Published:Updated:

நிலம் நீதி அயோத்தி - 3 - மசூதியில் பாங்கு... கோயிலில் பஜனை... இரண்டும் கலந்தே ஒலிக்கும்!

ராமர் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமர் கோயில்

தீர்ப்புக்கு இரு வாரங்களுக்கு முன்பே முக்கியமான அதிகாரிகளும் உளவுத்துறை ஆட்களும் அயோத்தியில் கூடியிருக்கிறார்கள்.

தீர்ப்பு வந்த அன்றும் தீர்ப்புக்கு மறுநாளும் மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு ஊர்வலம் நடத்தினர். இரண்டாவது நாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை இக்பால் அன்சாரியைப் பார்த்துவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது, அந்த ஊர்வலம் முடிந்து தங்கள் இடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்தனர் போலீஸார்.

அயோத்தி தீர்ப்பு
அயோத்தி தீர்ப்பு

சுமார் 60 பேர் இருப்பார்கள். அவர்களுடைய நடையிலும் பேச்சிலும் அவ்வளவு உற்சாகம். இங்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதால் எழுந்த உற்சாகமாக இருக்கலாம் எனத் தோன்றியது. ஒரு காவலரிடம் பேச்சுக்கொடுத்தேன். நீண்ட தயக்கத்துக்குப் பிறகு சில விஷயங்களைச் சொன்னார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``தீர்ப்புக்கு இரு வாரங்களுக்கு முன்பே முக்கியமான அதிகாரிகளும் உளவுத்துறை ஆட்களும் அயோத்தியில் கூடியிருக்கிறார்கள். இந்து சாதுக்கள், இஸ்லாமிய முக்கியஸ்தர்கள் என இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். தீர்ப்பைப் பற்றி எதுவும் தெரியாது என்றாலும், தீர்ப்பு எப்படி வந்தாலும் அமைதிகாக்க வலியுறுத்தியிருக்கிறார்கள். தீர்ப்புக்கு முந்தைய ஓரிரு நாள்களில் கொஞ்சம் கடுமையாகவே எச்சரித்திருக்கிறார்கள். ‘இந்துக்கள் தரப்போ... முஸ்லிம்கள் தரப்போ சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். அமைதிக்கு பங்கம் விளைவித்தால், நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும்’ என்று அறிவித்திருக்கிறார்கள்.

அயோத்தி தீர்ப்பு
அயோத்தி தீர்ப்பு

அரசியல்வாதிகளைத் தாண்டி பெரிய அதிகாரிகள், அனைத்து மாநிலங்களில் இருக்கும் முக்கிய தலைவர்களிடம் பர்சனலாகவும் பேசியிருக் கிறார்கள். ‘இந்தியாவுக்கு கரும்புள்ளியா இருக்கும் இந்த விஷயத்தை இத்தோடு முடிச்சுக்கலாம். எத்தனை வருஷத்துக்குத்தான் இதையே பேசிக்கிட்டு இருப்பீங்க?’ என சமாதானம் பேசியிருப்பதாக தகவல். இப்போது இவ்வளவு பெரிய தீர்ப்புக்குப் பிறகும் அயோத்தி அமைதியாக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம், அதிகாரிகளின் பங்களிப்புதான்” என்றார் அந்தக் காவலர். “இன்னும் கூடுதல் தகவல் வேண்டுமென்றால் அயோத்தி போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லுங்கள்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும் முன், ராமர் கோயில் அமையவிருக்கும் வளாகத்தை மீண்டும் வலம்வந்தோம். வெளிவட்டப் பாதையில் நடந்தோம். சுமார் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு நெருங்கவே முடியாத அளவுக்கு, சந்துகளில்கூட காவலர்கள் அமர்ந்திருந்தார்கள். எங்குமே கேமராவைத் தூக்கவிடவில்லை. 2.77 ஏக்கர் நிலத்தைச் சுற்றிலும் மஞ்சளும் கறுப்பும் கலந்த வண்ணத்தில் இருபது அடி உயரத்துக்கு கம்பிவேலி போடப்பட்டிருந்தது.

நிலம் நீதி அயோத்தி - 3 - மசூதியில் பாங்கு... கோயிலில் பஜனை... இரண்டும் கலந்தே ஒலிக்கும்!

அந்த இடத்தைச் சுற்றும்போது ஒரு மசூதி சிதிலமடைந்திருப்பது தெரிந்தது. அதை புகைப்படம் எடுக்க அசோக்குமார் முயன்றபோது, பத்தடி தள்ளி நின்று இருந்த காவலர் குரலிலேயே தடுத்தார். அவரது குரலில் அவ்வளவு கடுமை. கொஞ்சம் தூரத்தில் வேறொரு மசூதியும் இருந்தது. அங்கு இருந்து பார்த்தால் ராமர் கோயில் அமையவிருக்கும் இடத்தையும் பார்க்கலாம். இரண்டும் கண்பார்வை எட்டும் தூரத்திலேயே அமைந்திருந்தன. அந்த மசூதியில் ஐந்து வேளை தொழுகை நடப்பதாகச் சொன்னார்கள். ``மசூதியில் பாங்கு ஒலிக்கும்போது அருகில் இருக்கும் கோயில்களில் பஜனை செய்யும் சத்தமும் ஒலிக்கும். இரண்டும் கலந்து கேட்கும்’’ என்றார் ஒருவர்.

ராமர் கோயில் அமையவிருக்கும் இடத்தைச் சுற்றிலும் சுமார் 200 கோயில்கள் இருக்கக்கூடும். கனக்பவன், தசரத மகாராஜா பவன் என்று கொஞ்சம் பெரிய கோயில்கள் முன்பு காவலர்கள் அமர்ந்திருந்தனர். சுற்றிச் சுற்றி வந்தும் புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு பெரிய கட்டடம் மேல் ஏறி அந்த இடத்தைப் படமெடுக்கும் எங்கள் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. மாடியின் உச்சியிலும் காவலர்கள் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். நமது முயற்சியைப் புரிந்துகொண்ட காவலர் ஒருவர், “இந்தச் சமயத்துல எதுவும் முயற்சி செய்யாதீங்க. நிலைமை சகஜமான பிறகு வந்து எடுங்க. இப்ப ஏதாவது பண்ணினா, கேமராவைப் பிடுங்கி போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்திடுவாங்க” என்றார்.

ஃபைஸாபாத் பெயர் மறைக்கப்பட்ட போர்டு
ஃபைஸாபாத் பெயர் மறைக்கப்பட்ட போர்டு

சற்று தூரத்தில் காவலரிடம் ஓர் இளைஞர் வாதிட்டுக்கொண்டிருந் தார். அருகில் சென்றதும் நம் கழுத்தில் கிடந்த மீடியா ஐ.டி கார்டை பார்த்துவிட்ட அந்த இளைஞர், “ஆதார் கார்டு தொலைஞ்சுப்போச்சு. இது, கார்டு தொலைஞ்சதுக்காக நான் கொடுத்திருக்கிற புகார் காப்பி. இது, தொலைஞ்சுபோன ஆதார் கார்டின் ஜெராக்ஸ் காப்பி. ரெண்டைக் காட்டினாலும் உள்ளேவிட மறுக்கு றாங்க. என் சொந்த ஊர் இது. உள்ளே கடை இருக்கு” என்றார் ஆற்றாமை யுடன்.

நான் காவலரிடம், “அவர்தான் புகார் ரசீதும் வைத்திருக்கிறாரே.. அப்புறம் என்ன?” என்று கேட்டேன். காவலர் சற்றே தயக்கத்துடன், “முசல்மான் சார்” என்றார். அவரிடம் வாதாடக்கூடிய சூழல் அங்கில்லை.

அந்த இளைஞரின் முகத்தில் அப்பட்டமாக விரக்தி தெரிந்தது. அவரிடம் பேசினேன். “ஒண்ணும் பிரச்னை இல்லை சார். வேற வழியா போனா சுத்து. போய்க்கிறேன். என்ன பண்றது... இங்க எங்க நிலைமை இதுதான். இத்தனைக்கும் நான் பொறந்த ஊர் இது. இந்த மாதிரியான நடவடிக்கைகளால இந்த ராமர் கோயில் அமையவிருக்கும் இடத்தைச் சுற்றி இருந்த சுமார் 400 முஸ்லிம் குடும்பங்கள் வேற பக்கம் போயிட்டாங்க. மூணு நாலு தலைமுறையா சிலர் மட்டுமே இருக்கோம்” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து சென்றார். அவரது நடையிலும் உடல்மொழியிலும் தெறித்தது கோபம்!

அந்த இளைஞர் சொன்னதை கிட்டத்தட்ட ஆமோதித்தார் சாந்தி. இவருக்கு சொந்த ஊர், குன்னக்குடி. ஆனால், மூன்று தலைமுறைகளுக்கு முன்பே அயோத்தியில் செட்டிலாகிவிட்டார். பாபு பஜாரில் நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் இருக்கிறது. அங்குதான் சாந்தி இருக்கிறார். “சொந்த ஊர்ல நிலபுலன் இருக்கு. பிரிச்சுக்கலாம் வந்துடுனு கூப்பிடுறாங்க. ராமர் கால் தடம்பட்ட இந்த இடத்தை விட்டுப் போக மனசு இல்லை” என்றார் சாந்தி.

 நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம்
நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம்

அந்தச் சத்திரத்தில் தென்னிந்திய உணவு கிடைத்ததே பெரும் ஆறுதலாக இருந்தது. “அந்த முஸ்லிம் பையன் சொன்னது சரிதான். வெளியே நிலைமை சகஜமா தோன்றினாலும், 1992 சம்பவத்துக்கு அப்புறம் நீறுபூத்த மாதிரி உள்ளுக்குள் புகைஞ்சுக்கிட்டுத்தான் இருக்கு. இந்து - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையா, சகஜமா பழகினாலும் அரசுத் தரப்பும் போலீஸும் கொஞ்சம் பதற்றமாத்தான் இருக்கு. அதுவும் அந்த டிசம்பர் 6-ம் தேதியும் அதுக்கு முன்னயும் பின்னயும் சில நாள்கள் பார்க்கணுமே... கடும் கெடுபிடி காட்டுவாங்க” என்றார்.

தீர்ப்பைப் பற்றி சாந்தியின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது. “தீர்ப்புக்கு முந்தி சகஜமா பழகிய அக்கம்பக்கத்து முஸ்லிம்கள் எல்லோரும்கூட இப்ப முகம் காட்டிப் பேசறதில்ல. அவங்களோட வருத்தமும் கோபமும் அதுல தெரியுது!” என்றார் கவலையுடன்!

‘‘என் சொந்த ஊர் இது. உள்ளே கடை இருக்கு” என்றார் ஆற்றாமையுடன். நான் காவலரிடம், “அவர்தான் புகார் ரசீதும் வைத்திருக்கிறாரே.. அப்புறம் என்ன?” என்று கேட்டேன். காவலர் சற்றே தயக்கத்துடன், “முசல்மான் சார்” என்றார்.

ராணி பஜார் காலனியில் இருக்கிறது அயோத்தி போலீஸ் ஸ்டேஷன். முகப்பில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நின்றிருந்தனர். பெரிய அதிகாரிகள் யாரும் ஸ்டேஷனில் இல்லை. பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள்தான் இருந்தனர். அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

“இதுவரைக்கும் எந்த அசம்பாவிதமும் நடக்கலை. ஊர் நார்மலாத்தான் இருக்கு” என்றவர்கள், “எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அயோத்தி காவல்நிலைய காவலர்கள்
அயோத்தி காவல்நிலைய காவலர்கள்

“ஃபைஸாபாத்” என்றேன். பலமாகச் சிரித்தார் ஒரு காவலர். குழப்பத்துடன் பார்க்கவே... “அதன் பெயர் ஃபைஸாபாத் இல்லை. அயோத்தி. முன்புதான் அது ஃபைஸாபாத் மாவட்டம். ஒரு வருடத்துக்கு முன்பே எங்கள் முதல்வர் யோகி ஆதித்யாநாத் அதை அயோத்தி மாவட்டமாக அறிவித்துவிட்டார். அங்க போய்ப் பாருங்க. பொது இடங்கள்ல ஃபைஸாபாத் என்ற வார்த்தையையே அழிச்சிருப்பாங்க. இனிமே அயோத்தி மட்டும்தான்” என்றார்.

“தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு அயோத்தியிலேயே ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்களே. அதை நெடும்தொலைவில் கொடுக்கும் நோக்கத்தில்தான் இந்த மாற்றத்தை உங்கள் முதல்வர் முன்கூட்டியே செய்தாரா?”

“அதெல்லாம் தெரியாது. இப்போது அயோத்திதான் மாவட்டம். அயோத்தி மாவட்ட காவல் எல்லையில் 18 காவல் நிலையங்கள் இருக்கின்றன. இங்கே மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.”

“ஆனால், போலீஸ் கெடுபிடிகளால் அயோத்தி ராமஜென்ம பூமியைச் சுற்றிலும் உள்ள 400 முஸ்லிம் குடும்பங்கள் வெளியேறிவிட்டதாகச் சொல்கிறார்களே?”

“வேலை நிமித்தமாகப் போயிருப்பார்கள். பல தரப்பினரும்தான் வெளியேறியிருக் கிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமே வெளியேறுவதாக பொத்தாம் பொதுவாகச் சொல்ல முடியாது. சிலர் தேவையில்லாத வதந்திகளைப் பரப்புகிறார்கள். நீங்களே பார்க்கிறீர்களே! இங்கே எவ்வளவு அமைதியாக இருக்கிறது என்று. இந்தியா முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்குப் பிறகு, நாடு இவ்வளவு அமைதியா இருக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்!”

“ஆனால், உங்களது கெடுபிடிகளால் முஸ்லிம்கள் மனவருத்தத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிந்தது. எத்தனை நாளைக்குத்தான் துப்பாக்கி முனையில் அமைதியைத் தக்கவைக்க முடியும்?” என்றேன். இதுவரை பேசாதிருந்த ஒரு காவலர் பேசினார்.

“என் பேர் சமீரா. நான் முஸ்லிம். இதோ இவங்க பூஜா யாதவ். இந்து மதத்தைச் சேர்ந்தவங்க. நாங்க ரெண்டு பேரும் போலீஸ் என்பதைத் தாண்டி நல்ல நண்பர்கள். எனக்கு இங்கே எந்தப் பாகுபாடும் தெரியவில்லை” என்றார்.

நிலம் நீதி அயோத்தி - 3 - மசூதியில் பாங்கு... கோயிலில் பஜனை... இரண்டும் கலந்தே ஒலிக்கும்!

அவர்களிடம், “ராமர் கோயில் கட்டப்பட்டால் ஏராளமான மக்கள் இங்கே குவிவார்கள். அயோத்தியின் உள்கட்டமைப்பு, சாலை வசதிகள், தங்கும் இடங்கள் இவையெல்லாம் தாங்குமா, அவ்வளவு கூட்டத்தையும் எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?” என்றேன்.

“அதையெல்லாம் மேயரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்று சொல்லி விடைகொடுத்தார்கள்.

யோத்தியின் மேயர் பா.ஜ.க-வைச் சேர்ந்த ரிஷிகேஷ் உபாத்யா. அருகில் உள்ள ராமஜென்ம பூமி ந்யாஸுக்கு அவர் வருவதாக தகவல் கிடைத்தது. அங்கே சென்ற நமக்கு அதைத் தவிர வேறு சில ஆச்சர்யங்களும் காத்திருந்தன!

(களம் தொடரும்)