Published:Updated:

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது சரியா? பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரம், சில விளக்கங்கள்!

குண்டர் சட்டம் முழுக்க முழுக்கச் சட்டவியல் நுட்ப அடிப்படையில் (Technical grounds) ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மற்றபடி வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரம்
பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரம்

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க உறுப்பினர்களின் வாரிசுகள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளின் வாரிசுகள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் தொடர்புடைய பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்குற்ற விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். பொள்ளாச்சியில் 19 வயதுக் கல்லூரி மாணவி தன்னைப் பாலியல் ரீதியாகத் தாக்கவரும் நபரிடம் `என்ன விட்டுடுங்க அண்ணா’ என்று கெஞ்சிக் கூக்குரலிடும் காணொலி ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டது.

ஒட்டுமொத்தத் தமிழகமும் இதுகுறித்துக் கொந்தளித்த நிலையில் இந்தக் குற்றம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்றன. இதில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் தமிழகக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்கள். சிபிசிஐடி இந்த வழக்கைக் கையிலெடுத்து விசாரிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் சி.பி.ஐ.யும் தன் விசாரணையைத் தொடங்கியது. குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்போது இருவர் மீதான குண்டர் சட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளது உயர்நீதிமன்றம்.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன?  #DoubtOfCommonMan

குண்டர் சட்டம் ரத்து, எந்த அடிப்படையில்? 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அது தொடர்பான பல்வேறு தவறான செய்திகள் ஊடகப் பரப்பிலும் பொதுவெளியிலும் பரப்பப்பட்டு வருகின்றன. குண்டர் சட்டம் எந்த அடிப்படையில் ரத்து செய்யப்பட்டது? ரத்து செய்யப்படுவதால் இனி வழக்கு என்னவாகும் என்கிற பல்வேறு கேள்விகளை வழக்கறிஞர்கள் சிலரிடம் விசாரித்தோம்.

சிறுபிழை இருந்தால் கூட குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டது செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் சொல்வதற்கு உரிமை இருக்கிறது.

``குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதாலும் ஆதாரங்கள் வலுவாக இல்லை என்பதாலும் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக, தவறான தகவல்கள் பொள்ளாச்சி வழக்கில் பரப்பப்பட்டு வருகின்றன. குண்டர் சட்டம் முழுக்க முழுக்கச் சட்டவியல் நுட்ப அடிப்படையில் (Technical grounds) ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மற்றபடி வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

தற்போது உயர்நீதிமன்றம் தடுப்புக்காவல் (preventive detention) சட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. குண்டர் சட்டத்தைப் பொறுத்தவரை தொடர் குற்றம் செய்யும் குற்றவாளிகள் வெளியே விடப்பட்டால் குற்றங்களைத் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்னும் அடிப்படையில், குற்றப்பத்திரிகை, முதல் தகவல் அறிக்கை என எவ்வித அறிக்கையின் தேவையும் இல்லாமல் குற்றத்தின் தீவிரத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அல்லது கமிஷனரின் உத்தரவின் பேரில் ஒரு வருடம் சிறையில் வைக்கப்படுவார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ஒருவருடத்துக்கு மட்டுமே இந்தத் தடுப்புக்காவல் செல்லுபடியாகும். இதில் குற்றவாளிகள் இதுதொடர்பான வாரியத்திடம் மேல்முறையீடு செய்யலாம். எவ்வித புகார்களும் தேவையில்லாமல் பாயும் குண்டர் சட்டம், குற்றவாளிகளின் தனிமனித உரிமையைக் கேள்விக்குள்ளாக்குவது என்பதால் அந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைதுசெய்யப்படுவதற்கான ஆவணங்கள் அத்தனையும் நடைமுறைப்படி சரியானதாகவும் வலுவானதாகவும் இருக்கவேண்டும்.

உதாரணத்துக்குக் குற்றவாளியின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தால் உடனடியாக அது அவருக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அது தாமதமானால் கூட கைது செல்லாததாகிவிடும். சிறுபிழை இருந்தால் கூட குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டது செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் சொல்வதற்கு உரிமை இருக்கிறது.

குற்றவாளிகள் மீது இத்தனை பிரச்னைகள் இருக்கின்றன என்கிற விவரங்கள் அடங்கிய ஆவணம் ஆங்கிலத்தில் இருக்கும். அந்த ஆவண அறிக்கை குற்றவாளிகளுக்குத் தரப்படும். ஆவண அறிக்கை ஆங்கிலத்தில் இருக்கிறது தனக்குப் புரியவில்லை, அது தமிழில் மொழிபெயர்த்துத் தரப்பட வேண்டும் என்று குற்றவாளி கேட்டால் அது தமிழில் மொழிபெயர்த்துத் தரப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பில் தவறு இருந்தால் கூட சட்டம் செல்லுபடியாகாது. இதுபோன்ற குற்றங்களின் தீவிரம் உணர்ந்து விசாரணையை விரைந்து முடித்து தண்டனை வழங்குவது மட்டும்தான் இதற்குத் தீர்வே ஒழிய, இதுபோன்ற தடுப்புக்காவல் சட்டங்கள் மாற்று இல்லை” என்கிறார்கள்.

`பொள்ளாச்சி பாலியல் வழக்கிலும் அதே தவறு!' - குண்டர் சட்டத்திலிருந்து தப்பித்த திருநாவுக்கரசு, சபரி