நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய நீதிபதிகளே பதவி காலத்தின்போதே தங்களது சுய முன்னேற்றப் பாதைக்கான திட்டத்தை வகுத்துக்கொள்வது வெட்கக்கேடு. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவர்களை அரசமைப்புச் சட்டத்தின் 80(3) பிரிவின்கீழ் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். முதலில் அப்படிப்பட்ட முடிவை குடியரசுத் தலைவர் தன்னிச்சையாக எடுக்க முடியாது. அரசமைப்புச் சட்டத்தின் 74-வது பிரிவின்கீழ் மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்றி அவரால் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட முடியாது.

பிரிவு 80(3)ன் கீழ் எத்தகைய நபர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க முடியும் என்பது கூறப்பட்டுள்ளது. இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூகப்பணி இவற்றில் சிறப்பு ஞானம் உள்ளவர்களையும் செயல்முறை அனுபவங்கள் உள்ளவர்களையும் குடியரசுத் தலைவரின் உத்தரவின்மூலம் நாடாளுமன்ற மேலவையின் நியமன உறுப்பினராக நியமிக்க முடியும். ஆனால், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் இதில் எந்த வகையறாவில் வருகிறார் என்று புரியவில்லை.

அவர் எந்தத் தகுதியின் அடிப்படையில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பதை ஆராய்வதைவிட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு வயதை எட்டியவுடனேயே அரசின் தயவில் அடுத்த பதவியை ஏற்றுக்கொள்ளலாமா, அது அவர்கள் வகுத்த நெறிமுறைகளை மீறுவது ஆகாதா என்ற கேள்வி எழுவது நியாயம்.

கோகோய் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை அங்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகராகச் செயல்பட்டவர். ஒருமுறை அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பதவியையும் வகித்திருக்கிறார். கோகோய் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறுவதை முன்னிட்டு அஸ்ஸாம் மண்ணின் மைந்தர் என்ற முறையில் கௌஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அவரை கௌரவித்து மரியாதை செய்ய முயன்றனர். அதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில், ஓய்வுபெற்றுத் திரும்பிவரும் கோகோய்க்கு இலவசமாக தனிச்செயலர், பணியாளர், கார், ஓட்டுநர் மற்றும் எரிபொருளுக்கான செலவுத்தொகை போன்றவற்றை அளிக்க விதிமுறைகளை உருவாக்கினர். ஆனால், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்தார் கோகோய். இது மக்களிடம் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், அதைவிடப் பெரிய சலுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார் என்று அப்போது தெரியவில்லை. நாடாளுமன்ற நியமன உறுப்பினர் பதவியை உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற ஐந்து மாதத்திற்குள் அவர் பெற்றுக்கொண்டது பற்றி, பல சட்ட நிபுணர்களும், ஓய்வுபெற்ற நீதிபதிகளும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ‘‘நான் பதவியை ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை வெளியிடுவேன்; நீதிமன்றமும் நாடாளுமன்றமும் ஒரு புள்ளியில் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்று தன் கருத்தை வெளியிட்டுள்ளார் கோகோய். அவர் சொல்லப்போகும் சமாதானம் எதுவாகஇருப்பினும், ஏற்கெனவே நீதிபதிகள் ஏற்றுக்கொண்ட நெறிமுறைகளுக்கு விரோதமாகத்தான் அவரது செயல் அமைந்துள்ளது.

1997-ம் வருடம் உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் அடங்கிய கூட்டத்தில், நீதி வாழ்வில் மீள் உரைக்கப்பட்ட விழுமியங்கள் உருவாக்கப்பட்டன. இவை சுயமாக நீதிபதிகளே தங்களுக்குள் விதித்துக்கொண்ட நெறிமுறைகளாகும். அந்த நெறிமுறைகளின் 16-வது விழுமியமாக ‘நீதிபதிகள் எப்பொழுதும் தாங்கள் மக்கள் பார்வையில் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை மறக்க லாகாது. அவர்கள் தங்களது கண்ணியத்துக்குக் குறைவான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 50-வது பிரிவில், ‘நீதித்துறை அரசிடமிருந்து முழுமையாகப் பிரிக்கப்பட்டுத் தனித்துவத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதிகள் பதவி காலத்தில் வழங்கும் தீர்ப்புகள், ஆளுங்கட்சிக்கும், அது நடத்தும் அரசுக்கும் சாதகமாக இருக்கும்பட்சத்தில், ஓய்வுபெற்றவுடன் புதிய அரசியல் பதவிகளைப் பெற்றுக்கொள்வதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அரசமைப்புச் சட்டத்தின் 124(7) பிரிவில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்டத் தொழிலை நடத்துவதற்கு இந்தியா முழுவதும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இதர பதவிகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பது இதற்குப் பொருளல்ல.

காங்கிரஸ் கட்சியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியிலும் இப்படி நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஓய்வுபெற்ற பிறகு நாடாளுமன்ற நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதை பா.ஜ.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு மாற்றாகப் புதிய விழுமியங்களை உருவாக்கப்போவதாகக் கூறியது பா.ஜ.க அரசு. ஆனால், இப்போது பா.ஜ.க-வும் அதே வழியைப் பின்பற்றி நடக்கிறது. இரண்டு தவறுகளை இணைப்பதன்மூலம் ஒரு நியாயத்தைக் கற்பிக்க முடியாது.

‘‘உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா, வழக்குகளை விசாரிக்கும் பட்டியலைத் தயார் செய்வதில் தவறாக நடக்கிறார்; குறிப்பிட்ட நீதிபதிகளின் அமர்வுகளுக்கு முக்கியமான வழக்குகளை விசாரிக்க உத்தரவிடுவதன்மூலம் வழக்குகளின் இறுதித்தன்மையையும் அவர் உருவாக்குகிறார்” என்று குற்றம்சாட்டிய நீதிபதி கோகோய், பத்திரிகை நிருபர் கூட்டத்தில் அதை பகிரங்கமாக வெளியிட்டார். கடந்த 70 ஆண்டுக் காலத்தில் பதவி வகிக்கும் நீதிபதிகள் நான்கு பேர் ஒன்றாகக் கூடி இப்படிக் குற்றம்சாட்டியது அதுவே முதல் நிகழ்வாகும்.

ஆனால், அதற்குப் பின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற கோகோயின் நிர்வாகத்தில் நிலைமை எவ்விதத்திலும் மாறவில்லை. வழக்குப் பட்டியல் தயாரிப்பதிலும், அதை விசாரிப்பதற்கான நீதிபதிகள் அமர்வுகளை நியமிப்பதிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க அவர் தயங்கவில்லை. அதற்குச் சரியான உதாரணம், பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமான வழக்கை விசாரித்த அமர்வில் தன்னையும் பொருத்திக்கொண்டதுடன், தான் ஓய்வுபெறுவதை முன்னிட்டு வழக்கையும் அவசரகதியில் விசாரித்தார். அதைவிட உச்சக்கட்டமாக, வழக்கில் தீர்ப்பு வருவதற்கு இரண்டு நாள் முன்பு, உத்தரப்பிரதேசத் தலைமைச் செயலாளரின் தலைமைக் காவல் அதிகாரியையும் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, தீர்ப்பையொட்டிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார். அந்தத் தீர்ப்பும் தீராத சர்ச்சையானது.

இதுவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி வகித்த எவர்மீதும் பாலியல் சீண்டல் புகார் அளிக்கப்பட்டதில்லை.

ஆனால், கோகோய்மீது அவரிடம் பணி செய்த ஊழியர் ஒருவர் கொடுத்த புகாரை, அவரே விசாரிக்க முற்பட்டார். விமர்சனங்கள் எழுந்தவுடன் அதை விசாரிப்பதற்குச் சிறப்பு அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்தார். தனக்கு எதிராக சர்வதேச சதிக் கூட்டமொன்று செயல்படுவதாகச் செய்தி வெளியிட்ட அவர், அது பற்றி விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக்கை நியமித்தார். அந்தக் குழு வெளியிட்ட அறிக்கை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை உருவாக்க உத்தரவிட்டதுடன், அந்தப் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பை உச்ச நீதிமன்றமே எடுத்துக்கொண்டது. தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளையெல்லாம் தள்ளுபடி செய்த கோகோய், பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அதை நியாயப்படுத்திக் கருத்துகளை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார். காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து உத்தரவை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகளை உடனடியாக விசாரிக்காமல் தாமதப்படுத்தினார்.

காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரின் மகள் மெஹ்பூபா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட போது அவரின் மகள் தன் தாயைச் சந்திப்பதற்காக ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மகளிடம், “ஸ்ரீநகரின் கடுங்குளிர் உன்னை பாதித்துவிடும். வெளியே செல்லாதே” என்று நீதிமன்றத்தில் கூறிய கோகோயின் தாயுள்ளத்தை என்னவென்று போற்றுவது? பதவிக்கு வருமுன்னால் புரட்சிகர வசனங்களைப் பேசிவிட்டு, பதவிக்கு வந்த பிறகு ஆளுங்கட்சியின் செயல்பாட்டுக்கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போடும் நீதிபதிகளை மனதில் வைத்துதான் பாரதி, ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ என்று பாடினான். நியாயவாதிகள் அநியாயத்துக்குத் துணைபோகும்போதெல்லாம் அவர்களை மக்கள் நம்ப மறுப்பதுடன், நீதித்துறையின்மீதான நம்பிக்கையையும் இழந்துவிடுகின்றனர்.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின். ( குறள் : 116 )

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணினால், அதுவே தான் கெடப்போவதற்கான அறிகுறி!