குறோம்னு சொல்லிருக் கோமே” என்றவர் குரலில் விரக்தி தெறித்தது.

ஐந்து ஏக்கர் நிலம் பற்றிக் கேட்டபோது “எங்கே கொடுக்கப்போறாங்கன்னு தெரியலை. எதுவா இருந்தாலும் சரி” என்றார் எங்கோ பார்த்தபடி. இதைப் பற்றி இதற்குமேல் அவர் பேச விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டு விடைபெற்றோம்.

(களம் தொடரும்)