Published:Updated:

வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்து! - மேல் முறையீடு செல்லும் தி.மு.க., பா.ம.க

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது’ என்று வாதிடப்பட்டது.

பிரீமியம் ஸ்டோரி

வன்னியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்துசெய்து தீர்ப்பளித்திருப்பது பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பா.ம.க தரப்பிலும், அரசுத் தரப்பிலும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குச் சற்று நேரம் முன்பாக, 20 சதவிகித எம்.பி.சி கோட்டாவில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றினார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதலும் கொடுத்துவிட்டார்.

தி.மு.க அரசு அமைந்ததும், அந்தச் சட்டத்தை அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கிடையே வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. தினசரி வழக்குகளை விசாரிப்பதற்காக மதுரை கிளைக்கு வழக்குகள் மாற்றப்பட்டு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் வாதங்களைக் கேட்டுவந்தார்கள்.

வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்து! - மேல் முறையீடு செல்லும் தி.மு.க., பா.ம.க

விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில், ‘சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்தச் சட்டம் இயற்றப்பட்டது? எம்.பி.சி பிரிவினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக்கொண்ட சீர்மரபினர் பிரிவினருக்கு 7 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் எம்.பி.சி பிரிவிலுள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். அரசியல் லாபத்துக்காகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பிலோ, ‘தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது’ என்று வாதிடப்பட்டது. பா.ம.க தரப்பில், ‘தேர்தலில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாகக் கூறுவது தவறு. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டிருப்பதன் மூலம், இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது’ என்று வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை, சட்டத்துக்கு விரோதமானது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், இட ஒதுக்கீடு கொடுத்தது தவறு’ என்று கூறி, வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்த அரசாணையை ரத்துசெய்து உத்தரவிட்டனர். இதையடுத்து பரபரப்பு பற்றிக்கொள்ளவே... அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார் முதல்வர் ஸ்டாலின்.

வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்து! - மேல் முறையீடு செல்லும் தி.மு.க., பா.ம.க

தீர்ப்பு குறித்து பா.ம.க வழக்கறிஞர் பாலுவிடம் பேசியபோது, ‘‘தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பில் கண்டிப்பாக மேல்முறையீடு செய்தாக வேண்டும். நாங்களும் பா.ம.க சார்பில் உச்ச நீதிமன்றம் செல்லவிருக்கிறோம். இப்போதைக்கு இதை மட்டுமே சொல்ல முடியும்’’ என்றார்.

தி.மு.க மீது குற்றம்சாட்டும் வன்னியர் சத்திரியர் கூட்டியக்கத் தலைவர் சி.ஆர்.ராஜன் நம்மிடம், “தி.மு.க-வால் நேரடியாக ரத்துசெய்ய முடியாது என்பதால், மறைமுகமாக நீதிமன்றம் மூலம் ரத்துசெய்துவிட்டார்கள். அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் சரியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காததே அரசாணை ரத்தாகக் காரணம். அம்பாசங்கர் கமிஷன் பரிந்துரைப்படியே உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இது தவறு என்றால், 69 சதவிகித இட ஒதுக்கீடே தவறுதான். கண்டிப்பாக மேல்முறையீட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குகளைத் தாக்கல் செய்த சீர்மரபினர் நலச்சங்கத்தின் அமைப்புச் செயலாளர் காசிநாதன் நம்மிடம், ‘‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் உள் இட ஒதுக்கீடு வழங்கியது தவறு. அம்பாசங்கர் கமிஷன் அறிக்கையின்படியே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக அரசு சொல்கிறது. ஆனால், அம்பாசங்கர் கமிஷனின் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாக அதில் இடம்பெற்ற 14 உறுப்பினர்களுமே எதிர்ப்பு தெரிவித்தனர். இதைவிடுத்து தலைவர் அறிக்கையை மட்டுமே அரசு எடுத்துக்கொண்டதும் தவறு. தவிர, வன்னியர் சமூகம்தான் பெரும்பான்மை என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்ற இனங்களையும் இணைத்து இனக்கூட்டு முறையில்தான் பெரும்பான்மையைக் காட்டுகிறார்கள். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய அரசு, சீர்மரபினர் கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியதை இதுவரை செய்யவில்லை’’ என்றார்.

பாலு, சி.ஆர்.ராஜன், காசிநாதன், எஸ்.எஸ்.சிவசங்கரன்
பாலு, சி.ஆர்.ராஜன், காசிநாதன், எஸ்.எஸ்.சிவசங்கரன்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் நம்மிடம், ‘‘தீர்ப்பு குறித்த முழு விவரமும் வந்த பிறகு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும். தற்போது இரண்டு நபர் அமர்வு தீர்ப்பு கொடுத்திருப்பதால் அடுத்து எப்படி, எங்கு மேல்முறையீடு செய்வது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய அ.தி.மு.க தரப்பில் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம்... “இது தொடர்பாகப் பேசுவதற்குத் தலைமை தடைவிதித்துள்ளது. விரைவில் கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை நடத்துவார்கள். அதன் பிறகு கட்சியின் அதிகாரபூர்வக் கருத்துகளைத் தெரிவிக்கிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு