‘மதுக்கடைகளால் தமிழ்ச் சமூகம் எந்தளவுக்குச் சீரழிகிறது என்பது கண்கூடாகத் தெரிந்தும், ஈவு இரக்கமின்றி இலக்கு நிர்ணயித்து மது விற்பனையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது தமிழக அரசு. இதைத் தடுக்க வழியே இல்லையா? என்று தமிழகப் பெண்கள் தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில், மதுக்கடைகளுக்கு பஞ்சாயத்து அளவிலேயே முடிவுகட்ட ஏதுவாக சமீபத்தில் சாட்டையைச் சுழற்றியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

‘கிராம ஊராட்சிகளுக்கு மதுக்கடைகளை மூடும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்’ எனத் தொடரப்பட்டிருந்த பொதுநல வழக்கு, ஜனவரி 21-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி, நீதிபதிகள் கார்த்திகேயன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘மது அருந்துவது தனிமனித சுதந்திரம் என்றாலும், மக்களின் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டிய அரசாங்கமே இங்கே மது விற்பனையில் ஈடுபடுகிறது. சமூகநலன் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். ‘தங்கள் பகுதியில் மதுபானக்கடைகள் வேண்டுமா... வேண்டாமா, மதுபானக்கடை எந்த இடத்தில் அமைய வேண்டும்’ என்பது குறித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால், அதைச் செயல்படுத்தும்விதமாக தமிழ்நாடு சில்லறை மது விற்பனை விதியில் திருத்தம் கொண்டுவந்தால் என்ன?’’ என்று அதிரடியாக கேள்வி எழுப்பியதுடன், “இது தொடா்பாக ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி இந்த வழக்கை பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

கிராம சபைகளை வலுப்படுத்துவதற்காகக் களப்பணியாற்றுபவர்கள் மத்தியில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. ``வரும் ஜனவரி 26-ம் தேதி நடைபெற இருக்கும் கிராமசபைக் கூட்டத்தில் `எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட எல்லைக்குள் மதுபானக்கடைகள் அமைக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராமப் பஞ்சாயத்துக்கும் கிராம சபைக்கும் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். அதன் நகலை எங்களுக்கு அனுப்பிவையுங்கள். சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கு நீதிமன்றம் வழியாகப் போராடுவோம்’’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார்.

இந்த வழக்கில் பா.ம.க சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். ‘‘மதுபானக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, அதைச் செய்யாமல் இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்கிறது. பொங்கல் பண்டிகையின்போது மூன்று நாள்களில் மட்டும் சுமார் 605 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்துள்ளது. 80 சதவிகிதத்துக்கும் அதிகமான பார்கள் சட்டவிரோதமாகத்தான் செயல்படுகின்றன. இவற்றையெல்லாம் தமிழக மக்களால் தடுக்க முடியவில்லை.

ஆனால், மகாராஷ்டிரத்தில் நிலைமை இப்படியல்ல. ‘1949-ம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்குச் சட்டத்தின்படி, மது விற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு உள்ள ஒரு நகரிலோ கிராமத்திலோ, மதுக்கடைகள் தேவையில்லை என்று அங்கு உள்ள பெண்களில் 25 சதவிகிதம் பேர் மனு அளித்தால் போதும்... உடனடியாக கிராம சபைக் கூட்டம் கூட்டப்படும். அதில் பங்கேற்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தாலே, அங்கு உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுவிடும். அப்படி மூடப்படும் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முடியாது. இதுபோன்ற நிலையை தமிழகத்தில் ஏன் ஏற்படுத்தக் கூடாது?’ என்று நீதிபதிகளிடம் வாதிட்டேன். அதையடுத்துதான், ‘பஞ்சாயத்துகளுக்கு ஏன் அந்த அதிகாரத்தை வழங்கக் கூடாது?’ என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பஞ்சாயத்துகளுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கினால், நிச்சயம் மதுபானக் கடைகளை ஒழித்துவிடலாம்’’ என்றார்.

இதுகுறித்து உள்ளாட்சி கருத்தாக்க ஆய்வாளரான க.பழனித்துரையிடம் பேசினோம். ‘‘இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், நாம் டாஸ்மாக் சட்டத்திலிருந்து பஞ்சாயத்துகளின் அதிகாரத்தைப் பரிசோதிக்கக் கூடாது. பஞ்சாயத்தின் அதிகாரத்திலிருந்துதான் டாஸ்மாக்கைப் பார்க்க வேண்டும். புரியும்படி சொல்ல வேண்டுமானால், ஒரு பஞ்சாயத்து தன் எல்லைக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றவும் மேம்படுத்தவும் சமூகநீதி வழங்குவதற்குமான அதிகாரங்களைப் பெற்றிருக்கிறது. டாஸ்மாக்கால் என்னென்ன இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன, எவ்வளவு குடும்பங்கள் சிதைந்திருக்கின்றன என்பதை முழுமையாக ஆய்வுசெய்து ஆழமான தரவுகளுடன் பட்டியலிட வேண்டும். அதை வைத்துக்கொண்டு, ‘இதனால் எங்கள் பஞ்சாயத்துக்கான வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த முடியவில்லை. மக்களின் ஆரோக்கியத்தைப் பேண முடியவில்லை’ என்று அழுத்தமான வாதங்களை முன்வைத்தாலே போதுமானது.

பஞ்சாயத்துக்கு இப்போதுள்ள அதிகாரங்களை வைத்தே டாஸ்மாக்கை எளிதாக விரட்டியடிக்க முடியும். ஆனால், நாம் அதைச் செய்யாமல் டாஸ்மாக் சட்டத்துடன் வலுவில்லாத வாதங்களை முன்வைத்து தோற்றுக்கொண்டிருக்கிறோம். இருக்கும் அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற தெளிவு இல்லாத சூழலில், புதிதாக ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் மட்டும் பிரச்னைகள் சரியாகிவிடாது. இருக்கும் அதிகாரங்கள் குறித்து முதலில் நாம் தெளிவுபெற வேண்டும். அதுவே வளர்ச்சிக்கான முதல் படி. அதே வேளையில் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையும் வரவேற்கத்தக்கதே’’ என்றார்.

பஞ்சாயத்துக்குள்ள அதிகாரங்களை வைத்து பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய குத்தம்பாக்கம் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவரான இளங்கோவிடம் பேசினோம்.

ஜனவரி 26-ம் தேதி நடைபெற இருக்கிற கிராமசபைக் கூட்டத்தில் ‘எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட எல்லைக்குள் மதுபானக் கடைகள் அமைக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராமப் பஞ்சாயத்துக்கும் கிராம சபைக்கும் வழங்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்!

‘‘பஞ்சாயத்துகள் சுயசார்புடைய அமைப்பாக இயங்க வேண்டும் என்று அரசியல் சாசனச் சட்டம் சொல்கிறது. ஆனால், இங்கே அப்படியான நிலை இல்லை. நீதிமன்றம் சொல்லியிருப்பதுபோல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டால், அதன்மூலம் மதுக்கடைகளை ஒழித்துவிட முடியும். அதுமட்டுமல்ல, கிராம சபைகளுக்கு இருக்கும் அதிகாரங்கள்குறித்து பெரியளவில் விழிப்புணர்வு ஏற்படும். தங்களுக்குள்ள அதிகாரங்களை, கிராம சபையும் பஞ்சாயத்து நிர்வாகங்களும் பொதுமக்களும் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும். தமிழக அரசு இதைச் செய்தால் நம் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. பஞ்சாயத்துகளுக்கு இருக்கும் அதிகாரங்கள்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தனிச்சட்டங்கள் மூலம் அதன் கரத்தை வலுப்படுத்துவதும் இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான நடவடிக்கை’’ என்றார்.

உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கு, மதுக்கடைகளை ஒழிப்பதற்கான முதல் படியாக இருக்கட்டும்.