Published:Updated:

எழுவர் விடுதலையில் சட்டச் சிக்கல் இல்லை!

- அரி பரந்தாமன்; ஓவியங்கள்: மேரி

பிரீமியம் ஸ்டோரி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் வாடுகிறார்கள். ஆனால், காந்தியைப் படுகொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே, விஷ்ணு கார்கரே, மதன்லால் போவா ஆகிய மூவரையும் பிரதமர் நேரு இறந்ததைப் பயன்படுத்தி, காங்கிரஸ் அரசு விடுதலை செய்தது. ராஜீவ் கொலையுண்ட வருடம் 1991. அதன்படி, 15 ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது 2006-க்கு முன்பாக எழுவரையும் மாநில அரசு விடுதலை செய்திருந்தால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விடுதலையை ரத்து செய்ய வாய்ப்புண்டு. அதனால், 2006–க்கு முன்பு ஆண்ட தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகளைக் குறை கூற விரும்பவில்லை.

2006-11-ல் தி.மு.க ஆட்சி; கருணாநிதி முதல்வர். எழுவரும் அப்போதே 16 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தனர். மத்தியில் ஆண்ட காங்கிரஸுக்கு எழுவரின் விடுதலை ஏற்புடையது இல்லை என்பதால், இவர்களை விடுதலை செய்ய தி.மு.க அரசு முனையவில்லை. மத்திய அரசில், தி.மு.க பங்குவகித்ததே அதற்குக் காரணம்.

எழுவர் விடுதலையில் சட்டச் சிக்கல் இல்லை!

2011-ல் முதல்வரான ஜெயலலிதா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலையொட்டி 2014, பிப்ரவரியில் எழுவரையும் விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார். அந்த முடிவு பாராட்டுதலுக்குரியதுதான். ஆனால், அவரின் நோக்கம் எழுவரின் விடுதலை என்பதைவிட, காங்கிரஸை எழுவர் விடுதலைக்கு எதிரானவர்கள் என்று அம்பலப்படுத்த வேண்டும் என்பதாகவே இருந்தது. அதனால்தான், அரசமைப்புச் சட்டப் பிரிவு 161, மாநிலங்களுக்கு வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யாமல், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் விடுதலையை அறிவித்தார் ஜெயலலிதா. உடனே மத்திய காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது. மாநில அரசின் அதிகாரம் பற்றிய முக்கிய வழக்காகக் கருதிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பியது. இதற்கிடையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. 2014, மே மாதம் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் போட்ட வழக்கை, மோடி அரசு இன்னும் மூர்க்கமாக நடத்தியது. எழுவரின் விடுதலையைக் கடுமையாக எதிர்த்தது.

‘சி.பி.ஐ விசாரணை செய்த வழக்கில் தண்டனை பெற்றவர்களை, மத்திய அரசின் ஒப்புதலின்றி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் மாநில அரசு விடுதலை செய்ய முடியாது’ என்று 2-12-2015-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதே தீர்ப்பில், ‘அரசமைப்புச் சட்டக்கூறு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின்கீழ் மாநில அரசு விடுதலை செய்தால், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை’ என்றும் வழிகாட்டியது. அப்போதும் ஜெயலலிதாதான் முதல்வர். ஆனால், அவர் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் விடுதலை செய்ய முன்வரவில்லை.

2016-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோதுகூட, நீதிமன்றம் வழிகாட்டியபடி அரசமைப்புச் சட்டத்தின்கீழ் விடுதலை செய்ய ஜெயலலிதா முன்வரவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு முதல்வரான பழனிசாமியின் அமைச்சரவை, 2018-ல் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் எழுவரையும் விடுதலை செய்ய முடிவெடுத்தது. இது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், அமைச்சரவை முடிவின்படி செயல்பட வேண்டிய ஆளுநர் புரோஹித், விடுதலைக்கான உத்தரவைப் போட மறுத்தார். ஆளுநருக்கு அழுத்தம் தர தமிழக அரசு தயாராக இல்லை. அவர்கள் பா.ஜ.க தயவில்தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

எழுவரில் ஒருவரான பேரறிவாளன், விடுதலை வேண்டி உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, ‘அமைச்சரவை முடிவின்படி எழுவரையும் விடுதலை செய்ய ஆளுநர் தவறினால், நாங்களே தலையிட்டு உத்தரவு போடுவோம்; அந்த நிலைமையை உருவாக்காமல் ஆளுநர் ஒரு வாரத்தில் செயல்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால், ‘தமிழ்நாடு அமைச்சரவை அரசமைப்புச் சட்டத்தின்கீழ் முடிவெடுத்தாலும், எழுவரின் விடுதலை பற்றி குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்கிறார் ஆளுநர். அரசமைப்புச் சட்டப்படி, குடியரசுத் தலைவரின் முடிவு என்பது, மத்திய அமைச்சரவையின் முடிவுதான். அரசமைப்புச் சட்டமே மாநில அரசுக்கு விடுதலை செய்வதற்கான இறையாண்மை அதிகாரத்தை அளித்தாலும், மத்திய அரசுதான் விடுதலை பற்றி முடிவெடுக்கும் என அடாவடியாகச் சொல்கிறார் ஆளுநர்.

சென்ற ஆண்டு, குரு நானக்கின் 550-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை பெற்ற காலிஸ்தான் போராளிகளை விடுதலை செய்தது பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசு. அதற்கு உறுதுணையாக இருந்தது மத்திய பா.ஜ.க அரசு. 1999-ல் எழுவருக்கு தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமையேற்ற நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் சமீபத்தில் மறைந்த இந்த வழக்கைப் புலனாய்வு செய்த தலைமை அதிகாரி ரகோத்தமன், மற்றொரு புலனாய்வு அதிகாரி தியாகராஜன் ஆகியோர் ‘புலனாய்வில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எழுவரையும் விடுதலை செய்யலாம்’ என்று ஊடகங்களில் கூறியதும், எழுவரையும் விடுதலை செயவதற்கான தகுந்த காரணிகளாகும்.

இது போன்ற எந்தக் காரணியும் இல்லாத நிலையிலும்கூட, காந்தியைக் கொலை செய்த வழக்கில் மேலே கூறியபடி 16 ஆண்டுகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். எனவே, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் தி.மு.க அரசு, எழுவர் விடுதலை தொடர்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எழுவரையும் விரைந்து விடுதலை செய்ய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு